தமிழ் அட்டை யின் அர்த்தம்

அட்டை

பெயர்ச்சொல்

 • 1

  வார இதழ், புத்தகம் முதலியவற்றின் (படத்தை அல்லது தலைப்பைத் தாங்கிய) முன்பக்க, பின்பக்கத் தாள்.

  ‘வார இதழ்களின் அட்டைகளில் எப்போதும் நடிகைகள் படம்தான்!’

 • 2

  புத்தகம் முதலியவற்றைப் பாதுகாக்க அதன் மேல் போடப்படும் (பழுப்பு நிற) தாள்.

  ‘பாடப் புத்தகங்களுக்கு அட்டை போட்டு முடித்தான்’

 • 3

  (எழுதும்போது காகிதங்களை வைத்துக்கொள்ளப் பயன்படும்) அளவில் பெரிய கெட்டித் தாள்.

  ‘கையில் அட்டையோடு சிறுவர்கள் தேர்வு நடக்கும் அறைக்குப் போனார்கள்’

 • 4

  ஊர்வலம் முதலியவற்றில் கையில் எடுத்துச் செல்லும் ஏதேனும் செய்தி எழுதிய, சற்றுத் தடித்த துண்டுத்தாள்.

  ‘மதுவிலக்குப் பிரச்சார அட்டைகளை ஏந்தி ஊர்வலம் சென்றனர்’
  ‘திரைப்பட விளம்பர அட்டைகள்’

 • 5

  (மாத்திரைகள் பாதுகாப்பாகப் பொதிந்திருக்கும்) கனத்த பிளாஸ்டிக் தாள்.

  ‘ஒவ்வொரு அட்டையிலும் 30 மாத்திரைகள் உள்ளன’
  ‘மாத்திரைகளின் விவரங்களை அட்டைகளில் தமிழில் அச்சிட வேண்டும் என்று அவர் கோரினார்’

 • 6

  (விவரங்கள்) அச்சிடப்பட்ட தடித்த துண்டுத் தாள்.

  ‘பத்திரிகை நிருபர் என்று கூறி அட்டையைக் கொடுத்தார்’
  ‘ஓட்டல் மேஜைமேல் இருந்த அட்டையை உன்னிப்பாகப் படிக்க ஆரம்பித்தார்’

 • 7

  பெட்டிகள் செய்யப் பயன்படும் கெட்டியான தாள்.

  ‘அட்டைப் பெட்டி’
  ‘விநாயகர் உருவம் வரைந்த அட்டை’

தமிழ் அட்டை யின் அர்த்தம்

அட்டை

பெயர்ச்சொல்

 • 1

  மனிதர்கள், விலங்குகள்மீது ஒட்டிக்கொண்டு இரத்தத்தை உறிஞ்சும், ஈர நிலத்தில் வாழும் ஒரு சிறிய கரும்பழுப்பு நிற உயிரினம்.

  உரு வழக்கு ‘மக்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் அட்டைகளாகப் பலர் இருக்கிறார்கள்’