அடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அடி1அடி2அடி3அடி4அடி5அடி6அடி7

அடி1

வினைச்சொல்அடிக்க, அடித்து

 • 1

  (அறைதல் அல்லது அறைபடுதல் என்னும் முறையில் உள்ள வழக்கு)

  1. 1.1 கையால் அல்லது கம்பு முதலியவற்றால் அறைதல்; ஒன்றை மற்றொன்றின் மீது பலத்துடன் அறைதல்

   ‘குழந்தையைக் கையாலும் அடிக்கக்கூடாது, கம்பாலும் அடிக்கக்கூடாது’
   ‘புடவையைக் கல் மீது அடித்துத் துவைத்தாள்’
   ‘தங்கத்தைக் காய்ச்சி அடித்துத் தகடாக்கினார்’
   ‘அந்தக் கொடுமையான பேச்சு நெஞ்சில் சம்மட்டிகொண்டு அடிப்பது போலிருந்தது’

  2. 1.2 (அறைந்து) தாக்குதல் அல்லது கொல்லுதல்

   ‘காட்டில் ஆடு மேய்க்கப் போனவனைப் புலி அடித்துவிட்டது’
   ‘நேற்று வீட்டில் ஒரு பாம்பை அடித்தோம்’
   ‘கோழி அடித்து விருந்து வைத்தார்கள்’

  3. 1.3 (இலக்கில்) படும்படி எறிதல்

   ‘சிறுவர்கள் கல்லால் மாங்காய் அடித்தார்கள்’

  4. 1.4 (ஆணி முதலியவற்றை) உட்செலுத்துவதற்கு அறைதல்

   ‘மாட்டுக் குளம்பில் ஆணி அடித்து லாடம் கட்டினார்கள்’
   ‘வீட்டில் கொசுக்கள் நுழையாமல் இருப்பதற்காக ஜன்னல்களில் வலை அடித்திருந்தோம்’

  5. 1.5 தட்டி ஒலி எழுப்புதல்

   ‘கோவில் மணியை அவன் கணகணவென்று அடித்தான்’

  6. 1.6 (மணி, கடிகாரம்) ஒலித்தல்

   ‘கடிகாரம் பத்து முறை அடித்துவிட்டு ஓய்ந்தது’

  7. 1.7 (சிறகை) ஓசையுடன் அசைத்தல்

   ‘பறவை சிறகை அடித்துப் பறந்தது’

  8. 1.8 பதியும்படி அழுத்துதல்

   ‘அஞ்சல் தலையில் முத்திரை அடித்தார்’

  9. 1.9 (கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில்) பந்தை மட்டையால் தட்டுதல்/(தட்டுவதன் மூலம் புள்ளிகள் அல்லது ஓட்டங்கள்) பெறுதல்

   ‘இந்திய அணி வீரர் அடித்த பந்து எல்லைக் கோட்டை அடைந்தது’
   ‘அவர் அடித்துள்ள ஐந்தாவது சதம் இது’
   ‘முக்கியமான கட்டத்தில் அவர் அடித்த பந்து வலையில் மோதியதால் புள்ளியை இழந்தார்’

 • 2

  (ஒன்றின் இயக்கம் அல்லது விளைவு குறித்த வழக்கு)

  1. 2.1 (வெயில், குளிர் முதலியன பலமாக) உறைத்தல்

   ‘முகத்தில் சுரீரென்று வெயில் அடித்தது’

  2. 2.2 (காற்று, மணம் பலமாக) வீசுதல்

   ‘மணிக்கு எண்பது மைல் வேகத்தில் புயல் அடித்தது’
   ‘சாக்கடை நாற்றம் பயங்கரமாக அடித்தது’

  3. 2.3 (அலை) மோதுதல்

   ‘கரையில் அலை அடிக்கிறது’

  4. 2.4 (மழை வலுவாக) பெய்தல்

   ‘கோடை மழை திடீரென்று பிடித்து அடித்து ஓய்ந்தது’
   ‘சாரல் அடிக்கிறது’

  5. 2.5 (இதயம்) துடித்தல்

  6. 2.6 ஓசையுடன் அசைதல்

   ‘காற்றில் கொடி படபடவென்று அடித்துக்கொண்டது’

 • 3

  (ஒன்றைச் செய்வதில் அழுத்துவது, அமுக்குவது போன்றவற்றை உள்ளடக்கிய வழக்கு)

  1. 3.1 (ஒன்றை இயக்குவதன்மூலம்) உட்செலுத்துதல் அல்லது வெளியேற்றுதல்

   ‘கால்பந்துக்குக் காற்று அடிக்க வேண்டும்’
   ‘குழாயில் ஒரு வாளி தண்ணீர் அடித்து வை’

  2. 3.2 (ஒன்றை) கலக்குதல்

   ‘இரண்டு முட்டையை அடித்து மாவில் ஊற்றிப் பிசை’

  3. 3.3 அச்சிடுதல்

   ‘கல்யாணப் பத்திரிகை அடித்தாகிவிட்டது’
   ‘கள்ள நோட்டு அடித்தவர் கைது’

  4. 3.4 (கூடாரம்) ஏற்படுத்துதல்

   ‘தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூடாரம் அடித்துத் தங்கினார்கள்’

  5. 3.5 (பை முதலியன) தைத்தல்

   ‘இந்தத் துணியில் இரண்டு பை அடித்துக் கொடு’
   ‘கால்சட்டையின் ஓரம் பிரிந்திருக்கிறது, அதை அடித்துக் கொடு’

  6. 3.6 (சுண்ணாம்பு, வண்ணக் கலவை) பூசுதல்

   ‘சுவருக்குச் சுண்ணாம்பு அடிக்கிறான்’
   ‘மாட்டுக் கொம்புக்கு வர்ணம் அடிக்க வேண்டும்’

  7. 3.7 (விளக்கை) ஒளிரச்செய்தல்

   ‘அப்படியே நிற்கிறாயே! பாம்பு இருக்கிறதா என்று விளக்கை அடித்துப் பார்’
   ‘கைவிளக்கை அடித்துப் பார்த்தபோது அங்கே மூன்று பேர் நிற்பது தெரிந்தது’

 • 4

  (மரபு வழக்கு)

  1. 4.1 (கஞ்சா அல்லது சாராய வகை) உட்கொள்ளுதல்

   ‘கஞ்சா அடித்தவனின் கண்கள் சிவந்திருந்தன’

  2. 4.2 (காய்ச்சல்) ஏற்படுதல்; காணுதல்

   ‘குழந்தைக்கு இரண்டு நாட்களாகக் காய்ச்சல் அடிக்கிறது’

  3. 4.3 (அதிர்ஷ்டம், யோகம்) வாய்த்தல்; ஏற்படுதல்

   ‘அவனுக்கும் ஒரு முறை அதிர்ஷ்டம் அடித்தது’

  4. 4.4 (பட்டியல், நூல் முதலியவற்றிலிருந்து பெயர், சொல் முதலியவற்றை) நீக்குதல்

   ‘பணம் செலுத்தாததால் பதிவேட்டிலிருந்து அவன் பெயரை அடித்துவிட்டார்கள்’

  5. 4.5 பறித்துச் செல்லுதல்; திருடுதல்

   ‘கூட்டத்தில் என் பையிலிருந்த பேனாவை யாரோ அடித்து விட்டார்கள்’

  6. 4.6 (வண்டியில் ஏற்றி) கொண்டு வருதல்; (கொண்டுவந்து) கொட்டுதல்

   ‘நாளை ஒரு வண்டி மணல் அடித்துவிடு!’
   ‘முதலில் மணல் அடித்துவிட்டுக் கப்பி அடியுங்கள்!’

  7. 4.7 (ஒன்றை அல்லது ஒருவரைக் குறிப்பிடப்படும் நிலையில் இருக்கும்படி) ஆக்குதல்

   ‘அவளுடைய அழகு அவனைப் பைத்தியமாக அடித்துவிடும் போலிருந்தது’
   ‘அவர் தூங்கிவிட்டதால் என் பதிலுக்கு அவசியம் இல்லாமல் அடித்துவிட்டார்’
   ‘பழைய கடிகாரம் என்றாலும் ஓடிக்கொண்டிருக்கிறது. பழுது பார்க்கிறேன் என்று சொல்லி நன்றாக இருப்பதையும் இல்லாமல் அடித்துவிடாதே!’

  8. 4.8 (பூச்சிமருந்து, எரு போன்றவற்றை) தூவுதல்; போடுதல்

   ‘எங்கள் ஊருக்கு அமைச்சர் வரவிருப்பதால் சாலையோரங்களில் மருந்தடித்தார்கள்’
   ‘வயலுக்கு இன்று எரு அடிக்க வேண்டுமென்று சொன்னேனே என்ன ஆயிற்று?’
   ‘வயலுக்குப் பூச்சிமருந்து அடிப்பது மண்ணைப் பாதிப்புக்கு உள்ளாக்கிவிடும்’

  9. 4.9 (தட்டச்சில் அல்லது கணிப்பொறியின் விசைப்பலகையில் எழுத்துகளையும் எண்களையும் விரலால்) தட்டிப் பதிவுசெய்தல்

   ‘தட்டச்சில் நான்கு பக்கங்கள் அடித்துவிட்டு அப்புறம் சாப்பிட்டேன்’
   ‘கணிப்பொறியில் ஆறு பக்கம் மட்டுமே அடித்திருந்த நிலையில் மின்சாரம் தடைப்பட்டது’

  10. 4.10 (குறிப்பிடப்படுவதைக் கொண்டு) காரியத்தைச் சாதித்தல்

   ‘எல்லோரையும் பணத்தால் அடித்துவிட்டு வழக்கைத் தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொண்டான்’
   ‘‘அவனை என் பேச்சால் அடிக்கிறேன் பார்’ என்று சவால் விட்டான்’

அடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அடி1அடி2அடி3அடி4அடி5அடி6அடி7

அடி2

வினைச்சொல்அடிக்க, அடித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (மரத்தைத் துண்டுதுண்டாகவோ சட்டமாகவோ) அறுத்தல்.

  ‘பனையில் வளை அடித்துத் தரச் சொல்லியிருக்கிறேன்’

அடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அடி1அடி2அடி3அடி4அடி5அடி6அடி7

அடி3

துணை வினைஅடிக்க, அடித்து

 • 1

  ‘செய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின், ஓர் ஆக்க வினை.

  ‘அவர் பல கேள்விகள் கேட்டு என்னைத் திணற அடித்தார்’
  ‘குழந்தையின் மழலை துன்பத்தை மறக்க அடித்தது’
  ‘மனத்தைக் கலங்க அடிக்காதே!’

 • 2

  சில பெயர்ச்சொற்களோடும் சில வகை ஒலிக்குறிப்புச் சொற்களோடும் இணைக்கப்பட்டு அவற்றை வினையாக்கும் வினை.

  ‘குட்டிக்கரணமடி’
  ‘கொட்டமடி’
  ‘வீணடி’
  ‘டாலடி’
  ‘கிண்டலடி’
  ‘சவடாலடி’

 • 3

  முதன்மை வினையின் செயல் கடுமை அடைந்தது அல்லது தீவிரப்பட்டது என்பதைக் குறிப்பிட இணைக்கப்படும் ஒரு துணை வினை.

  ‘தோட்டத்துக்குள் புகுந்த மாட்டை விரட்டியடித்தான்’
  ‘பயம் அவனை அங்கு நிற்கவிடாமல் துரத்தியடித்தது’
  ‘தூக்கம் கண்ணைச் சுழற்றியடிக்கிறது’

அடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அடி1அடி2அடி3அடி4அடி5அடி6அடி7

அடி4

பெயர்ச்சொல்

 • 1

  (கையால் அல்லது கம்பு முதலியவற்றால் விழும்) அறை.

  ‘பிரம்படி தாங்க முடியாமல் துடித்தான்’
  ‘அப்பாவிடம் நீ அடி வாங்கப்போகிறாய்’

 • 2

  (ஏதேனும் ஒன்றால் தாக்கப்பட்டதால் அல்லது ஒன்றின் மீது மோதியதால் ஏற்பட்ட) காயம்.

  ‘தலையில் பலத்த அடி; இரத்தம் வழிந்தது’
  உரு வழக்கு ‘வாழ்க்கையில் நான் வாங்கிய அடிகள் பல’

 • 3

  இழப்பு, நஷ்டம்.

  ‘அவருக்கு வியாபாரத்தில் பலத்த அடி’

அடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அடி1அடி2அடி3அடி4அடி5அடி6அடி7

அடி5

பெயர்ச்சொல்

 • 1

  காலின் கீழ்ப்பகுதி; பாதம்.

  ‘சிவனின் அடியையும் முடியையும் தேடிக் காணச் சென்ற கதை’
  ‘அந்த மகானின் அடி வணங்கி ஆசி பெற்றார்கள்’

 • 2

  நடப்பதற்காகக் காலை முன்வைத்தல்; (ஒரு) எட்டு.

  ‘கால் வீக்கத்தால் நான்கு அடி நடப்பதற்குள் கால் வலிக்கிறது’

 • 3

  பன்னிரண்டு அங்குலம் கொண்ட ஒரு நீட்டலளவு.

  ‘அவர் உயரம் சரியாக ஆறடி’

 • 4

  (நீர்நிலையின்) கீழ்த்தரை; (பெட்டி போன்ற பொருளின்) உட்புறத்தின் கீழ்ப்பகுதி அல்லது வெளிப்பகுதியின் கீழ்ப்பகுதி.

  ‘கடலின் அடியில் தாவரங்கள் இருக்கின்றன’
  ‘பெட்டியின் அடியில் பாச்சை உருண்டைகளைப் போடு’
  ‘மேஜையின் அடியில் நாய் படுத்திருந்தது’

 • 5

  (நீளம் உடைய பொருளில் அல்லது ஓர் அடுக்கில்) கீழ்ப்பகுதி.

  ‘கடிதத்தின் அடியில் கையெழுத்திட்டான்’
  ‘அலமாரியின் அடித்தட்டில் இதை வை’
  ‘அடிக்கரும்பு இனிக்கும்’

 • 6

  (மரம் முதலியவற்றின்) வேர்ப் பகுதி.

  ‘புயல் மரத்தை அடியோடு சாய்த்துவிட்டது’

 • 7

  ஒரு பொருளை அல்லது கட்டடத்தைச் சுற்றி உள்ள பகுதி.

  ‘கிணற்றடி’
  ‘மரத்தடி’
  ‘தேரடி’
  ‘குழாயடி’
  ‘கோயிலடி’

 • 8

  (பாத) சுவடு.

  ‘நடந்துபோன அடி மறைவதற்குள் வந்து சேர்ந்துவிட்டான்’
  ‘மண்ணில் பதிந்திருக்கும் அடியைப் பார்த்தால் கரடியுடையதுபோல் இருக்கிறது’

அடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அடி1அடி2அடி3அடி4அடி5அடி6அடி7

அடி6

பெயர்ச்சொல்

 • 1

  செய்யுளின் வரி.

  ‘நான்கடி வெண்பா’

அடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அடி1அடி2அடி3அடி4அடி5அடி6அடி7

அடி7

இடைச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு வயதில் இளைய பெண்ணை அல்லது உரிமையைக் காட்டக் கூடிய உறவில் உள்ள பெண்ணை அழைக்கவோ மரியாதைக் குறைவாக ஒரு பெண்ணை அழைக்கவோ பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘அடிப் போக்கிரிப் பெண்ணே!’
  ‘அடி தங்கம், இங்கே வா’