தமிழ் அறிமுகம் யின் அர்த்தம்

அறிமுகம்

பெயர்ச்சொல்

 • 1

  ஒருவரை மற்றொருவர் அறிந்திருக்கும் நிலை; பரிச்சயம்.

  ‘பிரபல எழுத்தாளரின் அறிமுகம் கிடைத்ததில் அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி’
  ‘அறிமுகம் இல்லாதவரிடம் போய் எப்படி உதவி கேட்பது என்று தயங்கினான்’
  ‘அவர் பணிபுரிந்த பத்திரிகையின் வாயிலாகப் பல எழுத்தாளர்களின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது’

 • 2

  ஒரு நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்கள் இன்னார் என்று அவையோருக்கு அல்லது வானொலி, தொலைக்காட்சி நேயர்களுக்குத் தெரிவிப்பது.

  ‘பள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராக வர இருப்பவரைக் குறித்த அறிமுகம் நன்றாக அமைந்துவிட்டது’

 • 3

  (ஒருவர் அல்லது ஒன்று ஒரு துறையிலோ மக்கள் இடையேயோ) முதல்முறையாகத் தெரியவருதல்.

  ‘திரை உலகுக்கு என் தந்தை எடுத்த படத்தின் மூலம்தான் அறிமுகமானேன்’
  ‘இந்தியாவில் ஏராளமான வீரிய ரகப் பருத்தி இனங்கள் அறிமுகமாகிவருகின்றன’
  ‘நம் நாட்டில் காப்பி அறிமுகமானது பதினேழாம் நூற்றாண்டில்தான்’
  ‘தொலைக்காட்சி எங்கள் ஊருக்கு மிகவும் தாமதமாகத்தான் அறிமுகமாயிற்று’

 • 4

  (ஒருவர் ஒரு துறையைப் பற்றி) முதன்முதலாகத் தெரிந்துகொள்ளும் நிலை.

  ‘சுதந்திரப் போராட்டத்தில் என் தாத்தா ஈடுபட்டதால் காந்தியத்துக்கு நான் சிறுவயதிலேயே அறிமுகமானேன்’

 • 5

  (ஒரு துறையில் புதிதாக வந்திருப்பவரை அல்லது வந்திருப்பதை) பலர் அறியச்செய்யும் செயல்.

  ‘எழுத்தாளர் அறிமுகங்கள் எங்கள் அலைவரிசையின் சிறப்பான அம்சம்’
  ‘புதிய நூல்கள் அறிமுகத்திற்கென்று பத்திரிகைகள் இடம் ஒதுக்க வேண்டும்’

 • 6

  (ஒரு துறையின் அடிப்படைத் தகவல்களை) தெரிந்துவைத்திருக்கும் நிலை.

  ‘அபிநயம் ஒரு தனி மொழியாக இருப்பதால் அதில் ஒருவருக்கு அறிமுகம் இருந்தால்தான் நாட்டியத்தை ரசிக்க முடியும்’

 • 7

  ஒரு துறையை அல்லது பொருளைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தரப்படும் விளக்கம்.

  ‘‘சார்பியல் கோட்பாடு - ஓர் அறிமுகம்’ என்னும் பெயரில் ஒரு நூல் எழுதிவருகிறார்’

 • 8

  ஒரு பாடத்தைப் பற்றியோ, புத்தகத்தைப் பற்றியோ தெரிந்துகொள்ள உதவும் வகையில் அவற்றின் ஆரம்பத்தில் தரப்படும் சுருக்கமான குறிப்பு; முன்னுரை.

  ‘இந்த இலக்கணப் புத்தகத்திற்கான அறிமுகத்தைப் பேராசிரியர் லட்சுமணன் எழுதியிருக்கிறார்’
  ‘சுற்றுச்சூழல் பாடத்திற்கு எழுதப்பட்ட அறிமுகத்தைத் திருத்த வேண்டும்’