தமிழ் அல் யின் அர்த்தம்

அல்

வினைச்சொல்

 • 1

  ஒரு கூற்றை அல்லது ஒரு நிலையை மறுத்தல்.

  ‘உன்னை அழவைக்க வேண்டும் என்பது அவன் நோக்கம் அல்ல’
  ‘இது என் மகள் அல்ல; மருமகள்’
  ‘இது எங்களுடைய அபிப்பிராயம் மட்டும் அல்ல’
  ‘இந்தப் பெண் அல்ல, எந்தப் பெண்ணுமே சட்ட விரோதச் செயலில் ஈடுபடத் தயங்குவாள்’
  ‘இந்த விஷயம் நாங்கள் அறியாதது அல்ல’
  ‘உன் நண்பர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்லர்’
  ‘அவன் உழைத்துப் பணம் சேர்த்தவன் அல்ல’
  ‘அது தேங்காய் அல்ல’
  ‘வழக்கில் இருந்துவரும் பிரபவ முதல் அட்சய வரையிலான அறுபது ஆண்டுகளும் தமிழ் ஆண்டுகள் அல்ல’
  ‘உன்னைப் பற்றி அவன் சொன்னது உண்மை அல்ல’
  ‘நான் கேட்டதற்கான விளக்கம் அது அல்ல’
  ‘அவர் தனியொரு மனிதர் அல்ல’
  ‘அந்நாட்களில் சமுதாயத்தின் அலகாக இருந்தது குடும்பமே ஆகும்; தனிமனிதன் அல்லன்’
  ‘அவன் படிப்பிலோ பணத்திலோ உன்னைவிட எந்த விதத்திலும் குறைந்தவன் அல்ல’
  ‘காவல்துறையினரிடம் பிடிபட்டவன் பயங்கரவாதி அல்ல’
  ‘இது உண்மை அல்லவே அல்ல’

 • 2

  சொல்லப்பட்டது நீங்கலாக உள்ளதைக் குறிப்பிடப் பயன்படும் வினைச்சொல்.

  ‘தாய்மொழி அல்லாத பிற மொழிகளில் பாடம் கற்பிக்கப்படுகிறது’
  ‘தலித் அல்லாதவர்களும் தலித் பற்றி கதை எழுதுகிறார்கள்’
  ‘அது நகரமும் அல்லாத, கிராமமும் அல்லாத இரண்டுங்கெட்டான் நிலையில் உள்ள ஊர்’
  ‘நான் கதைகள் அல்லாதவற்றையும் வாசிப்பேன்’
  ‘உறவினர் அல்லாதாரிடையே திருமண உறவு வைத்துக்கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்’
  ‘காங்கிரஸ் அல்லாத அனைத்து முக்கியத் தொழிற்சங்க அமைப்புகளும் போராட்டத்தில் கலந்துகொள்ளத் தீர்மானித்துள்ளன’
  ‘நடப்பு நிதியாண்டில் திட்ட ஒதுக்கீடு அல்லாத செலவுகள் 39 ஆயிரத்து 266 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது’

 • 3

  (சொல்லப்பட்டதோடு) கூடுதலாக மற்றொரு செய்தி தொடர்வதைக் காட்டப் பயன்படுத்தும் வினைச்சொல்.

  ‘அவர் அந்தப் பையனைத் திட்டியதோடு அல்லாமல் அடிக்கவும் செய்தார்’
  ‘ஆற்று வெள்ளம் மண்ணின் வளத்திற்கு மட்டும் அல்லாமல் நில அரிப்புக்கும் காரணமாகிறது’
  ‘நம் நாட்டில் அல்லாது வெளிநாடுகளிலும் பயிற்சி பெற்று பட்டங்கள் பெற்றவர்’

 • 4

  தவிர்த்தல்.

  ‘இந்த ஊர் அல்லாமல் வேறு எந்த ஊரிலும் இவ்வளவு மலிவாகப் பலாப்பழம் கிடைக்காது’