தமிழ் அழுத்தம் யின் அர்த்தம்

அழுத்தம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  உறுதி.

  ‘கடிதத்தில் முத்திரை அழுத்தமாக விழுந்திருந்தது’
  ‘மருத்துவர் அழுத்தமான குரலில் ‘உண வில் கட்டுப்பாடு வேண்டும்’ என்றார்’
  உரு வழக்கு ‘அவர்களுக்கிடையே இருந்த அழுத்தமான நட்பு’

 • 2

  (வண்ணங்களைக் குறிக்கும்போது) அடர்த்தி.

  ‘திரைச்சீலைகளின் அழுத்தமான வண்ணங்கள். கோடைக் காலத்தில் அழுத்தமான வண்ணங்களில் உடைகள் அணிவதைத் தவிர்ப்பது நல்லது’

 • 3

  (பேச்சில் அல்லது எழுத்தில் முக்கிய விஷயத்துக்குத் தரப்படுகிற) வலிவு.

  ‘பேச்சில் எங்கே எப்போது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும்’

 • 4

  தன் கருத்தை எளிதில் வெளிவிடாத தன்மை.

  ‘ஆள் சற்று அழுத்தம்தான்’
  ‘பெண்களில் இப்படி ஓர் அழுத்தக்காரியைப் பார்க்கவே முடியாது’

 • 5

  தெளிவு.

  ‘செய்யுளை அழுத்தமான உச்சரிப்புடன் படித்தாள்’
  ‘அவர் ஆலாபனையில் வெளிப்பட்ட அழுத்தமான சங்கதிகள் எல்லோரையும் கவர்ந்தன’

 • 6

  முழுமை; ஆழம்.

  ‘இளம் வயதிலேயே அழுத்தமான புலமையைப் பெற்றிருந்தார்’
  ‘சங்க இலக்கியத்தில் அழுத்தமான தேர்ச்சி உடையவர்’
  ‘அழுத்தமான கதையம்சம் உள்ள படத்தில் நடிக்கவே எனக்கு விருப்பம்’

 • 7

  இயற்பியல்
  நிறை அல்லது விசை ஒரு பரப்பின் மேல் செலுத்தும் தாக்கம்.

  ‘நீராவியின் அழுத்தம் அதிகரித்ததால்தான் இந்தக் கண்ணாடிக் குடுவை வெடித்தது’