தமிழ் அழை யின் அர்த்தம்

அழை

வினைச்சொல்அழைக்க, அழைத்து

 • 1

  (ஒருவரைப் பெயர் சொல்லி அல்லது பிற முறையில்) கூப்பிடுதல்.

  ‘‘தம்பி, தம்பி’ என்று உரத்த குரலில் அவனை அழைத்தார்’
  ‘யாரோ தன்னைக் கைதட்டி அழைப்பதாக அவன் உணர்ந்தான்’
  ‘தொலைபேசியில் யாரோ உங்களை அழைக்கிறார்கள்’
  ‘நான் அவரை ‘மாமா’ என்றுதான் அழைப்பேன்’
  உரு வழக்கு ‘சாவு என்னை அழைக்கிறது’

 • 2

  (வாய்மொழியாகவோ எழுத்து மூலமாகவோ ஒருவரை ஓர் இடத்துக்கு அல்லது நிகழ்ச்சிக்கு) வரும்படி வேண்டுதல்; வரச்சொல்லுதல்.

  ‘சிலையைத் திறந்துவைக்க அமைச்சரை அழைத்திருக்கிறோம்’
  ‘மணமக்களை மதிய விருந்துக்கு அழைக்க வேண்டும்’

 • 3

  (தேர்தலுக்குப் பின் குடியரசுத் தலைவரோ ஆளுநரோ ஒரு அரசியல் கட்சியை ஆட்சி அமைக்குமாறு) அதிகாரபூர்வமாகக் கூறுதல்.

  ‘எங்கள் கட்சியைத்தான் குடியரசுத் தலைவர் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்’

 • 4

  (தொழில்முறையில் ஒருவரை) நாடுதல்.

  ‘எங்கள் கரகாட்டக் குழுவைத்தான் எல்லாரும் விரும்பி அழைக்கிறார்கள்’
  ‘போட்டி நிறுவனம் நீண்ட நாட்களாக என்னை வேலைக்கு அழைத்துக்கொண்டிருக்கிறது’

 • 5

  (ஒருவரை) மற்றொரு பெயரில் குறிப்பிட்டு வழங்குதல்.

  ‘காந்தி அடிகளை ‘தேசத் தந்தை’ என்று அழைக்கிறோம்’