தமிழ் ஆக்கு யின் அர்த்தம்

ஆக்கு

வினைச்சொல்ஆக்க, ஆக்கி

 • 1

  படைத்தல்; உண்டாக்குதல்; உருவாக்குதல்/மொழிபெயர்த்தல்.

  ‘உலகம் தானாகத் தோன்றியதா அல்லது ஆக்கப்பட்டதா?’
  ‘இந்தத் தொழிற்சாலையில் ஆக்கப்பட்ட வார்ப்பட அச்சுகள் நன்றாக உள்ளன’
  ‘குறிப்பிட்ட இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை இணைத்துத் தனி மாநிலமாக ஆக்க அரசு முடிவுசெய்தது’
  ‘தனது மகனை ஒரு விஞ்ஞானியாக ஆக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்’
  ‘அந்த மகானுடைய வாழ்க்கையைத் திரைப்படமாக ஆக்க எண்ணியிருக்கிறேன்’
  ‘ஆங்கிலத்திலிருந்து பல மருத்துவ நூல்களைத் தமிழில் ஆக்கித் தந்துள்ளார்’

 • 2

  உயர் வழக்கு (நூல் முதலியன) எழுதுதல்; இயற்றுதல்.

  ‘தமிழில் இவர் பல அரிய நூல்களை ஆக்கியுள்ளார்’
  ‘மரபு இலக்கணத்தின்படி அந்தக் கவிஞர் பல கவிதைகளை ஆக்கியுள்ளார்’

 • 3

  விதிமுறைகளின் அடிப்படையில் ஒன்றை நிறைவேற்றுதல்.

  ‘நாட்டிலுள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழிகளாக ஆக்க முடியாது’
  ‘தேசப்பற்று மிக்க அந்த எழுத்தாளரின் படைப்புகள் யாவும் நாட்டுடமையாக ஆக்கப்பட உள்ளன’
  ‘ஆங்கிலப் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக ஆக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்’

 • 4

  (உணவு) சமைத்தல்.

  ‘சீக்கிரம் சோறு ஆக்கு என்று அவன் அவசரப்படுத்தினான்’
  ‘ஆக்கிய சோற்றை எடுத்துப்போட்டுச் சாப்பிடக்கூட நேரமில்லாமல் அப்படி என்ன வேலை?’

 • 5

  (ஒன்றை அல்லது ஒருவரை) குறிப்பிட்ட நிலைக்குக் கொண்டுவருதல்.

  ‘ஊரார் திருடனை வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி ஆக்கிவிட்டனர்’
  ‘தகரத்தைத் தங்கமாக ஆக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு அந்தக் காலத்தில் பலர் தங்கள் சொத்தையே இழந்திருக்கின்றனர்’
  ‘குண்டாக இருப்பவர்களை ஒல்லியாக ஆக்க முடியும்’

தமிழ் ஆக்கு யின் அர்த்தம்

ஆக்கு

துணை வினைஆக்க, ஆக்கி

 • 1

  ‘ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல்’, ‘குறிப்பிட்ட நிலைக்கு உள்ளாகுமாறு செய்தல்’ முதலிய பொருள்களில் பயன்படுத்தும் ஒரு வினையாக்கும் வினை.

  ‘என் சிறுகதையைத் திரைப்படமாக்கியிருக்கிறார்கள்’
  ‘கல்லைப் பொடியாக்கு’
  ‘ஆங்கில மூலத்தைத் தமிழாக்கியிருக்கிறார்’