ஆகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஆகு1ஆகு2

ஆகு1

வினைச்சொல்ஆக, ஆகி/ஆய்

 • 1

  (குறிப்பிட்ட தன்மையில் இருத்தல் என்னும் முறையில் உள்ள வழக்கு)

  1. 1.1 (குறிப்பிட்ட) தன்மையில், நிலையில் இருத்தல்

   ‘குழாயில் தண்ணீர் வந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது’
   ‘மகனுக்குப் பத்து வயது ஆகிறது’

  2. 1.2உயர் வழக்கு (பெயர்ப் பயனிலைக்குப் பிறகு வரும்போது) வாக்கியத்தின் கருத்தை உறுதிப்படுத்த வரும் வினை

   ‘இந்தியாவில் வாழும் அனைவரும் இந்தியர்களே ஆவர்’
   ‘இந்த ஒப்பந்தம் வரவேற்கக்கூடிய ஒன்று ஆகும்’
   ‘‘வசந்தம்’ என்பது அவருடைய வீட்டின் பெயர் ஆகும்’

  3. 1.3 இயலுவதாக இருத்தல்

   ‘காரியத்தைச் சொல்லுங்கள். என்னால் ஆகுமா, ஆகாதா என்று சொல்லுகிறேன்’
   ‘அவரால் ஆனதைச் செய்தார்’
   ‘மனம் வைத்தால் ஆகாதது ஒன்றும் இல்லை’
   ‘அமெரிக்காவுக்குப் போய்ப் படிக்க வேண்டும் என்பது என்னைப் பொறுத்தவரை ஆகாத வேலை’
   ‘அவன் பெருமையைச் சொல்லி ஆகாது’

 • 2

  (தன்மை மாறுதல் என்னும் முறையில் உள்ள வழக்கு)

  1. 2.1 மற்றொரு தன்மைக்கு, நிலைக்கு வருதல்

   ‘நடிகனாகத்தான் ஆக முடியவில்லை, பின்னணிப் பாடகராக ஆகலாம் என்று முயற்சி செய்கிறார்’
   ‘அவர் சில சமயம் குழந்தை மாதிரி ஆகிவிடுகிறார்’
   ‘அப்பாவின் திட்டைக் கேட்டதும் அவன் முகம் எப்படியோ ஆகிவிட்டது’

  2. 2.2 ஒருவர் அல்லது ஒன்று மற்றொரு உருவம், வடிவம், பெயர் கொள்ளுதல்; மாற்றம் அடைதல்

   ‘கௌதமன் சாபத்தால் அகலிகை கல்லானாள்’
   ‘மவுண்ட் ரோடு என்ற பெயர் அண்ணா சாலை ஆயிற்று’

  3. 2.3 (ஒரு பொருளால்) செய்யப்படுதல்/(ஒரு நூல் குறிப்பிட்ட முறையில்) இயற்றப்படுதல்

   ‘இந்த மேஜை தேக்கால் ஆனது’
   ‘இந்த நூல் ஆசிரியப் பாவால் ஆனது’

  4. 2.4 (ஒன்று) நிகழ்தல்; நடத்தல்

   ‘நான் எட்டு மணிவரைதான் அங்கு இருந்தேன். அதற்குப் பின் என்ன ஆயிற்று?’
   ‘பணம் இருந்தால்தான் வேலை ஆகும்’

 • 3

  (சில மரபு வழக்கு)

  1. 3.1 (நேரம்) கழிதல்

   ‘திரும்பிவரப் பதினைந்து நிமிடம் ஆயிற்று’
   ‘வீட்டைக் கட்டி முடிக்க ஆறு மாதம் ஆகியிருக்குமா?’

  2. 3.2 (செலவு முதலியன) ஏற்படுதல்

   ‘காஞ்சிபுரம் பட்டு என்றால் ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகும்’

  3. 3.3 (ஒரு பொருள் விற்கப்பட்டு அல்லது பயன்படுத்தப்பட்டு) தீர்தல்/ஒன்று நடந்து முடிதல்

   ‘போன வாரம் செய்த முறுக்கெல்லாம் ஆகிவிட்டது’
   ‘இப்போதுதானே காப்பி போட்டாய். அதற்குள் ஆகிவிட்டதா?’
   ‘நான் வந்த வேலை ஆயிற்று. ஊருக்குப் புறப்பட்டுவிட்டேன்’

  4. 3.4 (எதிர்மறை வினை வடிவங்கள் மட்டும்) (ஒரு பொருள் உடலுக்கு) ஒத்துக்கொள்ளுதல்; (ஒரு குணம், தன்மை) பொருந்துதல்; (ஒருவரோடு) ஒத்துப்போதல்

   ‘வயது இருபதுதான் ஆகிறது; அதற்குள் வடை ஆகாது என்கிறாயே!’
   ‘உனக்கு இவ்வளவு அகங்காரம் ஆகாது’
   ‘பெரிய சித்தப்பாவுக்கும் சின்ன சித்தப்பாவுக்கும் ஆகாது’

ஆகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஆகு1ஆகு2

ஆகு2

துணை வினைஆக, ஆகி/ஆய்

 • 1

  பெரும்பாலும் ‘குறிப்பிட்ட நிலைக்கு உள்ளாதல்’ என்னும் பொருளில் பயன்படுத்தும் வினையாக்கும் வினை.

  ‘கைதாகு’
  ‘அச்சாகு’

 • 2

  (‘ஆயிற்று’ என்னும் ஒரு வடிவம் மட்டும்) முதன்மை வினையின் செயல் முடிந்ததை உணர்த்தும் ஒரு துணை வினை.

  ‘இதோ தபால்காரர் வந்தாயிற்று’
  ‘கோடைக் காலம் ஆரம்பித்தாயிற்று’
  ‘தீபாவளிக்குச் சேலை வாங்கியாயிற்றா?’

 • 3

  (‘ஆக, ஆவேன்’ என்னும் வடிவங்கள் மட்டும்) (‘செய்து’ என்ற வாய்பாட்டு வினையெச்சத்தின் அல்லது ‘தான்’ என்னும் இடைச்சொல்லின் பின்னும், ‘வேண்டும்’ என்பதோடும் இணைந்து வரும்போது) ஒரு செயல் செய்யப்பட வேண்டிய கட்டாய நிலையைத் தெரிவிக்கப் பயன்படுத்தப்படும் துணை வினை.

  ‘நான் ஊருக்குப் போய்த்தான் ஆவேன் என்று சொல்லவில்லை’
  ‘நம் வீட்டின் நிலைமையைக் கருதி நீ வேலைக்குப் போய்த்தான் ஆக வேண்டும்’
  ‘கொடுத்த வாக்கைக் காப்பாற்றியே ஆக வேண்டும்’
  ‘அவரை நான் சந்தித்தாக வேண்டும்’

 • 4

  உயர் வழக்கு (-அல் என்னும் விகுதி இணைந்த தொழிற்பெயரின் பின்) ‘தொடங்குதல்’ என்னும் பொருளில் வரும் ஒரு துணை வினை.

  ‘சேவகர்கள் அரசகுமாரியைத் தேடலானார்கள்’
  ‘நோய் முற்றி அவர் இளைக்கலானார்’