ஆடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஆடு1ஆடு2

ஆடு1

வினைச்சொல்ஆட, ஆடி

 • 1

  (அசைதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (தொங்கிய நிலையில் அல்லது நின்ற நிலையில் இருப்பது) இப்படியும் அப்படியும் அசைதல்

   ‘அவளுடைய பின்னல் குதிரை வாலாக ஆடியது’
   ‘பாம்பு படம் எடுத்து ஆடிற்று’
   ‘யானை ஆடிக்கொண்டே கரும்பைத் தின்றது’

  2. 1.2 (பயத்தால் அல்லது குளிரால் உடல்) நடுங்குதல்

   ‘இரத்தத்தைப் பார்த்ததும் அவள் உடம்பெல்லாம் ஆடத் தொடங்கியது’

  3. 1.3 அதிர்தல்

   ‘புகைவண்டி சென்ற வேகத்தில் பாலம் ஆடியது’

  4. 1.4 ஒரு நிலையில் இல்லாமல் சீரற்று அசைதல்

   ‘நாற்காலி சரியாக நிற்காமல் ஆடியதால் அவன் விழப்பார்த்தான்’
   ‘குழந்தைக்கு முன்பல் இரண்டும் ஆடுகிறது’

  5. 1.5 (ஊஞ்சல் அல்லது ஊஞ்சலில் ஒருவர் உட்கார்ந்து) முன்னும் பின்னுமாகப் போய்வருதல்

   ‘ஊஞ்சல் வேகமாக ஆடிற்று’
   ‘அவர் ஊஞ்சலில் உட்கார்ந்து மெதுவாக ஆடிக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்’

 • 2

  (செயல்புரிதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (நடனம், கூத்து போன்றவற்றை) நிகழ்த்துதல்; நடனத்தை ஒத்த வகையில் இயங்குதல்

   ‘சிவன் ஆடிய ஊழித் தாண்டவம்’
   ‘பாடலின் கருத்துக்கும் பாவத்துக்கும் ஏற்றவாறு அபிநயத்துடன் ஆட வேண்டும்’
   ‘மயில் தோகையை விரித்து ஆடியது’
   ‘இன்று என்ன கூத்து ஆடப்போகிறீர்கள்?’

  2. 2.2 (ஒரு விளையாட்டில்) பங்குபெறுதல்; விளையாடுதல்

   ‘அந்தக் காலத்தில் நாங்கள் இரவு முழுவதும் தாயம் ஆடுவோம்’
   ‘இன்றைய கால்பந்தாட்டப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடியது’

  3. 2.3 (செக்கில் எள், கடலை போன்றவற்றை) அரைத்து எண்ணெய் எடுத்தல்

   ‘உங்கள் வீட்டில் இந்த வருஷம் எத்தனை காணம் ஆடினீர்கள்?’

  4. 2.4 அடக்கமோ கட்டுப்பாடோ இல்லாமல் நடந்துகொள்ளுதல்

   ‘பணம் இருக்கும்வரை ஆடுவான்’

  5. 2.5 (சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாமல்) கோபித்து ஆர்ப்பாட்டம் செய்தல்

   ‘குழந்தை என்ன சொல்லிவிட்டான் என்று இப்படி ஆடுகிறீர்கள்?’

  6. 2.6 (பிறருடைய விருப்பங்களுக்கும் ஆணைகளுக்கும் அடிபணிந்து) அடிமையாக நடத்தல்

   ‘மனைவி சொன்னதையெல்லாம் கேட்டு இவன் ஆடுகிறான்’
   ‘கண்டவர் சொல்வதைக் கேட்டு ஆடியவன்தானே நீ’

ஆடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஆடு1ஆடு2

ஆடு2

பெயர்ச்சொல்

 • 1

  (பொதுவாக) இறைச்சி, ரோமம், பால் ஆகியவற்றுக்காக வளர்க்கப்படும் (தாவர உண்ணியாகிய) வீட்டு விலங்கினம்/(குறிப்பாக) வெள்ளாடு.