தமிழ் ஆயிற்று யின் அர்த்தம்

ஆயிற்று

வினைச்சொல்

 • 1

  நிர்ப்பந்தத்தைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் சொல்.

  ‘இப்போது தன்னுடன் வந்தால்தான் ஆயிற்று என்று என் நண்பன் என்னை நச்சரிக்கிறான்’
  ‘சொத்தை இப்போது பிரித்தால்தான் ஆயிற்று என்கிறான் என் மகன்’

 • 2

  ஒரு பிரச்சினையில் அல்லது ஒரு விஷயத்தில் ஒருவர் மேலும் சம்பந்தப்பட விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்த வாக்கியத்தில் இரண்டு முறை பயன்படுத்தும் சொல்.

  ‘நீ கேட்ட மாதிரி கடை வைத்துக் கொடுத்துவிட்டேன். இனிமேல் நீ ஆயிற்று, உன் கடை ஆயிற்று’
  ‘என் மகனை ஒருவழியாகக் கல்லூரியில் சேர்த்துவிட்டேன். இனிமேல் அவன் ஆயிற்று, அவன் படிப்பு ஆயிற்று’

 • 3

  (பெரும்பாலும் முன்னிலையிலும் படர்க்கையிலும்) ஒரு நபர் ஒன்றின் மீது காட்டும் ஈடுபாடு குறித்து மற்றவர் தன் எரிச்சலைக் காட்டுவதற்காக வாக்கியத்தில் இரண்டு முறை பயன்படுத்தும் சொல்.

  ‘வேலையில் மூழ்கியிருந்தவரைப் பார்த்து ‘நீங்களும் ஆயிற்று, உங்கள் வேலையும் ஆயிற்று. சாப்பிட வாருங்கள்’ என்றாள்’
  ‘‘அவருக்கு நாய் என்றால் மிகவும் பிரியம்’. ‘ஆமாம், அவரும் ஆயிற்று, அவர் நாயும் ஆயிற்று’’

 • 4

  (பெரும்பாலும் தன்மை இடத் தில்) ஒன்றுக்குத் தான் பொறுப்பு என்று கூறி நம்பிக்கையை ஏற்படுத்தப் பயன்படுத்தும் சொல்.

  ‘உனக்கு நாளைக்குள் ஆயிரம் ரூபாய் வேண்டும். அவ்வளவுதானே, நான் ஆயிற்று’