தமிழ் ஆற்று யின் அர்த்தம்

ஆற்று

வினைச்சொல்ஆற்ற, ஆற்றி

 • 1

  (மிகவும் சூடாக இருக்கும் ஒன்றின்) சூட்டைக் குறைத்தல்.

  ‘பால் கொதிக்கிறது; ஆற்றிக் கொடு’

 • 2

  (பசி, கோபம், வலி முதலியவற்றை) தணித்தல்; குறைத்தல்.

  ‘ஆதிமனிதர்கள் விலங்குகளை வேட்டையாடியும் காய்கனிகளை உண்டும் தங்கள் பசியை ஆற்றிக்கொண்டனர்’
  ‘அவனுடைய கோபத்தை ஆற்ற வழி தெரியாமல் திகைத்தேன்’
  ‘சற்று நேரம் நிமிர்ந்து நின்று இடுப்பு வலியை ஆற்றிக்கொள்ளக் கூட முடியவில்லை’

 • 3

  (காயத்தை, புண்ணை) குணமாக்குதல்.

  ‘மருந்தால் புண்ணை ஆற்றலாம்; மனப் புண்ணை ஆற்ற என்ன வழி?’

 • 4

  (முடியில் உள்ள ஈரத்தைக் காற்றில்) உலர்த்துதல்.

  ‘குளத்தில் குளித்துவிட்டு முடியை ஆற்றிக்கொண்டே வந்தாள்’

 • 5

  (துன்பத்தில் இருப்பவரை) தேற்றுதல்/(பிறரிடம் கூறித் தன் மனச் சுமையை) குறைத்துக்கொள்ளுதல்.

  ‘விபத்தில் மனைவியையும் குழந்தையையும் இழந்துவிட்ட நண்பர் ஆற்ற முடியாத சோகத்தில் இருந்தார்’
  ‘மனத்தில் உள்ள துயரத்தை யாரிடமாவது சொல்லி ஆற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார்’
  ‘என்ன சொல்லியும் என் மகன் திருந்தவில்லையே என்று ஆற்ற மாட்டாமல் வெம்பினாள்’

தமிழ் ஆற்று யின் அர்த்தம்

ஆற்று

வினைச்சொல்ஆற்ற, ஆற்றி

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (பணி, கடமை முதலியவற்றை) நிறைவேற்றுதல்; செய்தல்.

  ‘நாட்டுக்காக அவர் ஆற்றிய பணிகள்தான் எத்தனை!’
  ‘கோழைகள்கூடச் சில சமயம் துணிச்சலான காரியங்களை ஆற்றியிருக்கிறார்கள்’

 • 2

  உயர் வழக்கு (உரை, சொற்பொழிவு) நிகழ்த்துதல்.

  ‘அவர் வானொலியில் இன்று ஆற்றிய உரை நன்றாக இருந்தது’
  ‘அவர் நாளை தமிழ் மன்றத்தில் உரையாற்றப்போகிறார்’