தமிழ் ஆழம் யின் அர்த்தம்

ஆழம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (அளவீட்டின் துவக்கமாகக் கொள்ளும் ஒன்றின்) மேல் மட்டத்திலிருந்து அடிமட்டம்வரையில் உள்ள அளவு.

  ‘கிணற்றின் ஆழம் நாற்பது அடி’
  ‘இந்தப் பள்ளத்தாக்கின் ஆழம் ஆயிரம் அடி’

 • 2

  மேற்குறிப்பிட்ட அளவின் சராசரியைவிட அதிகமானது.

  ‘ஆழமான கிணறு’
  ‘ஆழமான காயம்’
  ‘நிலத்தை ஆழமாக உழுவது அவசியம்’
  உரு வழக்கு ‘சமூகத்தில் சில நம்பிக்கைகள் ஆழமாக வேரூன்றிவிட்டன’

 • 3

  (பள்ளமாக அல்லது குழிவாக இருக்கும் ஒன்றின்) அடிமட்டம்.

  ‘கடலின் ஆழத்தில் தண்ணீரின் அழுத்தம் அதிகம்’
  உரு வழக்கு ‘அவன் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனத்தின் ஆழத்திலிருந்து வந்தவை’

 • 4

  (மூச்சை உள்ளிழுத்தல் அல்லது வெளிவிடுதல் தொடர்பானவற்றோடு வரும்போது) சராசரியைவிட நீண்டிருக்கும் அளவு.

  ‘புகையை ஆழமாக உள்ளிழுத்தான்’
  ‘ஆழமான பெருமூச்சு ஒன்று அவரிடமிருந்து வெளிப்பட்டது’

 • 5

  (பார்வையைக் குறித்து வரும்போது) தீர்க்கமானது; கூர்மையானது.

  ‘சில விநாடிகள் பேசாமல் அவளையே ஆழமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்’
  ‘அவருடைய ஆழமான பார்வையை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை’

 • 6

  (விவாதம், ஆராய்ச்சி, அறிவு முதலியவை குறித்து வரும்போது) விரிவானது.

  ‘அந்தத் திட்டத்தின் சாதகபாதகங்களை மத்திய அரசு ஆழமாக விவாதித்தது’
  ‘இந்த நூலைப் பற்றிய அவருடைய மார்க்சியப் பார்வை ஆழமானது’
  ‘அவருக்குத் தத்துவத்தில் ஆழமான ஞானம் உண்டு’
  ‘கருத்தாழம் மிக்க கட்டுரை’

 • 7

  (உணர்வு குறித்து வரும்போது) தீவிரமானது.

  ‘ஆழமான கடவுள் நம்பிக்கை’
  ‘நான் அவளை எவ்வளவு ஆழமாகக் காதலிக்கிறேன் தெரியுமா?’
  ‘வாழ்க்கையைப் பற்றிய ஆழமான கேள்விகளை எழுப்புகிறது இந்த நாவல்’
  ‘என்னுடைய நட்பின் ஆழத்தை உணராது பேசிவிட்டான்’
  ‘சமூகத்தைக் குறித்து அவருக்கு ஆழமான அக்கறை இருக்கிறது’

 • 8

  (உறக்கம் குறித்து வரும்போது) எளிதில் கலைத்துவிட முடியாதது.

  ‘ஆழமான தூக்கம்’

 • 9

  (குரல் குறித்து வரும்போது) கனமானது.

  ‘நல்ல ஆழமான குரல் அவருடையது’