தமிழ் இடம் யின் அர்த்தம்

இடம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஏதேனும் ஒன்றின் பகுதியைக் குறிப்பது)

  1. 1.1 (ஒருவரின் உடலிலோ ஒரு பொருளிலோ அல்லது நிலம், நாடு, நகரம் போன்றவற்றிலோ) ஒரு பகுதி

   ‘காலில் அடிபட்ட இடம் வீங்கியிருந்தது’
   ‘சிறுவனின் சட்டை பல இடங்களில் கிழிந்திருந்தது’
   ‘சில இடங்களில்தான் நீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்கிறது’
   ‘இந்தப் பத்திரிகை ஒரே சமயத்தில் நாட்டின் பல இடங்களிலிருந்து வெளியாகிறது’

  2. 1.2 (குறிப்பிட்ட சூழலில் குறிப்பிடப்படும்) தலம்

   ‘விபத்து நடந்த இடத்தில் ஒரே கூட்டம்’
   ‘கல்யாணத்திற்குப் போன இடத்தில் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டேன்’
   ‘தோண்டிய இடத்தில் தண்ணீர் கிடைத்தால் தேவலாம்’

  3. 1.3 (கதை, நாடகம், கட்டுரை போன்றவற்றில்) கட்டம்

   ‘இயற்கையை வர்ணிக்கும் இடத்தில் கவிஞரின் திறமை பளிச்சிடுகிறது’
   ‘நாடகத்தில் நகைச்சுவை நடிகர் வரும் இடங்களிலெல்லாம் கைதட்டினார்கள்’
   ‘இந்த இடத்தில் நான் இன்னொரு கருத்தைச் சொல்ல விரும்புகிறேன்’

  4. 1.4 (வீடு, கட்டடம் போன்றவற்றுக்கான) மனை; நிலம்

   ‘இடம் வாங்கிப்போட்டு எவ்வளவு நாள் ஆகிறது?’
   ‘ஏரிக்குப் பக்கத்தில் இடம் வாங்கியிருக்கிறேன்’

 • 2

  (நிரப்பப்படுவதைக் குறிப்பது)

  1. 2.1 மனிதரோ பொருளோ எடுத்துக்கொள்ளும் வெளி அல்லது பரப்பு

   ‘பந்தலில் இடம் இல்லாமல் பலர் வெளியே நின்றிருந்தனர்’
   ‘இந்தக் கைப்பெட்டியில் ஐந்து சேலைகளுக்கு மேல் வைக்க இடம் இருக்காது’

  2. 2.2 (ஒரு எண்ணைக் குறித்து வரும்போது) இலக்கம்

   ‘1975 என்ற எண்ணில் 9 மூன்றாவது இடத்தில் இருக்கிறது’

  3. 2.3 (ரயில், பேருந்து போன்றவற்றில் அமர்வதற்கான) இருக்கை

   ‘முன்பதிவு செய்யாததால் ரயிலில் இடம் கிடைக்காமல் திண்டாடினோம்’
   ‘அரங்கத்தின் முதல் வரிசையில் இடம் கிடைத்தது’

  4. 2.4 (தங்குவதற்கான) வசதி

   ‘திடீரென்று சென்னைக்கு வர வேண்டியதாகிவிட்டது. அதனால் ஒரு ஓட்டலிலும் இடம் கிடைக்கவில்லை’
   ‘மாணவர் விடுதியில் இடம் கிடைத்துவிட்டது’

  5. 2.5 (பள்ளி, கல்லூரி முதலியவற்றில்) படிப்பதற்கான அனுமதி

   ‘உங்கள் பையனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டதா?’

  6. 2.6 (அலுவலகம் போன்றவற்றில் குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்காக ஒருவர் வகிக்கும்) பதவி

   ‘எங்கள் அலுவலகத்தில் மூன்று தட்டச்சர் இடங்கள் காலியாக இருக்கின்றன’
   ‘இந்தத் திட்டத்தில் ஆராய்ச்சியாளர் இடத்திற்குப் புதிதாக ஒருவர் சேர்ந்திருக்கிறார்’

  7. 2.7 (தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிடும்) தொகுதி

   ‘வரும் தேர்தலில் எங்கள் கட்சி எண்பது இடங்களைக் கைப்பற்றும் என்று உறுதியாக நம்புகிறோம்’

  8. 2.8 (சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றில்) உறுப்பினர் பதவி

   ‘நாடாளுமன்றத்தில் ஏழு இடங்கள் காலியாக இருக்கின்றன’
   ‘நகராட்சி மன்றத்தின் நான்கு இடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது’

 • 3

  (தகுதியை, பொருத்தத்தைக் குறிப்பது)

  1. 3.1 (பெண் அல்லது மாப்பிள்ளை பார்ப்பது தொடர்பாகக் குறிப்பிடும்போது) குடும்பம்

   ‘கல்யாணப் பேச்சு வரும்போதெல்லாம் ‘நல்ல இடமாக அமைய வேண்டும்’ என்று அம்மா சொல்வாள்’
   ‘மோசமான இடத்தில் பெண்ணைக் கொடுத்துவிட்டோமே என்று அப்பா வருத்தப்பட்டார்’
   ‘இவ்வளவு பெரிய இடத்தில் பெண்ணெடுக்க வேண்டாம் என்று எல்லோரும் சொன்னார்கள்’

  2. 3.2 (அந்தஸ்தில், அதிகாரத்தில்) குறிப்பிட்ட நிலையில் இருக்கும் ஒருவர்

   ‘பெரிய இடத்து வம்பு நமக்கு வேண்டாம்’
   ‘பெரிய இடத்து விவகாரத்தில் நாம் தலையிட வேண்டாம்’
   ‘என் தம்பி மோசமான இடத்தில் தொடர்பு வைத்திருக்கிறான்’

  3. 3.3 (திறமை, தரம் போன்றவற்றின் அடிப்படையில்) வரிசைப்படுத்தப்படுவது

   ‘இருநூறு மீட்டர் ஓட்டத்தில் அவன் முதல் இடம் பெற்றான்’
   ‘மக்கள்தொகையில் இந்தியா சீனாவுக்கு அடுத்த இடம் வகிக்கிறது’

  4. 3.4 (சில அடிப்படைகளை ஒட்டி) ஒன்றில் சேர்க்கப்படும் நிலை

   ‘கொச்சைச் சொற்களுக்கு அகராதியில் இடம் உண்டா?’
   ‘விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு இந்தச் சங்கத்தில் இடம் இல்லை’
   ‘என்ன, கங்குலிக்கு இந்திய அணியில் இடம் இல்லையா?’

  5. 3.5 (ஒன்றில் ஒன்று) காணப்படும் நிலை

   ‘அவருடைய கவிதையில் உணர்ச்சிக்கான இடம் மிகக் குறைவு’

  6. 3.6 நிறுவனம்; அமைப்பு

   ‘என் மகன் நல்ல இடத்தில் வேலை செய்கிறான்’
   ‘இங்கே வேலை செய்ய விருப்பம் இல்லை என்றால் வேறு இடம் பார்த்துக்கொள்’

  7. 3.7 எழுத்துகள் அல்லது சொற்களுக்கு இடையில் உள்ள இடைவெளி; எழுதும்போது தாளில் விடப்படும் இடைவெளி

   ‘சொற்களுக்கு இடையில் போதிய இடம் விட்டு எழுத வேண்டும்’
   ‘இந்தப் பத்திக்குப் பிறகு படத்திற்காக நிறைய இடம் விடு’

  8. 3.8 (குறிப்பாகத் தரப்படும்) நிலை

   ‘கடவுளின் இடத்தைப் பணம் எடுத்துக்கொண்டுவிட்டது’
   ‘தந்தை என்ற இடத்திலிருந்து உனக்கு இதைச் சொல்கிறேன்’

  9. 3.9 (மனத்தில்) நிலைத்திருக்கும் நிலை

   ‘‘உன் மனத்தில் எனக்கு ஒரு இடம் உண்டா?’ என்று அவளிடம் கேட்டேன்’
   ‘சிறு வயதில் ஒரே முறை கேட்ட பாட்டு, என் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டது’

 • 4

  (துறை வழக்கு)

  1. 4.1சோதிடம்
   (ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் இருக்கும்) வீடு

   ‘இவருடைய ஜாதகத்தில் சனி லக்னத்திலிருந்து மூன்றாம் இடத்தில் உள்ளது’

  2. 4.2இலக்கணம்
   தன்மை (=பேசுபவர்), முன்னிலை (=கேட்பவர்), படர்க்கை (=பேசப்படுபவர் அல்லது பேசப்படுவது) ஆகியவற்றைக் குறிக்கும் சொல்

  3. 4.3இசைத்துறை
   அட்சரம்

   ‘இந்தக் கீர்த்தனையில் இரண்டு இடம் தள்ளி ஸ்வரம் பாடினார்’

  4. 4.4இசைத்துறை
   (பாடலோ அல்லது பாடலின் வரியோ தொடங்கும்) தாளத்தின் குறிப்பிட்ட அட்சரம்

தமிழ் இடம் யின் அர்த்தம்

இடம்

பெயர்ச்சொல்

இலக்கணம்
 • 1

  இலக்கணம்
  ஏழாம் வேற்றுமைப் பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘என்னிடம் பணம் இல்லை’
  ‘நீ யாரிடம் வழி கேட்டாய்?’

தமிழ் இடம் யின் அர்த்தம்

இடம்

பெயர்ச்சொல்

 • 1

  இடது புறம்.

  ‘இடப் பக்கம்’