இடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இடு1இடு2

இடு1

வினைச்சொல்இட, இட்டு

 • 1

  (ஒன்றை மற்றொன்றில் விழுமாறு செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (ஒன்றை ஒன்றினுள் அல்லது ஒன்றின் மேல்) வைத்தல்; போடுதல்

   ‘கடிதத்தை எழுதி உறையில் இட்டேன்’
   ‘சோற்றை உருண்டைகளாக உருட்டிக் குழந்தைகளின் கையில் இட்டாள்’
   ‘உப்பையும் மிளகாயையும் உரலில் இட்டு ஆட்டவும்’
   ‘உறையிட்ட தலையணைகள்’

  2. 1.2 (உரம் போன்றவற்றை நிலத்தில்) தூவுதல்; பரவச் செய்தல்

   ‘தழைச்சத்தை அடியுரமாக இட வேண்டும்’
   ‘குப்பைகளைச் சேமித்து எருவாக இட்டனர்’

  3. 1.3 ஒன்றை மற்றொன்றுடன் சேர்த்தல்

   ‘வாழைப்பூவை அரைத்து மாவில் இட்டுப் பிசையவும்’
   ‘கரைசலில் அமிலத்தை இரண்டு துளிகள் இட்டுக் கலக்கினாள்’

  4. 1.4 (ஒன்றை ஒரு பரப்பில்) பூசுதல்; தடவுதல்

   ‘வாசற்படியைக் கழுவிச் செம்மண் இட்டாள்’
   ‘இயந்திரத்திற்கு எண்ணெய் இடும்போது கவனமாக இருங்கள்’
   ‘காயம் பட்ட இடத்தில் மருந்தை இட்டுத் துணிக்கட்டு கட்டிவிட்டனர்’
   ‘சாணமிட்டு மெழுகிய தரை’

  5. 1.5 (பறவை, பல்லி முதலியவை முட்டை அல்லது எச்சத்தை) வெளித்தள்ளுதல்

   ‘வீரியக் கோழிகள் இட்ட முட்டைகள் இவை’
   ‘பறவைகள் இட்ட எச்சங்கள் தரையில் அங்கங்கே கிடந்தன’

 • 2

  (ஒன்றை மற்றொன்றில் பதியுமாறு அல்லது பொருந்துமாறு செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (திருநீறு, குங்குமம் போன்றவற்றை) வைத்தல்; பூசுதல்

   ‘அர்ச்சகர் தந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்டேன்’
   ‘குளித்ததும் திருநீறு இட்டுக்கொள்வது என் தந்தையாரின் வழக்கம்’
   ‘திருமண் இட்ட அவருடைய நெற்றி எடுப்பாகத் தெரிந்தது’
   ‘சரஸ்வதி படத்திற்குச் சந்தனமிட்டார்’

  2. 2.2 (மாலை, நகை) அணிதல்

   ‘வளையல் இட்ட கை’

 • 3

  (ஒன்றை உருவாக்குதல்)

  1. 3.1 (ஒரு பரப்பில் கட்டம் போன்ற வடிவங்களையோ குறிகளையோ) அமைத்தல்

   ‘சரியான விடைக்கு எதிரில் பெருக்கல் குறி இடவும்’
   ‘கறுப்புக் கரை இட்ட மஞ்சள் சேலை’
   ‘மெல்லிய சரிகையில் கட்டம் இட்ட பாவாடைத் துணி’
   ‘பெட்டியின் மீது அம்புக்குறி இட்டான்’

  2. 3.2 (பந்தல், வேலி போன்றவற்றை) அமைத்தல்

   ‘தோட்டத்துக்கு வேலி இட்ட பிறகு அவரைக்கொடிக்குப் பந்தல் இட்டார்’

  3. 3.3 (அப்பளம், சப்பாத்தி போன்றவற்றைத் தயாரிப்பதற்கு) மாவு உருண்டையை மணையில் வைத்துக் குழவியை அதன்மேல் உருட்டித் தட்டையாக்குதல்

   ‘ஒரு நாளைக்கு ஐநூறு அப்பளமாவது இடலாம்’
   ‘அக்கா பூரி இட்டுப்போட, அம்மா பொரித்து எடுத்தாள்’
   ‘சப்பாத்தி இட்டுஇட்டுக் கை வலித்தது’

  4. 3.4 (திட்டம்) ஏற்படுத்துதல்

   ‘நாம் திட்டமிட்டப்படி சில காரியங்கள் நடப்பதில்லை’

  5. 3.5 (துளை) போடுதல்

   ‘பலகையில் துளையிட்டுச் சட்டத்தைப் பொருத்தினார்கள்’

  6. 3.6 (எழுதும்போது கோடு, நிறுத்தல்குறி போன்றவற்றை) போடுதல்

   ‘‘அதனால்’, ‘ஆகவே’ போன்ற இணைப்புச் சொற்களுக்குப் பிறகு கால்புள்ளி இட வேண்டும்’
   ‘அடிக்கோடு இட்ட வாக்கியத்தைக் கவனமாகப் படி’

  7. 3.7 (கடிதம், ஆவணம் போன்றவற்றில் கையொப்பம், தேதி ஆகியவற்றை) போடுதல் அல்லது குறித்தல்

   ‘தங்களுடைய 13.01.2008 தேதியிட்ட கடிதம் கிடைத்தது’
   ‘தேதியிடப்படாத மனுக்களைப் பரிசீலிக்க இயலாது’
   ‘இதில் கையொப்பமிட்டவர் யார்?’

  8. 3.8 (முத்திரையை) பதித்தல்

   ‘முத்திரையிட்ட ஒப்பந்தங்களைப் பத்து நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்’
   ‘அஞ்சல் உறையில் ‘திருவான்மியூர்’ என்று முத்திரையிடப்பட்டிருந்தது’
   ‘தரச் சான்று முத்திரையிட்ட பொருள்களையே வாங்குவது நல்லது’
   ‘எங்கள் சின்னத்தில் முத்திரையிட்டு எங்களுக்கு வாக்களிக்க வேண்டுகிறோம்’

  9. 3.9 (அடித்தளம்) அமைத்தல்

   ‘தன் அயராத உழைப்பின் மூலம் அவர் அடித்தளம் இட்ட இந்தப் பள்ளி இன்று பல விதங்களில் முன்னேறியிருக்கிறது’

  10. 3.10 (சப்பணம்) போடுதல்

   ‘தரையில் சப்பணம் இட்டு உட்கார்ந்து சாப்பிட்டால்தான் இயல்பாக இருக்கிறது’

 • 4

  (சில மரபு வழக்கு)

  1. 4.1 (ஒருவருக்கு அல்லது ஒன்றுக்குப் பெயர் அல்லது தலைப்பு) வைத்தல்

   ‘குழந்தைக்கு என்ன பெயர் இடலாம்?’
   ‘கட்டுரையை எழுதி முடித்துவிட்டு என்ன தலைப்பு இடலாம் என்று யோசித்தேன்’
   ‘‘கடலும் எருமைகளும்’ என்ற தலைப்பிட்ட புகைப்படம் கண்காட்சியில் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தது’

  2. 4.2 (கட்டளை முதலியன) பிறப்பித்தல்

   ‘நீதிமன்றம் இட்ட உத்தரவைப் புறக்கணிக்க முடியாது’

  3. 4.3 (சாபம்) கொடுத்தல்

   ‘யார் இட்ட சாபமோ, அந்தக் குடும்பம் முன்னேறாமலேயே இருக்கிறது’

இடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இடு1இடு2

இடு2

துணை வினைஇட, இட்டு

 • 1

  (பெரும்பாலும் ‘செய்தல்’, ‘உண்டாக்குதல்’ முதலிய பொருள் தரும் வகையில்) சில பெயர்ச்சொற்களோடு இணைக்கப்பட்டு அவற்றை வினையாக்கும் வினை.

  ‘ஓலமிடு’
  ‘போரிடு’
  ‘கூச்சலிடு’
  ‘மேற்பார்வையிடு’

 • 2

  உயர் வழக்கு உயர்நடை கருதி முதன்மை வினையோடு சேர்க்கப்படும் துணை வினை.

  ‘தம்பீ! வீறுகொண்டு எழுந்திடு!’
  ‘நம் கொள்கையை மக்களுக்கு விளக்கிடல் வேண்டும்’