தமிழ் இறக்கு யின் அர்த்தம்

இறக்கு

வினைச்சொல்

 • 1

  உயரத்திலிருந்து அல்லது இருந்த இடத்திலிருந்து கீழே கொண்டுவருதல்.

  ‘வீட்டுக்கு வந்ததும் இடுப்பிலிருந்த குழந்தையைக் கீழே இறக்கிவிட்டாள்’
  ‘ஆசிரியர் தன் மூக்குக்கண்ணாடியை இறக்கிவிட்டுக்கொண்டார்’
  ‘பாலை அடுப்பிலிருந்து இறக்கு!’
  ‘இன்னும் இரண்டடி இறக்கினால் கிணற்றில் தண்ணீர் வந்துவிடும்’
  உரு வழக்கு ‘மனத்தில் உள்ள பாரத்தை அம்மாவிடம் இறக்கிவைக்க வேண்டும் போலிருந்தது’

 • 2

  (ஓர் இடத்துக்குக் கொண்டு வந்து அல்லது கொண்டுபோய்) சேர்த்தல்.

  ‘தீபாவளிக்காகக் கூட்டுறவு அங்காடியில் நூறு மூட்டை சர்க்கரை இறக்கப்பட்டிருக்கிறது’
  ‘தினமும் குழந்தையை சைக்கிளில் கொண்டுபோய்ப் பள்ளிக்கூடத்தில் இறக்கிவிடுவார்’
  ‘கலவரம் நடந்த இடத்தில் ராணுவ வீரர்களை இறக்கியிருக்கிறார்கள்’
  ‘வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் இறக்கப்பட்டுள்ளனர்’

 • 3

  (மேலிருப்பதை) கீழ்த் தளத்தை அடையச்செய்தல்.

  ‘இந்தப் புது ரக விமானத்தைக் கடலிலும் இறக்க முடியும்’

 • 4

  நீர்ப் பரப்பினுள் செல்லும்படி விடுதல்.

  ‘மாலுமிகள் நங்கூரத்தை இறக்கினார்கள்’

 • 5

  (சீட்டு ஆட்டத்தில் ஒருவர் தன் முறை வரும்போது) சீட்டைக் கீழே போட்டு விளையாடுதல்.

  ‘நீயா ராணியை இறக்கினாய்?’

 • 6

  (கால்பந்து போன்ற விளையாட்டுகளில் ஒருவருக்குப் பதிலாக மற்றொருவரை அல்லது கிரிக்கெட்டில் குறிப்பிட்ட நிலையில் ஒருவரை) விளையாட அனுப்புதல்.

  ‘இவ்வளவு நன்றாக விளையாடுபவரை முதலிலேயே இறக்கியிருக்கலாம்’

 • 7

  (சொட்டுசொட்டாக) வடித்தெடுத்தல்.

  ‘பனையிலிருந்தும் தென்னையிலிருந்தும் கள் இறக்குகிறார்கள்’

 • 8

  (விஷத்தின் வீரியத்தை) நீக்குதல்; அகற்றுதல்.

  ‘கிராமத்தில் பாம்பு கடித்தால் விஷத்தை இறக்க வைத்தியரிடம் போகிறார்கள்’

 • 9

  பேச்சு வழக்கு (கூரை, பந்தல் முதலியவற்றை) கீழ்நோக்கிச் சரிவாக அமைத்தல்.

  ‘நாட்டு ஓடுகளால் சார்ப்பு இறக்கிய வீடு’

 • 10

  (ஆட்சி, பதவி முதலியவற்றிலிருந்து) நீக்குதல்.

  ‘ஆளுங்கட்சியை ஆட்சியை விட்டு இறக்கும்வரை ஓயமாட்டோம் என்று அந்தத் தலைவர் முழக்கமிட்டார்’

 • 11

  (அலுவலகம், நிறுவனம் முதலியவற்றில் ஒருவருக்குத் தண்டனையாக) இருக்கும் பதவியிலிருந்து கீழ்நிலையில் உள்ள பதவிக்கு ஒருவரை மாற்றம் செய்தல்.

  ‘ஒழுங்கு முறை நடவடிக்கையாகக் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தவர், துணைக் கண்காணிப்பாளராகப் பதவி இறக்கப்பட்டார்’