தமிழ் இறுக்கம் யின் அர்த்தம்

இறுக்கம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  நெகிழ்வோ தொய்வோ இடைவெளியோ இல்லாத தன்மை; அழுத்தம்; உறுதி.

  ‘அவரது பிடியின் இறுக்கம் கூடிக்கொண்டேபோயிற்று’
  ‘இறுக்கமான சட்டை’
  ‘குழாய்களின் இணைப்புகள் இறுக்கமாக இருக்க வேண்டும்’
  ‘கால்நடைகள் தொடர்ந்து மிதிப்பதால் நிலம் இறுக்கம் அடைகிறது’
  உரு வழக்கு ‘அவர்களுடைய நட்பின் இறுக்கத்தை உணர எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது’

 • 2

  (கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதில்) உறுதி.

  ‘மத்தியதர குடும்பத்தின் இறுக்கமான கட்டுப்பாடுகளால் பல பாதிப்புகள் விளைகின்றன’
  ‘கலப்புத் திருமணங்கள் இறுக்கமான சமூக உறவுகளை நெகிழ்விக்கும் என்கிறார் ஆசிரியர்’

 • 3

  (எரிச்சல், கோபம், பதட்டம் போன்ற உணர்ச்சிகளால் முகத்தில் ஏற்படும்) கடுமை.

  ‘அதிகாரியின் இறுக்கமான முகத்தைப் பார்த்ததுமே சற்றுப் பயம் ஏற்பட்டது’
  ‘நடந்த விஷயத்தைத் தெளிவாகச் சொல்லச்சொல்ல அம்மாவின் முகத்தில் இருந்த இறுக்கம் குறைந்துகொண்டேவந்தது’
  ‘அந்தக் கேள்வியைக் கேட்டதுமே அவன் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து இறுக்கம் பரவியது’

 • 4

  (சச்சரவு, கோபம் அல்லது பழக்கமில்லாத இடம் போன்றவற்றால் சூழ்நிலையில் ஏற்படும்) இயல்பாக இல்லாத நிலை.

  ‘கூட்டத்தின் ஆரம்பத்திலேயே தலைவர் கலகலப்புடன் பேசியது சூழ்நிலையின் இறுக்கத்தைத் தணித்தது’
  ‘அவனுடன் நெருங்கிப் பழகப்பழக அவர்கள் உறவில் இருந்த இறுக்கம் குறைந்தது’
  ‘சந்தேகமும் பொறாமையும் நாளடைவில் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் இறுக்கத்தை ஏற்படுத்தின’

 • 5

  (எழுத்தில்) கருத்தின் ஓட்டத்திலும் மொழி நடையிலும் தளர்வு இல்லாத போக்கு; செறிவு.

  ‘எல்லாவற்றையும் எழுதிவிட வேண்டும் என்ற வேகத்தால் இந்தக் கட்டுரையில் இறுக்கமே இல்லை’
  ‘சிறுகதை என்பது ஒரு இறுக்கமான கலை வடிவம்’
  ‘இறுக்கமான செய்யுள் நடையைத் தளர்த்த வேண்டும் என்கிறார் புதுக் கவிஞர்’

 • 6

  புழுக்கம்.

  ‘ஜன்னலைத் திறந்து வைத்த பிறகும் இறுக்கமாகத்தான் இருக்கிறது’