தமிழ் இழு யின் அர்த்தம்

இழு

வினைச்சொல்இழுக்க, இழுத்து

 • 1

  (கையால் அல்லது ஏதேனும் இணைப்பின் மூலம்) தனக்குப் பின்னால் அல்லது தன்னை நோக்கி அல்லது மேல்நோக்கி வரச்செய்தல்.

  ‘ரப்பர் வளையத்தை அதிகமாக இழுக்காதே!’
  ‘சினிமாவுக்குப் போகலாம் என்று கையைப் பிடித்து இழுத்தான்’
  ‘செக்கு இழுக்கும் மாட்டை வண்டி இழுக்க வைக்க முடியாது’
  ‘சேற்றில் மாட்டிக்கொண்ட யானையைப் பளுதூக்கியால் இழுத்துக் காப்பாற்றினார்கள்’
  ‘கடைக்குள் இருந்தவனை வெளியே இழுத்துவந்து உதைத்தார்கள்’

 • 2

  (உடல் உறுப்புகள் நோய் காரணமாக) வெட்டிவெட்டி மடங்குதல்; சுண்டப்படுதல்.

  ‘காக்காய்வலிப்பு வந்தது மாதிரி அவனுக்குக் கையும் காலும் இழுத்துக்கொண்டன’

 • 3

  ஓர் இடத்தில் அல்லது ஒரு நிலையில் இருப்பதை மற்றொரு இடத்துக்கு அல்லது நிலைக்குக் கொண்டுவருதல்.

  ‘நாற்காலியைச் சுவர் ஓரமாக இழுத்துப்போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்’
  ‘ஜன்னல் திரையைச் சற்று இழு, வெளிச்சம் வரட்டும்’
  ‘அவள் பேசும்போது அடிக்கடி முக்காட்டை இழுத்துவிட்டுக்கொண்டாள்’
  ‘நாடாவை இழுத்துச் சுருக்குப் பையை மூடினான்’

 • 4

  (ஒன்றை அல்லது ஒருவரை ஏதேனும் ஒன்றில்) வலியத் தொடர்புபடுத்துதல்.

  ‘என்னை வம்புச் சண்டைக்கு இழுக்காதே!’
  ‘எதற்காக அனாவசியமாக அவன் பெயரை இழுக்கிறாய்?’

 • 5

  (பேச்சில் சொல்ல வந்ததைச் சொல்லாமல் தயக்கத்துடன்) நீட்டித்தல்.

  ‘‘அவர் உங்களைப் பற்றி...’ என்று மேலே சொல்லாமல் இழுத்தார்’
  ‘‘பரீட்சைக்குப் படிக்க வேண்டும்’ என்று இழுத்தாற்போல் சொன்னான்’

 • 6

  (வேலை முடிவுக்கு வராமல்) நீளுதல்.

  ‘வேலை இன்னும் எவ்வளவு நாள் இழுக்குமோ?’

 • 7

  (மரணத் தறுவாயில் இருப்பவரைக் குறித்து வரும்போது) உயிருக்குப் போராடுதல்.

  ‘அவர் நிலைமை இன்றைக்கோ நாளைக்கோ என்று இழுத்துக்கொண்டிருக்கிறது’

 • 8

  (மூச்சு) இரைத்தல்.

  ‘உனக்கு ஏன் இப்படி மூச்சு இழுக்கிறது; ஓடி வந்தாயா?’

 • 9

  (காற்று, புகை, பொடி முதலியவற்றை வாய் அல்லது மூக்கு வழியாக) உறிஞ்சி உள்ளே போகச் செய்தல்.

  ‘ஒரு முறை ஆழமாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டார்’
  ‘பீடியைப் பற்றவைத்துப் புகையை இழுத்து ஊதினார்’
  ‘‘சர்’ என்று பொடியை ஓர் இழுப்பு இழுத்தார்’

 • 10

  கவர்தல்; ஈர்த்தல்.

  ‘இரும்பைக் காந்தம் இழுப்பதுபோல் அவள் அழகு அவனை இழுத்தது’
  ‘ரசிகர்களை உங்கள் பக்கம் இழுக்கும் சக்தி உங்களுக்கு இருக்கிறது’
  ‘தேர்தல் சமயத்தில் ஒவ்வொரு கட்சியும் வாக்காளர்களைத் தங்கள் பக்கம் இழுக்கப் பெரும் முயற்சி செய்கிறது’

 • 11

  (தண்ணீர்) இறைத்தல்.

  ‘தண்ணீர் இழுத்துஇழுத்துக் கையெல்லாம் வலிக்கிறது’

 • 12

  (கோடு) வரைதல்.

  ‘வயது பத்தாகிறது. நேராக ஒரு கோடு இழுக்கத் தெரியவில்லையே!’

 • 13

  (கம்பியாக, இழையாக) நீண்டுவருமாறு செய்தல்.

  ‘இரும்பைக் கம்பியாக இழுக்கலாம்’

 • 14

  இலங்கைத் தமிழ் வழக்கு (முடி) வாருதல்.

  ‘உன் உச்சி வடிவாக இல்லை; முடியைச் சரியாக இழு’
  ‘தலை இழுத்து முகம் கழுவிக்கொண்டு புறப்பட்டாள்’
  ‘அவர் நடுஉச்சி பிரித்துதான் தலை இழுப்பார்’