உடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உடை1உடை2உடை3

உடை1

வினைச்சொல்உடைய, உடைந்து, உடைக்க, உடைத்து

 • 1

  (விசையோடு தாக்கப்படுவதால் அல்லது அழுத்துவதால் ஒன்று) துண்டாதல்; பிளத்தல்.

  ‘சவுக்குக் கட்டையால் அடித்ததில் திருடனின் கால் உடைந்தது’
  ‘பளு தாங்காமல் நாற்காலி உடைந்தது’
  ‘விபத்தில் அவருடைய மண்டை உடைந்து ரத்தம் ஒழுகியது’

 • 2

  (கீழே விழுந்து) துண்டுதுண்டாதல்.

  ‘பீங்கான் கோப்பை உடைந்து நொறுங்கியது’
  ‘மாடியிலிருந்து விழுந்த தொட்டி உடைந்து சிதறியது’
  ‘கை தவறி விழுந்து என் கண்ணாடி உடைந்தது’

 • 3

  (குழாய், நாளம் போன்றவற்றில் அழுத்தம் அதிகமாவதால்) விரிசல் ஏற்படுதல்.

  ‘மூளையில் ரத்த நாளம் உடைந்துவிட்டதாம்’
  ‘தொற்றுக்குள்ளான குடல்வால் சில சமயம் உடைந்துவிடும்’
  ‘இயந்திரத்தில் வெப்பம் அதிகரித்ததால் குழாய் உடைந்துவிட்டது’
  ‘சிறுவன் ஊதிக்கொண்டிருந்த பலூன் உடைந்தது’
  ‘நீரின் மேற்பரப்பில் குமிழிகள் தோன்றி உடைந்துகொண்டிருந்தன’

 • 4

  (ஆறு, குளம் போன்றவற்றின் கரை) தகர்தல்.

  ‘ஏரிக்கரை உடைந்து வெள்ளம் ஊருக்குள் புகுந்தது’

 • 5

  (கட்சி, நிறுவனம் போன்ற அமைப்புகள்) பிளவுபடுதல்.

  ‘தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு கட்சி உடைந்துவிட்டது’
  ‘சொத்துத் தகராறின் காரணமாகக் குடும்பம் உடைந்துவிடும்போல் இருக்கிறது’

 • 6

  (உடம்பிலுள்ள கட்டி பழுத்து) கண்திறத்தல்; பிளத்தல்.

  ‘கட்டி நன்றாகப் பழுத்து உடைந்துவிடும் நிலையில் இருக்கிறது’

 • 7

  (குரல்) மாறுபடுதல்; (சோகத்தால்) தழுதழுத்தல்.

  ‘பாகவதர் குரல் உடைந்துவிட்டது’
  ‘தன் பிள்ளையை வழியனுப்பும்போது அவள் குரல் உடைந்து கண்கள் கலங்கின’

 • 8

  (மனம்) தளர்தல்.

  ‘மனைவி இறந்ததிலிருந்து அவர் மிகவும் உடைந்துபோய்விட்டார்’
  ‘ஒரு வேலையும் கிடைக்காததால் அவன் மனம் உடைந்தான்’

 • 9

  (மறைக்கப்பட்டிருந்தது) வெளிப்படுதல்.

  ‘அவன் குட்டு உடைந்தது’

உடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உடை1உடை2உடை3

உடை2

வினைச்சொல்உடைய, உடைந்து, உடைக்க, உடைத்து

 • 1

  (விசையுடன் தாக்கி, எறிந்து அல்லது முறித்து) துண்டாக்குதல்; பிளத்தல்.

  ‘சிறுவன் பொம்மையைத் தரையில் வீசி உடைத்தான்’
  ‘இது கல் உடைக்கும் இயந்திரம்’
  ‘கையிலிருந்த குச்சியை இரண்டாக உடைத்தேன்’
  ‘விறகு உடைக்க ஆள் இன்னும் வரவில்லை’
  ‘கொள்ளையர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்திருக்கிறார்கள்’
  ‘கரையை உடைத்துக்கொண்டு வெள்ளம் ஊருக்குள் பாய்ந்தது’

 • 2

  (தானியங்களை) குறுணை ஆக்குதல்.

  ‘திருகையில் உடைத்த அரிசியைக் கஞ்சி காய்ச்சினாள்’
  ‘உடைக்கப்பட்ட தானியங்களைக் கோழிகளுக்கு உணவாகக் கொடுக்கிறார்கள்’
  ‘மக்காச்சோளத்தை உடைத்துத் தவிட்டுடன் தீனியில் கலக்கவும்’

 • 3

  (முட்டை, தேங்காய் போன்றவற்றின்) ஓட்டைப் பிளத்தல்.

  ‘முட்டையை உடைத்துப் பாலுடன் கலந்து குழந்தைக்குக் கொடுத்தாள்’
  ‘துவையல் அரைக்கத் தேங்காயை உடை’
  ‘சிறுவர்கள் விளாம்பழத்தை உடைத்துச் சாப்பிட்டார்கள்’

 • 4

  (கட்டியிருப்பதை அல்லது ஒட்டியிருப்பதை) பிரித்தல்; (மூடியாகப் பொருத்தப்பட்டிருப்பதை) திறத்தல்.

  ‘துணிக் கட்டை உடைத்து அவர் ஒவ்வொன்றாக எடுத்து விலைபோட்டார்’
  ‘தபாலில் வந்த கடிதத்தை அப்பா உடைத்துப் படித்தார்’
  ‘அவருக்குச் சோடா உடைத்துக் கொடு’

 • 5

  (பூட்டைச் சாவியால் திறக்காமல்) தட்டி நீக்குதல்.

  ‘திருடர்கள் பூட்டை உடைத்து அறைக்குள் நுழைந்தார்கள்’
  ‘சாவியைத் தொலைத்துவிட்டதால் பூட்டை உடைக்க வேண்டிவந்தது’
  ‘கோவில் உண்டியலை உடைத்தவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்’

 • 6

  (கடலையை) தோல் நீக்கிப் பருப்பை எடுத்தல்.

 • 7

  (துவரை, பயறு, உளுந்து போன்றவற்றின்) முழுப் பருப்பை இரண்டாக்குதல்.

  ‘துவரை உடைக்க ஆட்களுக்குச் சொல்லியிருக்கிறேன்’

 • 8

  (கட்சி, நிறுவனம் போன்ற அமைப்புகளின்) ஒற்றுமையைக் குலைத்தல்.

  ‘எங்கள் கூட்டுறவுச் சங்கத்தை உடைக்க அவர் செய்த முயற்சிகள் வீணாயின’

 • 9

  (போராட்டம் போன்றவற்றை) செயலிழக்கச் செய்தல்.

  ‘ஆலை நிர்வாகம் குண்டர்களின் உதவியுடன் வேலைநிறுத்தத்தை உடைக்க முயல்வதாக அவர் புகார் கூறினார்’
  ‘தீவிரவாதக் குழுக்களை உடைக்கப் புது உத்திகளைப் பயன்படுத்த அரசு தயங்காது’

 • 10

  (ரகசியம், உண்மை போன்றவற்றை) வெளியாக்குதல்.

  ‘அவன் என்னிடம் ரகசியமாகச் சொன்ன விஷயத்தை நான் போட்டு உடைத்துவிட்டேன்’
  ‘உண்மையை உடைத்துச் சொல்லிவிட வேண்டியதுதான்’

 • 11

  (மரபு, கோட்பாடு போன்றவற்றை) மீறுதல்; மாற்றுதல்.

  ‘வாசகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்க இலக்கணத்தை உடைக்கிறாரா இந்த ஆசிரியர்?’
  ‘ஒரு மரபை உடைப்பது இன்னொரு மரபை ஆரம்பித்துவைப்பதுதான்’
  ‘‘மரபைக் கண்மூடித்தனமாக உடைப்பது கூடாது’ என்றார் அவர்’
  ‘திரை இலக்கணத்தை உடைத்தவர் என்று இந்த இயக்குநரைச் சொல்லலாம்’

 • 12

  (புதிரை) விடுவித்தல்.

  ‘குறுக்கெழுத்துப் போட்டிப் புதிர்களை உடைக்க அவர் உத்திகள் சொல்லித்தந்தார்’

 • 13

  (கற்பனை, மாயை போன்றவற்றை) தகர்த்தல்.

  ‘திரைப்படம் ஒரு அதிசயம் என்ற மாயையைத் தொலைக்காட்சி அலைவரிசைகள் உடைத்துவிட்டன’

உடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உடை1உடை2உடை3

உடை3

பெயர்ச்சொல்

 • 1

  ஆடை; உடுப்பு.

  ‘வீட்டுக்கு வந்ததும் வேறு உடை அணிந்துகொண்டான்’
  ‘ராணுவ உடையில் வந்தார்’