தமிழ் உண்டாகு யின் அர்த்தம்

உண்டாகு

வினைச்சொல்உண்டாக, உண்டாகி

 • 1

  (இயற்கையில் அல்லது இயற்கையாக ஒன்று) தோன்றுதல்.

  ‘பூமி உண்டானபோது அது ஒரு பெரிய நெருப்புக் கோளமாக இருந்தது’
  ‘பிரபஞ்சம் எப்படி உண்டாயிற்று என்பது உனக்குத் தெரியுமா?’
  ‘வங்கக் கடலில் உண்டாகியிருக்கும் புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது’
  ‘இரண்டு ஹைட்ரஜன் மூலக்கூறுகளும் ஒரு ஆக்ஸிஜன் மூலக்கூறும் இணைவதால் நீர் உண்டாகிறது’

 • 2

  (குறிப்பிட்ட முறையின் மூலம் ஒரு பொருள், சக்தி முதலியன) உருவாதல்.

  ‘புல்லாங்குழலில் உண்டான தெய்வீக இசை காற்றில் மிதந்து வந்தது’
  ‘திசு வளர்ப்பு முறையில் உண்டான புதிய வகைச் செடி’

 • 3

  (கண்டுபிடிப்பால் ஒன்று) உருவாதல்.

  ‘அந்த இயந்திரம் உண்டான விதம் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது’
  ‘இது வேறு சோதனை செய்துகொண்டிருக்கும்போது உண்டாகிய புதிய வேதிப்பொருள்’

 • 4

  (குறிப்பிட்ட தன்மை, உணர்வு, சூழல் போன்றவை) ஏற்படுதல்.

  ‘குழந்தைகள் ஊருக்குப் போய்விட்டதால் வீடே வெறிச்சிட்டது போன்ற தோற்றம் உண்டாகி யது’
  ‘அவருக்குச் சந்தேகம் உண்டாக நாம் காரணமாகிவிடக் கூடாது’
  ‘அவரது இழப்பால் கட்சியில் உண்டான வெறுமையை யாராலும் நிரப்ப முடியாது’
  ‘அவளைப் பார்த்ததும் எனக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று’
  ‘இளைஞர்களுக்கு ஆர்வம் உண்டாகும்படியான சொற்பொழிவு’
  ‘கர்வம் உண்டாகிவிட்டால் பிறகு எப்படி மற்றவர்களை மதிப்பான்?’

 • 5

  (நோய் அல்லது காயம்) ஏற்படுதல்.

  ‘புகைபிடிப்பதால் புற்றுநோய் உண்டாக வாய்ப்புள்ளது’
  ‘காய்ச்சல் அதிகமாகும்போது குழந்தைகளுக்கு ஜன்னி உண்டாகலாம்’
  ‘நான் கீழே விழுந்ததுதான் எனக்குக் காயம் உண்டாகக் காரணம்’

 • 6

  (ஒரு அமைப்பு அல்லது கருத்து முதலியவை) உருவாதல்.

  ‘இந்த இயக்கம் உண்டானபோது அரசு அதைத் தடைசெய்ய முயன்றது’
  ‘புதிய சமுதாயம் உண்டாகும்போது நாம் எழுச்சி நடைபோடுவோம்’
  ‘இப்படிப்பட்ட எண்ணம் உனக்கு ஏன் உண்டானது?’

 • 7

  பேச்சு வழக்கு கருவுறுதல்.

  ‘கல்யாணம் ஆகி இரண்டு வருடங்கள் கழித்து என் மகள் உண்டாகியிருக்கிறாள்’
  ‘மனைவி உண்டாகியிருக்கிறாள் என்ற செய்தியைக் கேட்டு சந்தோஷத்தில் அவன் மிதந்தான்’