தமிழ் உதிர் யின் அர்த்தம்

உதிர்

வினைச்சொல்உதிர, உதிர்ந்து, உதிர்க்க, உதிர்த்து

 • 1

  (ஒன்றாகச் சேர்ந்திருப்பது அல்லது ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டிருப்பது பிரிந்து) கீழே விழுதல்.

  ‘உதிர்ந்து கிடந்த சுள்ளிகளை அவள் பொறுக்கிக்கொண்டிருந்தாள்’
  ‘முடி உதிர்வதைத் தடுக்கத் தைலம்’
  ‘இந்தப் பழமையான கோவிலில் சுவரோவியங்கள் சரியாகப் பராமரிக்கப்படாததால் உதிர்ந்துகொண்டிருக்கின்றன’
  ‘இந்த மருந்தைப் பயன்படுத்தினால் மூன்றே நாட்களில் புண் குணமாகிப் பொருக்கு உதிர்ந்துவிடும்’
  உரு வழக்கு ‘சிரிப்பு, கிண்டல், இடக்கு எல்லாம் அவரிடமிருந்து உதிர்ந்துபோய்விட்டிருந்தன’
  உரு வழக்கு ‘அவருடைய வீணை வாசிப்பில் ஸ்வர ஜாலங்கள் மத்தாப்புப் பொறிபோல் உதிர்ந்தன’
  உரு வழக்கு ‘என் பாட்டி பேச ஆரம்பித்தால் ஒரே பழமொழியாக உதிரும்’

 • 2

  (கண்ணீர் துளித்துளியாக) கீழே விழுதல்.

  ‘கண்களிலிருந்து நீர் பொலபொலவென்று உதிர்ந்தது’

 • 3

  பொடிப்பொடியாக விழுதல்; நொறுங்குதல்.

  ‘கை பட்டதும் பழைய புத்தகத்தின் பக்கங்கள் உதிரத் தொடங்கின’

தமிழ் உதிர் யின் அர்த்தம்

உதிர்

வினைச்சொல்உதிர, உதிர்ந்து, உதிர்க்க, உதிர்த்து

 • 1

  (ஒன்றாகச் சேர்ந்திருப்பதை அல்லது ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டிருப்பதை ஒன்றன்பின் ஒன்றாக அல்லது ஒரே சமயத்தில்) கீழே விழச் செய்தல்.

  ‘புறா தன் அலகால் கோதி இறகை உதிர்த்தது’
  ‘சட்டையில் ஒட்டியிருந்த ஈர மணலைத் தட்டி உதிர்த்தான்’
  ‘‘பல்லை உதிர்த்துவிடுவேன்’ என்று அவன் பயமுறுத்தினான்’
  ‘இடியாப்பத்தை உதிர்த்து உப்புமா செய்யலாம்’

 • 2

  (சொற்கள், கருத்துகள் போன்றவற்றை) ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்படுத்துதல்.

  ‘கோபத்தில் வார்த்தைகளை உதிர்த்துவிட்டுப் பின்னால் வருத்தப்படாதே!’
  ‘நேர்காணலில் அவர் உதிர்த்த பல கருத்துகளில் இதுவும் ஒன்று’
  ‘ஒவ்வொரு பக்கத்திற்கும் மூன்று நகைச்சுவைத் துணுக்குகளை உதிர்த்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு எழுதியதைப் போல இருக்கிறது’
  ‘பேச்சாளர் நிமிடத்திற்கு ஒரு பொன்மொழியாக உதிர்த்துக்கொண்டிருந்தார்’

 • 3

  (புன்னகையை, சிரிப்பை) வெளிப்படுத்துதல்.

  ‘அவள் கேள்விக்குப் பதில் சொல்லாமல் சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள்’

 • 4

  இலங்கைத் தமிழ் வழக்கு (பாம்பு சட்டை) உரித்தல்.