தமிழ் எங்கே யின் அர்த்தம்

எங்கே

வினையடை

 • 1

  (குறிப்பிட்ட) எந்த இடத்தில்; (குறிப்பிட்ட) எந்த இடத்திற்கு.

  ‘உன் வீடு எங்கே இருக்கிறது?’
  ‘வீட்டில் எங்கே பார்த்தாலும் புத்தகம்தான்’
  ‘எங்கே வந்தால் உன்னைச் சந்திக்கலாம்?’

 • 2

  (குறிப்பிடப்படுவது) எந்த நிலையில்; எந்த நிலைக்கு.

  ‘நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை’
  ‘உறவுகளுக்கிடையே எங்கே சிக்கல் ஏற்படுகிறது என்று யோசித்துப் பார்க்கிறேன்’
  ‘எங்கேயோ ஆரம்பித்த பேச்சு வேறு எங்கேயோ போய்க்கொண்டிருந்தது’
  ‘தன் நிலை புரியாமல் ஆடிக்கொண்டிருப்பது அவனை எங்கே கொண்டுபோய் நிறுத்தப்போகிறதோ?’

 • 3

  ஒன்று நிகழ்ந்திருக்கக் கூடாது அல்லது நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்ற நிலையில் அவ்வாறு நிகழ்ந்ததற்கான காரணத்தைக் கேட்கும் முறையில் பயன்படுத்தும் சொல்; ஏன்.

  ‘அவன் எங்கே இங்கு வந்தான்?’
  ‘நீங்கள் எங்கே இவ்வளவு தூரம்?’
  ‘தக்காளியும் கத்தரிக்காயும்தானே உன்னை வாங்கிவரச் சொன்னேன்; மிளகாய் எங்கே இடையில் வந்தது?’
  ‘இவ்வளவு பணம் எங்கே உன்னிடத்தில் என்று என்னைச் சந்தேகத்துடன் கேட்டான்’

 • 4

  முறைப்படி அல்லது எதிர்பார்த்தபடி ஒன்று நிகழாதபோது அல்லது இல்லாதபோது அதற்கான காரணம் அல்லது விளக்கம் கோரும் முறையில் பயன்படுத்தும் சொல்.

  ‘எனக்குச் சேர வேண்டிய பங்கு எங்கே?’
  ‘பெண்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த 33% இடஒதுக்கீடு எங்கே?’
  ‘இன்று நீ தருவதாகச் சொன்ன என் புத்தகம் எங்கே?’
  ‘‘மிட்டாய் எங்கே?’ என்று என் மகள் கேட்டாள்’

 • 5

  ஒன்று நிகழ்வதற்கு வாய்ப்பான நிலை இல்லை என்று ஒருவர் கருதுவதைக் கேள்வியாக வெளிப்படுத்தி உறுதிப்படுத்துவதற்குப் பயன்படும் சொல்.

  ‘கட்டுரை எழுதுவதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது?’
  ‘நீங்கள் சொல்கிறபடி செய்யலாம். ஆனால் அதற்கு ஆள் எங்கே?’
  ‘அவன் எங்கே இதைச் செய்யப் போகிறான்?’

 • 6

  இணைத்துக் கூறப்படும் இருவருக்கும் அல்லது இரண்டுக்கும் இடையே உள்ள இடைவெளியின் மிகுதியைக் காட்டும் முறையில் பயன்படுத்தும் சொல்.

  ‘சென்னை எங்கே, லண்டன் எங்கே?’
  ‘அவர் வீட்டில் போய்ப் பெண் கேட்பதா? அவர் எங்கே, நாம் எங்கே?’

 • 7

  குறிப்பிடப்படும் ஒன்று நிகழவில்லை என்பதையோ அல்லது குறிப்பிடப்படும் விதத்தில் ஒன்று நிகழவில்லை என்பதையோ தெரிவிக்கப் பயன்படும் சொல்.

  ‘நான் எங்கே அவனிடம் கடன் வாங்கினேன்?’
  ‘மாணவர்கள் என்னை எங்கே பாடம் நடத்தவிட்டார்கள்?’
  ‘அவர் எங்கே எழுதினார்; நான் அல்லவா எழுதிக் கொடுத்தேன்?’

தமிழ் எங்கே யின் அர்த்தம்

எங்கே

இடைச்சொல்

 • 1

  ஒன்று நிகழ்ந்துவிடுமோ என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘எங்கே அவன் வந்துவிடப்போகிறானோ என்று நினைத்து வெளியே போய்விட்டார்’
  ‘எங்கே தனக்கு வேலை பறிபோய்விடுமோ என்று பயப்படுகிறான்’
  ‘எங்கே குடும்பத்தில் குழப்பம் வந்து விடுமோ என்ற கவலையில் ஆழ்ந்து போனார்’
  ‘இந்திய அணி எங்கே தோற்றுவிடுமோ என்ற படபடப்பு அவனுக்கு ஏற்பட்டது’

 • 2

  ஒரு செயலைச் செய்ய ஊக்குவிக்கும் முறையிலோ அல்லது சவால்விடும் முறையிலோ ஒரு உணர்ச்சியைத் தெரிவிக்க வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘எங்கே, உன் பெயரைச் சொல் பாப்பா!’
  ‘எங்கே, என் மீது கைவைத்துப்பார்!’
  ‘எங்கே, எல்லாரும் கைதட்டுங்கள் பார்க்கலாம்!’
  ‘எங்கே, எல்லாரும் தயாராகத்தானே இருக்கிறீர்கள்?’

 • 3

  ஒருவர் அல்லது ஒன்று ஒரு இடத்தில் இல்லாதது குறித்தும் ஒரு செயல் நிகழாதது குறித்தும் கேட்கப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘எங்கே, வீட்டில் குழந்தைகளைக் காணோம்?’
  ‘எங்கே, இன்று கிரிக்கெட் விளையாடப் போகவில்லையா?’
  ‘எங்கே, அவர் வருவதாகக் கடிதம் போட்டிருந்தாரே?’