தமிழ் எட்டு யின் அர்த்தம்

எட்டு

வினைச்சொல்எட்ட, எட்டி

 • 1

  (ஓர் இடத்தை, இலக்கை, நிலையை) அடைதல்.

  ‘பரபரப்பாக வந்தவர் வீட்டை எட்டும் முன்பே மயங்கி விழுந்தார்’
  ‘அவர் ஓய்வு பெறும் வயதை எட்டிவிட்டார்’
  ‘இந்தியாவின் மக்கள்தொகை நூறு கோடியை எட்டிவிட்டது’

 • 2

  (மூக்கு, காது முதலிய புலனை அல்லது புலனுக்கு) சென்றடைதல்; (கைக்கு) வந்து சேர்தல்.

  ‘தாளிக்கும் வாசம் மூக்கை எட்டியது’
  ‘செய்தி என் காதுக்கும் எட்டியது’
  ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாகத்தான் இதுவும் இருக்கிறது’

 • 3

  (பெரும்பாலும் செயப்பாட்டுவினை வாக்கியங்களில்) (கருத்து அல்லது தீர்மானம் போன்றவற்றை) அடைதல்.

  ‘மாநிலங்களிடையேயான கூட்டத்தில் நீர்ப் பங்கீடு குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை’

 • 4

  (அறிவுக்கு) புலப்படுதல்.

  ‘இந்தப் பையனுக்குப் புரிந்துவிட்டது; என் புத்திக்குத்தான் எட்டவில்லை’

 • 5

  (மற்றொன்றை அடைய அல்லது மற்றொன்றுக்குச் சென்றுசேர) போதியதாதல்; (மேலே அல்லது கீழே இருப்பதை) எடுக்க இயலுதல்.

  ‘கிணற்றில் விழுந்த வாளியை எடுப்பதற்கா இந்தக் கயிறு? கயிறு எட்டுமா?’
  ‘அலமாரியின் மேல்தட்டில் இருக்கும் ஜாடி உனக்கு எட்டாது’

தமிழ் எட்டு யின் அர்த்தம்

எட்டு

பெயர்ச்சொல்

 • 1

  (நடக்கும்போதோ தாவும்போதோ) இரண்டு கால்களுக்கு இடையில் உள்ள தூரம்; அடி.

  ‘சில எட்டுகள்தான் எடுத்துவைத்திருப்பேன். அதற்குள் யாரோ என்னைக் கூப்பிட்டார்கள்’
  ‘தேங்கிக்கிடந்த நீரை ஒரே எட்டில் தாவிக் கடந்து சென்றார்’
  ‘காகம் தன் சிறிய கால்களால் ஓரிரு எட்டுகள் வைத்துச் சுவரின் மீது நகர்ந்தது’

தமிழ் எட்டு யின் அர்த்தம்

எட்டு

பெயர்ச்சொல்

 • 1

  ஏழு என்னும் எண்ணுக்கு அடுத்த எண்.