எதிர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

எதிர்1எதிர்2எதிர்3

எதிர்1

வினைச்சொல்எதிர்க்க, எதிர்த்து

 • 1

  (ஒருவரை, ஒரு போக்கை, ஒரு நிலையை) மறுத்து மாறான நிலையை மேற்கொள்ளுதல்.

  ‘பெண் விடுதலை என்பது ஆண்களை எதிர்ப்பது அன்று’
  ‘பெரும்பாலோர் எதிர்த்ததால் சட்டத் திருத்தம் கைவிடப்பட்டது’

 • 2

  (நோயை) தடுத்தல்.

  ‘காச நோயை எதிர்க்கக்கூடிய சக்தி அவன் உடம்பில் இல்லை’

எதிர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

எதிர்1எதிர்2எதிர்3

எதிர்2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  ஒன்றின் திசைக்கு முற்றிலும் மாறாக இருப்பது; நேர் முன்னால் இருப்பது; நேர் மறுபுறம்.

  ‘எதிர் வீடு’
  ‘நேர் எதிர்த் திசை’
  ‘எதிர் எதிராக இருவர் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தார்கள்’

 • 2

  (சாட்சி, ஆதாரம், தகவல் போன்றவற்றில்) ஒன்றை மறுப்பது அல்லது சாதகம் அல்லாததாக இருப்பது.

  ‘தலைவருக்கு எதிராக விடுக்கப்பட்ட அறிக்கை’
  ‘நடைமுறைக்கு எதிரான சட்டம்’
  ‘குற்றவாளிக்கு எதிரான சாட்சிகளை அரசுத் தரப்பு வக்கீல் விசாரணை செய்தார்’
  ‘அமைச்சருக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்ட முயல்கிறார் அவர்’

 • 3

  (ஒன்றுக்கு அல்லது ஒருவருக்கு) எதிர்ப்பைக் காட்டுவது; மறுப்பாகச் செயல்படுவது.

  ‘அரசுக்கு எதிரான மாணவர் போராட்டம்’
  ‘அவர் வன்முறைக்கு எதிராகத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார்’
  ‘கல்லூரி நிர்வாகத்திற்கு எதிரான கோஷங்கள்’

 • 4

  (தன்மை, அளவு, இயக்கம் முதலியவற்றில்) முற்றிலும் மாறுபடுவது.

  ‘புவியீர்ப்பு விசைக்கு எதிரான விசை’
  ‘நீ சொன்னதற்கு அப்படியே எதிராக அல்லவா அவன் இருக்கிறான்!’

 • 5

  (கொள்கை, சட்டம், விதி போன்றவற்றுக்கு) புறம்பானது; மாறுபாடானது.

  ‘நமது கட்சியின் கொள்கைக்கு எதிரான எதையும் நாம் அனுமதிக்க மாட்டோம்’
  ‘சட்டத்திற்கு எதிராக நாம் நடக்க முடியாது’
  ‘மதக் கலவரத்தைப் பற்றிச் சில பத்திரிகைகள் உண்மைக்கு எதிராக எழுதி வருகின்றன’

 • 6

  (நாணயங்களின் மதிப்பீட்டை ஒப்பிடும்போது) நிகரானது.

  ‘டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று குறைந்தது’

 • 7

  (ஒன்றை) தடுத்துச் செயல்படுவது; (நோய் போன்றவற்றை) தடுப்பது.

  ‘தீவிரவாதத்திற்கு எதிரான போர்’
  ‘காலராவுக்கு எதிரான தடுப்பூசி’
  ‘இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் கிருமிகளுக்கு எதிராகச் செயல்படுகின்றன’

 • 8

  இயற்பியல்
  (பெயரடையாக) (மின்சாரம் தொடர்பாக வரும்போது) எலெக்ட்ரான்களைக் கொண்டிருப்பது.

  ‘எதிர் மின்னோட்டம்’
  ‘எதிர் மின்னணு’

எதிர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

எதிர்1எதிர்2எதிர்3

எதிர்3

இடைச்சொல்

 • 1

  ஒரு வழக்கில் ‘வாதி’, ‘பிரதிவாதி’ என்ற இரண்டு பெயர்ச்சொற்களுக்கு இடையே ‘எதிராக’ என்ற பொருளைக் குறிக்கப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘தீர்ப்பின் விவரம்: கோவிந்தன் எதிர் தமிழ்நாடு அரசு’

 • 2

  ஒரு போட்டியில் ‘எதிராக’ என்ற பொருளில் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘இந்தியா எதிர் இங்கிலாந்து’