தமிழ் என யின் அர்த்தம்

என

இடைச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு ‘என்று’ என்னும் பொருளில் வரும் இடைச்சொல்.

  ‘பெருகிவரும் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என அறிஞர்கள் கருதுகின்றனர்’

 • 2

  உயர் வழக்கு ‘போல’ என்ற உவமைப் பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘புலி எனப் பாய்ந்தான்’
  ‘உங்கள் வார்த்தை தேன் என இனிக்கிறது’

தமிழ் என் யின் அர்த்தம்

என்

வினைச்சொல்என, என்று

 • 1

  (இது ஒருவருடைய கூற்று அல்லது கருத்துரை என்பதைத் தெரிவிக்கும்பொருட்டு அதன் பின் வரும்போது) (‘....’ என்று) சொல்லுதல்; (‘....’ என்று) கூறுதல்.

  ‘‘நீ கேட்டதை மாலையில் வாங்கி வருகிறேன்’ என்றான் அவன்’
  ‘இது மக்களுக்கு நன்மை தரும் திட்டம் என்போம்’
  ‘புவியியல் வல்லுநர்கள் நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள்’

 • 2

  (ஒலிக்குறிப்புச் சொற்கள், சில வகை உணர்ச்சிகளைக் குறிக்கும் சொற்கள் ஆகியவற்றின் பின் வரும்போது) (குறிப்பிட்ட ஒலிக்குறிப்பை) எழுப்புதல் அல்லது (குறிப்பிட்ட உணர்வை) தருதல் என்பதைத் தெரிவிப்பது.

  ‘பூனை ‘மியாவ்’ என்றது’
  ‘அஜீரணத்தால் வயிறு ‘கடபுடா’ என்கிறது’
  ‘குற்றம் செய்த நெஞ்சு ‘குறுகுறு’ என்கிறது’

 • 3

  ஒரு செயல் கைவருவதில்லை அல்லது பழக்கமாவதில்லை அல்லது முயற்சி செய்தாலும் பலன் கிடைப்பதில்லை என்பதைத் தெரிவிப்பது.

  ‘என் மகளுக்குக் கர்நாடக சங்கீதம் வர மாட்டேன் என்கிறது’
  ‘மாடுகள் இரண்டும் வண்டியை இழுக்க மாட்டேன் என்கின்றன’
  ‘எவ்வளவு மருந்து அடித்தாலும் ஈக்கள் சாவோமா என்கின்றன’
  ‘நான் என்ன சொன்னாலும் என் பையன் படிக்க மாட்டேன் என்கிறான்’

 • 4

  (முன்னிலை நிகழ்கால முற்று வடிவங்கள் மட்டும்) செயல் நிகழ்ந்த தீவிரத்தைத் தன் முன் இருப்பவருக்கு உணர்த்தப் பயன்படுவது.

  ‘கேட்ட கேள்விக்கு எப்படிப் பதில் சொன்னான் என்கிறாய்!’
  ‘குழந்தை எப்படி அழுதது என்கிறீர்கள்!’

தமிழ் என் யின் அர்த்தம்

என்

பிரதிப்பெயர்

 • 1

  ‘நான்’ என்பது வேற்றுமை உருபு ஏற்கும்போது திரியும் வடிவம்.

  ‘என்னை ஏன் அடித்தாய்?’
  ‘என்னையும் கோவிலுக்குக் கூப்பிட்டாள்’
  ‘எனக்கு ஒன்றும் தெரியாது’
  ‘என் வீடு’