தமிழ் என்ன யின் அர்த்தம்

என்ன

பிரதிப்பெயர்

 • 1

  அஃறிணை ஒருமையைக் குறிக்கும் வினாச் சொல்; ‘எப்படிப்பட்ட ஒன்று’.

  ‘அவர் கையில் வைத்திருக்கிறாரே அது என்ன?’
  ‘சாவு என்பது என்ன?’
  ‘என்ன நடந்தது, என்ன ஆயிற்று?’

 • 2

  கேட்கப்படும் கேள்விக்கு எதிர்மறைப் பதிலை உணர்த்துவதற்குப் பயன்படுவது.

  ‘இதைச் செய்ய நான் என்ன மடையனா? கேட்டதையெல்லாம் தருவதற்கு அவர் என்ன காமதேனுவா?’
  ‘அவன் பெரிய கொம்பனா என்ன?’
  ‘நம் குழந்தைகளுக்கு ஆங்கிலக் கல்விதான் வேண்டும் என்பது என்ன கட்டாயம்?’
  ‘அவன்தான் குற்றவாளி என்பதில் என்ன சந்தேகம்?’
  ‘இவ்வளவு படித்துப் பயன் என்ன?’

 • 3

  செய்திருக்க வேண்டிய ஒன்றை ஒருவர் செய்யாததைக் கண்டிக்கப் பயன்படுத்தும் வினாச் சொல்.

  ‘என்னிடம் சொல்லிவிட்டுப் போவதற்கு என்ன?’
  ‘கொஞ்சம் பொறுத்தால்தான் என்ன? அதற்குள் புறப்பட்டுப் போய்விட்டாய்’

தமிழ் என்ன யின் அர்த்தம்

என்ன

பெயரடை

 • 1

  எந்த; எந்த வகையான.

  ‘இது என்ன கட்டடம்?’
  ‘இரவு என்ன சாப்பாடு?’
  ‘இது என்ன மரம்?’
  ‘என்ன வாழ்க்கை, ஒன்றுமே பிடிக்கவில்லை’
  ‘என்ன மனிதர் இவர், பத்து ரூபாய் தர்மம் தர மூக்கால் அழுகிறார்’

 • 2

  தன்மையின் மிகுதியைக் கூறும் சொல்; எவ்வளவு.

  ‘என்ன திமிர் இருந்தால் இப்படிப் பேசுவாய்?’
  ‘என்ன பேராசை இருந்தால் கூடப் பிறந்த தம்பியையே அவன் ஏமாற்றுவான்?’

தமிழ் என்ன யின் அர்த்தம்

என்ன

வினையடை

 • 1

  எவ்வளவு.

  ‘என்னதான் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றினாலும் மறுபடியும் அங்கே கடை போட்டுவிடுகிறார்கள்’
  ‘என்ன உழைத்தாலும் கடைசியில் நல்ல பெயர் கிடைப்பதில்லை’
  ‘நீ என்னதான் அழைத்தாலும் நான் வரமாட்டேன்’
  ‘இந்தத் திட்டத்திற்காக என்ன கஷ்டப்பட்டாலும் தகும்’

தமிழ் என்ன யின் அர்த்தம்

என்ன

இடைச்சொல்

 • 1

  உரையாடலைத் தொடங்கும் விதத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘என்ன, வேலையெல்லாம் முடிந்து விட்டதா?’
  ‘என்ன, அம்மா ஊரிலிருந்து வந்திருக்கிறார்கள் போலிருக்கிறதே?’

 • 2

  வினா வாக்கியம் தெரிவிக்கும் செய்தி ஒருவருக்கு வியப்பு, அதிர்ச்சி முதலியவற்றை ஏற்படுத்துவதை உணர்த்த வாக்கியத்தின் தொடக்கத்தில் இடப்படும் இடைச்சொல்.

  ‘என்ன! ரயில் கவிழ்ந்துவிட்டதா?’
  ‘என்ன! அவர் கைது செய்யப்பட்டாரா?’

 • 3

  ஒருவரை அல்லது குறிப்பிட்ட நிலைமையைப் பற்றி மற்றவருக்கு இருக்கும் அலட்சிய உணர்வை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘அவருக்கு என்ன, ‘இப்படிச் செய்’ ‘அப்படிச் செய்’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்’
  ‘எனக்கு என்ன, சொல்வதைச் சொல்லிவிட்டேன். பிறகு உன் இஷ்டம்’

 • 4

  ஒருவருக்கு வாய்த்த அதிர்ஷ்டத்தைப் பாராட்டப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘வேலை கிடைத்துவிட்டதா? உங்களுக்கு என்ன, இனிமேல் கொண்டாட்டம் தான்!’
  ‘வேலையும் கொடுத்து, பெண்ணையும் கொடுக்கிறாரா? பிறகு என்ன?’

 • 5

  (ஒன்றை அல்லது ஒருவரைக் குறித்த) எதிர்ப்புணர்வைக் காட்டப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘அவன் என்ன என்னைக் கேள்வி கேட்கிறது?’
  ‘நீ என்ன சொல்கிறது, நான் என்ன கேட்கிறது என்று நடந்து கொண்டால் எப்படி?’

 • 6

  குறிப்பிடப்படுபவர் அல்லது குறிப்பிடப்படுபவை மட்டுமல்லாமல் மற்றவரும், மற்றவையும் என்பதை உணர்த்தப் பயன்படுத்தும் இடைச்சொல்; ‘மட்டுமா’.

  ‘தமிழ்நாடு என்ன, இந்தியா முழுக்க வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது’
  ‘நீயென்ன, நானும்தான் கஷ்டப்படுகிறேன்’

 • 7

  ஒரு செயல் நடந்த விதத்தைப் பெரிதுபடுத்திக் காட்டப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘இப்படித்தான் என் தம்பியின் கல்யாணம் கச்சேரி என்ன, வாண வேடிக்கை என்ன என்று அமர்க்களப்பட்டது’
  ‘புதுப் பணக்காரன். குதிரைப் பந்தயம் என்ன, குடி என்ன, சீட்டு என்ன என்று பணத்தை இறைக்கிறான்’
  ‘அவருக்கு வியாபாரத்தில் நல்ல வருமானம். வீடு என்ன, நிலம் என்ன, நகை என்ன என்று வாங்கிக் குவிக்கிறார்’

 • 8

  இயல்புக்கு மாறாக ஒன்று நடக்கிறது என்பதைக் குறிப்பிடப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘இவ்வளவு காலையிலேயே என்ன தூக்கம்!’
  ‘இரவு இரண்டு மணி ஆகிறது, இன்னும் என்ன அரட்டை!’

 • 9

  முதல் கூற்று குறிப்பிடுவதைச் செய்யலாம் என்றாலும் அதில் ஒரு சிறு குறை இருக்கிறது என்பதைக் குறிப்பதற்கு இரண்டாவது கூற்றின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்; ‘ஆனால்’.

  ‘அந்த ஓட்டலிலேயே சாப்பிடலாம். என்ன, கொஞ்சம் காரமாக இருக்கும்’
  ‘திருவான்மியூரிலேயே நகை வாங்கிவிடலாம். என்ன, விலை கொஞ்சம் கூட இருக்கும்’