தமிழ் என்னவோ யின் அர்த்தம்

என்னவோ

இடைச்சொல்

 • 1

  ஒரு கூற்று குறிப்பிடும் பொருள் உண்மையாகத் தோன்றினாலும், அதற்கு மாறானதுதான் உண்மையானது என்பதை உணர்த்தப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘நீ பேசியது என்னவோ நியாயம்தான் என்றாலும் பிரச்சினையைத் தீர்க்க இது உதவியாக இருக்காது’
  ‘அவர் அமைதியாக இருப்பதுபோல் தோன்றினாலும் உள்ளுக்குள் என்னவோ கோபம் கொந்தளித்துக்கொண்டுதான் இருந்தது’
  ‘நீ என்னவோ எளிதாகச் சொல்லிவிட்டாய்; சிரமப்படுவது நானல்லவா?’

 • 2

  ஒன்றுக்கான சாத்தியத்தையோ காரணத்தையோ சந்தேகத்துடன் தெரிவிக்கப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘நான் அவனைத் திட்டிவிட்டேன் என்பதாலோ என்னவோ இரண்டு நாட்களாக அவன் சரியாகச் சாப்பிடவில்லை’
  ‘தபால்காரர் வராமல் போனதும் இன்று விடுமுறையோ என்னவோ என்று நினைத்துக்கொண்டேன்’
  ‘என்னைப் பார்த்துப் பயப்படுகிறார்களோ என்னவோ ஒருவரும் என்னிடம் சரியாகவே பேசுவதில்லை’
  ‘நான் சொன்னதை அவன் கேட்டானோ என்னவோ?’

 • 3

  ஒருவர் தன் உள்ளுணர்வைக் கூறவோ அல்லது குறிப்பிடப்படுவதுதான் தன்னளவில் சரியானது என்பதைத் தெரிவிக்கவோ நான்காம் வேற்றுமை ஏற்ற பெயர்ச்சொல்லோடு பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘எனக்கென்னவோ அவர் இப்படியெல்லாம் பேசியிருக்கக் கூடாது என்றுதான் படுகிறது’
  ‘பிறர் என்ன சொன்னாலும் அவருக்கென்னவோ தான் செய்வதுதான் சரி என்று தோன்றியது’
  ‘எனக்கென்னவோ அப்பா இன்று என்னைப் பார்க்க வரமாட்டார் என்று தோன்றுகிறது’

 • 4

  ‘இன்னது என்று திட்டவட்டமாகக் கூற முடியாது’ என்ற பொருளை உணர்த்தும் இடைச்சொல்; ‘ஏதோ’.

  ‘என்னவோ காலுக்கு அடியில் ஊர்வதுபோல் இருந்தது’
  ‘எனக்குத் தெரியாமல் என்னவோ ஏமாற்று வேலை இங்கே நடந்திருக்கிறது’
  ‘சமையல் அறையில் என்னவோ புகைவதுபோல் இருக்கிறதே?’