தமிழ் எல்லாம் யின் அர்த்தம்

எல்லாம்

பெயர்ச்சொல்

 • 1

  அனைத்தும்.

  ‘வாகனங்கள் எல்லாம் (=எல்லா வாகனங்களும்) வேறு சாலையில் திருப்பிவிடப்பட்டன’
  ‘இயந்திரங்கள் எல்லாவற்றையும் துடைத்துச் சுத்தப்படுத்தினார்’
  ‘விளக்குகள் எல்லாவற்றையும் தேய்த்துவை’
  ‘பாத்திரங்கள் எல்லாவற்றிலிருந்தும் ஏதோ நாற்றம் வந்தது’
  ‘நான் எல்லாம் பார்த்துக்கொள்கிறேன்; நீ பேசாமல் போ’

 • 2

  முழுவதும்.

  ‘இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம்; அவ்வளவு அழகு!’
  ‘வீடெல்லாம் தேடியாகிவிட்டது. மோதிரம் கிடைத்த பாடில்லை’
  ‘உலகமெல்லாம் தேடினாலும் இப்படி ஒரு மனிதரை நீங்கள் பார்க்க முடியாது’
  ‘ஆயுளெல்லாம் உழைத்தாலும் எவ்வளவு பணம் சேர்த்துவிட முடியும்?’

 • 3

  அனைவரும்.

  ‘சொந்தக்காரர்கள் எல்லாம் வந்துவிட்டார்கள்’
  ‘நாங்கள் எல்லாம் ஒரு கல்லூரியில் படித்தவர்கள்’
  ‘இந்தப் பள்ளி மாணவர்கள் எல்லாம் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்’
  ‘இந்தத் துறையின் உயர் அதிகாரிகள் எல்லாம் எனக்குத் தெரிந்தவர்கள்தான்’
  ‘இந்தக் குழந்தைகளையெல்லாம் என்னால் சமாளிக்கவே முடியவில்லை’

 • 4

  (இதுஇது என்று வரிசையாகக் கூறப்படுவதன் பின் வரும்போது) சகலமும்.

  ‘எனக்கு உறவு, ஆசிரியர், வழிகாட்டி எல்லாம் அவரே’
  ‘இந்தக் கடையைத் திட்டமிடுவது, தொடங்குவது, நடத்துவது எல்லாம் நீதான்’

 • 5

  ‘குறிப்பிட்ட ஒன்றும் அதைச் சார்ந்தவையும் அல்லது அதோடு தொடர்பு உடையவையும்’ என்ற பொருளில் பயன்படுத்தும் சொல்.

  ‘கல்யாணம் எல்லாம் நன்றாக நடந்ததா?’
  ‘பெண் எல்லாம் பார்த்துவிட்டோம். திருமணத்திற்கு நாள் குறிக்க வேண்டியதுதான்’
  ‘இந்த மாதிரி வேலை எல்லாவற்றுக்கும் என் நண்பன்தான் சரியான ஆள்’
  ‘இந்தப் பேச்செல்லாம் எனக்குப் பிடிக்காது’
  ‘இந்த மாதிரி கொடுமை எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா?’
  ‘உன் தந்திரம் எல்லாம் என்னிடம் பலிக்காது’

 • 6

  (சமூகத்தில் அல்லது கேட்பவர் பார்வையில்) பொதுவாக உயர்ந்தது அல்லது குறைந்தது என்று மதிக்கப்படும் தன்மைகளை அல்லது செயல்களை மிகுவித்துக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்.

  ‘அவர் அமெரிக்காவுக்கு எல்லாம் போய்வந்தவர்’
  ‘பெரிய படிப்பெல்லாம் படித்திருக்கிற உனக்கு நான் சொல்லித் தெரிய வேண்டுமா?’
  ‘நீ புத்தகம் எல்லாம் எழுதியிருக்கிறாயாமே?’
  ‘நான் மூட்டையெல்லாம் தூக்கியிருக்கிறேன்’

 • 7

  ஒருவரை அல்லது ஒன்றைப் பற்றிய பொதுவான எண்ணத்திலிருந்து மாறுபட்ட மோசமான தன்மையை வலியுறுத்திக் கூறப் பயன்படும் சொல்.

  ‘இதெல்லாம் ஒரு சாப்பாடா?’
  ‘நீயெல்லாம் ஒரு மனிதனா?’
  ‘இவனெல்லாம் ஒரு தலைவனாம்!’

 • 8

  (ஒரு செயல் அல்லது ஒரு பொருளின் தன்மை அதைக் குறித்த) பொதுவான எண்ணத்திலிருந்து மாறுபட்டது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்குப் பயன்படுத்தும் சொல்.

  ‘இரவு எட்டுமணிக்கெல்லாம் எங்கள் வீட்டில் சாப்பாடு முடிந்துவிடும்’
  ‘உன் பையனுக்கெல்லாம் இந்த மாதிரி வேலை ஏற்றதா?’
  ‘பத்து ரூபாய்க்கெல்லாம் இந்த மாதிரி பேனா கிடைக்குமா?’
  ‘ஐந்து லட்ச ரூபாய்க்கெல்லாம் வீடு கட்ட முடியுமா என்ன?’