தமிழ் ஏமாறு யின் அர்த்தம்

ஏமாறு

வினைச்சொல்ஏமாற, ஏமாந்து

 • 1

  (எதிர்பார்த்து) நம்பிக்கை இழத்தல்; ஏமாற்றம் அடைதல்.

  ‘நிச்சயம் வேலை கிடைத்துவிடும் என்று நினைத்து ஏமாற நேர்ந்த சந்தர்ப்பங்கள் எத்தனையோ!’
  ‘இன்று அவர் கட்டாயம் வருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்’
  ‘நியாயவிலைக் கடையில் சர்க்கரை போடுகிறார்கள் என்று கேள்விப்பட்டுப் போனேன். ஏமாந்து திரும்பி வருகிறேன்’
  ‘தின்பண்டம் எதுவும் வாங்காமல் போனால் குழந்தை ஏமாந்துவிடும்’

 • 2

  (நம்பி) மோசம்போதல்.

  ‘அவர் எளிதில் ஏமாறமாட்டார்’
  ‘நான் அன்று ஏமாந்த காரணத்தால், இன்று அவஸ்தைப்படுகிறேன்’
  ‘ஏமாற ஆள் கிடைத்தால், ஏமாற்றுகிறவனுக்குக் கொண்டாட்டம்தான்’
  ‘வேலை வாங்கித் தருவதாகச் சொன்னவரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்துபோனேன்’
  ‘நீ நினைக்கிறபடி அவன் சுலபமாக ஏமாறுகிற ஆள் இல்லை’

 • 3

  கவனக்குறைவாக இருத்தல்; அசர்தல்.

  ‘இந்த முறை நான் ஏமாற மாட்டேன்’
  ‘சற்று ஏமாந்தால் போதும், நம்மைக் கவிழ்த்துவிடுவார்கள்’
  ‘ஒரு நிமிஷம் ஏமாந்துவிட்டேன், பையைக் காணவில்லை’
  ‘ஏமாறுகிற மாதிரி யாராவது நடிப்பார்களா? சும்மா வாய்க்கு வந்ததைச் சொல்லக் கூடாது’