தமிழ் ஏறு யின் அர்த்தம்

ஏறு

வினைச்சொல்ஏற, ஏறி

 • 1

  (மேல்நோக்கிச் செல்லுதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 உயரமான ஓர் இடத்தை அடையும் பொருட்டு (மேலே) செல்லுதல்

   ‘வெற்றி பெற்றவர்கள் மேடையில் ஏறிப் பரிசுகளைப் பெற்றுச் சென்றார்கள்’
   ‘வயதாகிவிட்டதால் மாடிப்படி ஏற முடியவில்லை’
   ‘குரங்கு மரத்தில் சரசரவென்று ஏறியது’

  2. 1.2 (ஒரு பரப்பின் மட்டம்) கூடுதல்; உயர்தல்

   ‘அடைமழை பெய்தால்தான் குளத்தில் நீர் ஏறும்’
   ‘அவன் மூச்சை இழுத்து விட்டபோது மார்பு ஏறி இறங்கியது’

  3. 1.3 (பொருளின் மதிப்பு, விலை போன்றவை) உயர்தல்

   ‘கடந்த மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை பல முறை ஏறியிருக்கிறது’

  4. 1.4 (ஆட்சியில், அரியணையில்) அமர்தல்

   ‘இளவரசனை அரியணை ஏறவிடாமல் சதிசெய்யும் மந்திரியைப் பற்றிய நாடகம்’
   ‘ஆட்சியில் ஏறியதும் பல நல்ல திட்டங்களைப் பிரதமர் மக்களுக்கு அறிவித்தார்’

 • 2

  (ஒன்றினுள் அல்லது ஓர் இடத்தில் வருதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (வண்டி, ரயில் முதலிய வாகனத்தினுள்) நுழைதல்

   ‘சீக்கிரம் ஏறு, வண்டி புறப்படப்போகிறது’

  2. 2.2 (பயணம் செய்வதற்காக பஸ், ரயில் போன்றவற்றை) பிடித்தல்

   ‘நான் நாளை காலை பத்து மணிக்கு ரயில் ஏற வேண்டும்’

  3. 2.3 (குறிப்பிட்ட ஒரு காரியத்துக்காக ஒரு இடத்துக்கு) செல்லுதல்

   ‘மனைவிக்குப் பிடித்த மாதிரி புடவை எடுப்பதற்காகக் கடைகடையாய் ஏறி இறங்கினார்’

 • 3

  (ஒன்றின் மேல் போதல் என்னும் வழக்கு)

  1. 3.1 கீழே கிடப்பதன் மேல் செல்லுதல்

   ‘தெருவில் படுத்துக்கிடந்த நாய் மீது லாரி ஏறிவிட்டது’

 • 4

  (உள்ளே செல்வதை அல்லது பரவுவதை, படிவதை மேல் நோக்கிச் செல்வதாகக் கூறும் வழக்கு)

  1. 4.1 (காலில் ஆணி, முள் போன்றவை அல்லது உடம்பில் விஷம் முதலியவை) உட்செல்லுதல்

   ‘காலில் ஏறிய முள்ளைப் பிடுங்க முடியவில்லை’
   ‘பாம்பின் விஷம் ஏறி மாட்டின் வாயில் நுரைதள்ளியது’

  2. 4.2 (வழுக்கை, நரை) விழுதல்

   ‘முடி கொட்டி வழுக்கை ஏறியிருந்தது’
   ‘காதோரங்களில் நரை ஏறியிருந்தது’

  3. 4.3 (குளிர், உஷ்ணம்) பரவுதல்

   ‘சாராயம் குடித்தவுடன் உடம்பில் உஷ்ணம் ஏறத் தொடங்கியது’
   ‘வெயில் ஏறஏற ஒரே புழுக்கம்’

  4. 4.4 (சாயம், நிறம் முதலியவை) படிதல்; பிடித்தல்

   ‘துவைத்துத்துவைத்துப் பழுப்பு ஏறிய வேட்டி’
   ‘வெற்றிலை போட்டுக் காவி ஏறிய பற்கள்’

  5. 4.5 (கோபம், வெறி முதலியவை) அதிகரித்தல்

   ‘மகன் எதிர்த்துப் பேசப்பேச அவர் முகத்தில் கோபம் ஏறியது’
   ‘போதை ஏறியதும் உளற ஆரம்பித்தான்’

 • 5

  (மரபு வழக்கு)

  1. 5.1 (குறிப்பிட்ட ஒன்று) அதிகமாகச் சேர்தல்

   ‘கையில் காசு ஏறியிருக்கிறது’
   ‘உனக்குக் கொழுப்பு ஏறிவிட்டது’

  2. 5.2 (உடம்பு) சதை விழுதல்; சதை போடுதல்

   ‘உனக்கு உடம்பு ஏறவே ஏறாதா?’
   ‘போன தடவை பார்த்ததைவிட இப்போது அவனுக்கு உடம்பு நன்றாக ஏறியிருக்கிறது’

  3. 5.3 (எதிர்மறை வினைவடிவங்களில் அல்லது எதிர்மறைத் தொனியில்) கவனத்தில் படுதல்; (மனத்தில்) பதிதல்

   ‘நீங்கள் என்ன சொன்னாலும் அவன் மூளையில் ஏறாது’
   ‘நாம் சொல்வது அவன் காதில் ஏறுமா?’