தமிழ் ஏற்படு யின் அர்த்தம்

ஏற்படு

வினைச்சொல்ஏற்பட, ஏற்பட்டு

 • 1

  (பாதிப்பு, விபத்து போன்றவை) நேரிடுதல்.

  ‘பெரு மழையால் கடந்த ஆண்டு பலத்த சேதம் ஏற்பட்டது’
  ‘கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டிச்சென்றதால் விபத்து ஏற்பட்டது’
  ‘அவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவன் மீளவில்லை’

 • 2

  (நோய், காயம்) உண்டாதல்.

  ‘கல்லில் இடறி விழுந்ததால் காலில் காயம் ஏற்பட்டது’
  ‘அசுத்தமான நீரைக் குடிப்பதால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது’

 • 3

  (ஒன்று தானாகவோ அல்லது குறிப்பிட்ட செயலின் மூலமோ) உருவாதல்.

  ‘நீர்நிலைகளிலிருந்து ஆவியான நீர் மேகமாகிப் பின் மழை ஏற்படுகிறது’
  ‘நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்பதைக் கணிப்பது கடினம்’
  ‘நீராவியால் ஏற்படும் விசையின் காரணமாக நீராவி இயந்திரம் இயங்குகிறது’
  ‘எரிகற்கள் மோதியதால் ஏற்பட்ட பள்ளங்கள் பூமியில் காணப்படுகின்றன’

 • 4

  (ஒரு சூழ்நிலையில் ஒன்று) தோன்றுதல்; எழுதல்; (உணர்ச்சி, குறிப்பிட்ட நிலை போன்றவை) உண்டாதல்.

  ‘யுத்தம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது’
  ‘என்னைப் பற்றி இப்படி ஒரு தவறான கருத்து ஏற்பட்டிருக்கிறதா?’
  ‘எனக்கு அவன் மேல் சந்தேகம் ஏற்பட்டது’
  ‘இரு நாடுகளுக்கிடையே போர்நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது’
  ‘திடீரென்று அவனைப் பார்த்ததும் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது’
  ‘அவரைப் பற்றி நினைத்தாலே வியப்பு ஏற்படும்’
  ‘இசையின் காரணமாக இருவருக்கிடையே நெருக்கம் ஏற்பட்டது’
  ‘வேலைப் பளுவின் காரணமாக எனக்குக் களைப்பு ஏற்பட்டது’

 • 5

  (ஒன்று) நிறுவப்படுதல்.

  ‘தொழிற்சங்கங்கள் ஏற்பட்ட பின்புதான் தொழிலாளர்களுக்குத் தக்க ஊதியம் கிடைத்தது’