தமிழ் ஒட்டு யின் அர்த்தம்

ஒட்டு

வினைச்சொல்ஒட்ட, ஒட்டி

 • 1

  (ஒன்றுடன் ஒன்று பற்றுதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (பசைத் தன்மை போன்றவற்றால் ஒரு பொருள் மற்றொன்றில்) கெட்டியாகப் பிடித்தல்; நெருக்கமாக இணைதல்

   ‘புத்தகத்தோடு ஒட்டாமல் அட்டை தனியாகப் பிரிந்துவிட்டது’
   ‘சேலையில் ஒட்டியிருந்த மணலை உதறினாள்’
   ‘பல்லில் ஒட்டுகிற மிட்டாய்களைக் குழந்தைக்குக் கொடுக்காதே!’
   உரு வழக்கு ‘கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதவர்கள் இன்னும் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்’

  2. 1.2 (காகிதம், உடைந்த கண்ணாடி முதலிய பொருள்களைப் பசை தடவி) பொருத்துதல்

   ‘இந்த உறையை ஒட்டி அஞ்சல்பெட்டியில் போடு!’
   ‘பொம்மையின் உடைந்த பகுதிகளை ஒட்டிக் காயவைத்தாள்’

  3. 1.3 (புழு, பூச்சி முதலியன கால்களால் அல்லது உடம்பின் அடிப்பகுதியால் ஒரு பரப்பை) இறுக்கமாகப் பற்றுதல்

   ‘சட்டையில் ஒட்டிக்கொண்டிருந்த இலைப்புழுவைத் தட்டிவிட்டான்’
   ‘நாய் பயந்துபோய்த் தரையோடு ஒட்டிக்கொண்டு கிடந்தது’

 • 2

  (ஈர்க்கப்படுதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (ஒன்றோடு அல்லது ஒருவரோடு) நெருக்கமாதல்

   ‘ஊரிலிருந்து வந்த என் தங்கையிடம் குழந்தை சீக்கிரம் ஒட்டிக்கொண்டது’
   ‘இவன் ஏன் நம் சங்கத்தோடு வந்து ஒட்டுகிறான்?’

  2. 2.2 (ஒருவரின் மகிழ்ச்சி, சோகம் போன்ற உணர்வுகள் மற்றொருவரை) தொற்றுதல்

   ‘அவள் பேசத் தொடங்கினால் அவளுடைய உற்சாகம் எளிதாக மற்றவர்களையும் ஒட்டிக்கொள்ளும்’

  3. 2.3 (மனம் ஒன்றில் ஈர்க்கப்பட்டு) நிலைகொள்ளுதல்

   ‘எதிலும் ஒட்டாமல் அலைபாய்ந்த மனத்தை நாகசுர இசை கவர்ந்தது’
   ‘அவனுடைய பாராட்டு என் மனத்தில் ஒட்டவில்லை’

 • 3

  (உள்வாங்குதல் தொடர்பான வழக்கு)

  1. 3.1 உட்புறமாகக் குழிதல்; ஒடுங்குதல்

   ‘ஒட்டிய கன்னமும் குழி விழுந்த கண்களும்’
   ‘அவன் வயிறு ஒட்டிக்கிடந்தது’

தமிழ் ஒட்டு யின் அர்த்தம்

ஒட்டு

பெயர்ச்சொல்

 • 1

  (துணி போன்றவற்றில் கிழிந்த இடத்தின் மேல் அல்லது துவாரம் உள்ள இடத்தின் மேல் வைக்கும்) மறைப்பு.

  ‘இவ்வளவு பெரிய தோல்பைக்கு இந்தச் சின்ன ஒட்டு தாங்காது’
  ‘சட்டையில் முழங்கைப் பகுதியில் ஒரு பெரிய ஒட்டு’

 • 2

  ஒன்றுடன் ஒன்றை இணைக்கும் செயல்.

  ‘சினிமா என்பது ஒட்டு வேலையாக இருப்பதால் படத்தொகுப்பு மிகவும் முக்கியமாகிறது’

 • 3

  (பெரும்பாலும் ‘உறவு’ என்பதோடு இணைந்து வரும்போது) (நெருங்கிய) தொடர்பு.

  ‘அவர்களுக்கும் நமக்கும் இனி ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம்’

 • 4

  வீரியம் மிகுந்த செடியின் தண்டை அதே இனத்தைச் சேர்ந்த வீரியம் குறைந்த செடியின் தண்டுடன் பக்கவாட்டில் சீவிவிட்டு ஒன்றின் மேல் மற்றொன்று பொருத்தி வீரிய இனத்தை உருவாக்கும் முறை/அப்படி உருவாக்கப்பட்ட வீரிய இனம்.

  ‘ஒட்டு மாங்காய்’
  ‘ரோஜாவையும் ஒட்டுப் போடலாம்’

 • 5

  வயலில் அறுத்த பின் எஞ்சியிருக்கும் தாள்.

தமிழ் ஒட்டு யின் அர்த்தம்

ஒட்டு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு பேன் குஞ்சு.