தமிழ் ஒதுக்கு யின் அர்த்தம்

ஒதுக்கு

வினைச்சொல்ஒதுக்க, ஒதுக்கி

 • 1

  (ஒரு பரப்பில் ஒரு பக்கமாகக் கொண்டுசேர்த்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (திரைச்சீலை, முடி முதலியவற்றை) ஒரு பக்கமாகத் தள்ளுதல்

   ‘வெளிச்சம் போதவில்லை; ஜன்னல் திரைகளை ஒதுக்கிவிடு’
   ‘முகத்தில் விழுந்த முடியை வலது கையால் ஒதுக்கிக்கொண்டார்’

  2. 1.2 (ஒன்றை ஒன்றின்) ஓரத்தில் இருக்கச் செய்தல்

   ‘தனக்குப் பிடிக்காத பொரியலை இலையின் ஓரத்தில் ஒதுக்கிவிட்டான்’
   ‘புகையிலையை வாயில் ஒதுக்கிக்கொண்டு பேச ஆரம்பித்தான்’

 • 2

  (பிரித்துப் பங்கிடுதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (குறிப்பிட்ட தொகை, நேரம், இடம் போன்றவற்றைக் குறிப்பிட்ட நபருக்காக அல்லது நோக்கத்துக்காக) தனியாகப் பிரித்துவைத்தல்

   ‘எங்கள் ஒன்றியத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக அரசு எழுபது லட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளது’
   ‘பேராசிரியர் என்னுடன் பேசுவதற்கு ஒரு மணி நேரம் ஒதுக்கியிருந்தார்’
   ‘எனக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்தேன்’

 • 3

  (விலக்குதல் தொடர்பான வழக்கு)

  1. 3.1 (ஒன்றை அல்லது ஒருவரைத் தேவையில்லை, முக்கியத்துவம் இல்லை என்பதால்) தவிர்த்தல்; விட்டுவிடுதல்; தள்ளிவைத்தல்

   ‘எல்லா வினாக்களுக்கும் விடை தெரிந்திருந்ததால், எதற்கு விடை எழுதுவது எதை ஒதுக்குவது என்று புரியவில்லை’
   ‘என்னை அணியில் சேர்த்துக்கொள்ளாமல் ஒதுக்கிவிட்டார்’