தமிழ் ஓட்டு யின் அர்த்தம்

ஓட்டு

வினைச்சொல்ஓட்ட, ஓட்டி

 • 1

  (விரட்டுதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (பெரும்பாலும் வீட்டு விலங்குகளை, பறவைகளை, பூச்சிகளை) துரத்துதல்; விரட்டுதல்

   ‘தோட்டத்துக்குள் ஆடு புகுந்துவிட்டது, அதை ஓட்டு!’
   ‘முதுகில் உட்கார்ந்த ஈயை மாடு வாலால் ஓட்டியது’

  2. 1.2 (செல், போ ஆகிய வினைகளுடன் இணைந்து) (ஆடு, மாடு போன்ற மிருகங்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு விரட்டி) கொண்டுபோதல்

   ‘சந்தைக்கு மாடுகளை ஓட்டிச்செல்லும் சத்தம் கேட்டது’

 • 2

  (இயங்கச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (ஒன்றின் மீது) நடக்க அல்லது போகச்செய்தல்

   ‘களத்தில் பரப்பிய கதிர்களின் மீது மாட்டை ஓட்டி மணிகளைப் பிரித்தார்கள்’

  2. 2.2 (வாகனங்களை) செலுத்துதல்; (கருவிகளை) இயக்குதல்

   ‘நான் கார் ஓட்டக் கற்றுக்கொள்ளப்போகிறேன்’
   ‘ஏர் ஓட்ட மாடு இல்லை’
   ‘எனக்குப் படகு ஓட்டத் தெரியாது’
   ‘தையல் இயந்திரத்தை ஓட்டிக்கொண்டிருந்தாள்’

  3. 2.3 (விலங்குகளின் மீது ஏறி அமர்ந்து) சவாரிசெய்தல்

   ‘கடிவாளம் இல்லாமலேயே குதிரை ஓட்டிக் காட்டினார்’
   ‘புலியை அடக்கி அதன்மீது ஏறி அமர்ந்து ஓட்டிவரும் ஐயப்பன் படம்’

 • 3

  (மேலும்கீழும் அல்லது நீளவாக்கில் போகச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 3.1 (விரல்களை) விரைவாக நகர்த்துதல்

   ‘களிமண்ணை உருட்டி அதன்மீது விரல்களை ஓட்டி உருவம் கொடுத்தார்’
   ‘அவள் வீணைத் தந்திகளின் மீது விரல்களை ஓட்டிய விதம் மிக நளினமாக இருந்தது’

  2. 3.2 (பார்வையைப் பொருள்கள்மீது) செலுத்துதல்

   ‘கடைவாசலில் நின்று கண்ணாடி ஜன்னல்களின் பின் வைக்கப்பட்டிருந்த பொருள்களின் மீது பார்வையை ஓட்டினான்’

  3. 3.3பேச்சு வழக்கு (கற்பிக்கும் பாடத்தை) வேகமாகச் சொல்லிச் செல்லுதல்

   ‘ஆசிரியருக்கு நேரம் இல்லை; பாடத்தை ஓட்டிவிட்டார்’

 • 4

  (அகற்றுதல் தொடர்பான வழக்கு)

  1. 4.1 (பேய் போன்றவற்றை ஒருவரை விட்டு) விலகச்செய்தல்

   ‘பேய் ஓட்டுவதற்குப் பூசாரியை அழைத்துவரப் போனார்கள்’

 • 5

  (மரபு வழக்கு)

  1. 5.1 (நேரத்தை) கழித்தல்; போக்குதல்

   ‘வண்டி இரண்டு மணி நேரம் தாமதமாக வருகிறதாம்; பொழுதை எப்படி ஓட்டுவது?’

  2. 5.2 (காரியத்தை) சமாளித்தல்

   ‘அரைகுறை ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு எப்படியோ இதுநாள்வரை ஓட்டிவிட்டேன்’

தமிழ் ஓட்டு யின் அர்த்தம்

ஓட்டு

பெயர்ச்சொல்

 • 1

  (தேர்தலில்) வாக்கு.

  ‘நாளை ஓட்டு எண்ணப்படும்’
  ‘கள்ள ஓட்டு போட்டவர் கைது’
  ‘செல்லாத ஓட்டு’