ஓடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஓடு1ஓடு2

ஓடு1

வினைச்சொல்ஓட, ஓடி

 • 1

  (இடம்பெயர்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (மனிதன், விலங்கு ஆகியவை கால்களை வேகமாக முன்னோக்கி எடுத்து வைப்பதன்மூலம்) நடப்பதைவிட விரைந்து செல்லுதல்/(மீன் போன்றவை நீரில்) விரைவாக நீந்திச் செல்லுதல்/(பாம்பு போன்றவை) வேகமாக ஊர்ந்து செல்லுதல்

   ‘வேகமாக ஓடித்தான் ரயிலைப் பிடிக்க வேண்டியிருந்தது’
   ‘குழந்தை குடுகுடுவென்று ஓடியது’
   ‘வெடிச் சத்தத்தைக் கேட்ட யானைகள் மிரண்டு ஓடத் தொடங்கின’
   ‘நீரின் அடியில் ஓடும் அழகான மீன் குஞ்சுகள்’
   ‘குப்பையை அள்ளும்போது அதிலிருந்து ஒரு பாம்பு ஓடியது’

  2. 1.2 (இயந்திர விசையால் இயங்கும் பேருந்து போன்ற வாகனங்கள்) ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லுதல்

   ‘சுரங்க ரயில் இன்றுமுதல் ஓடும்’
   ‘போராட்டத்தின் காரணமாகப் பேருந்துகள் ஓடவில்லை’
   உரு வழக்கு ‘கவிஞருடைய பேனா எப்படியெல்லாம் ஓடியிருக்கிறது பாருங்கள்!’

  3. 1.3 (உருண்டையான பொருள்கள் வேகமாக) உருளுதல்

   ‘மட்டையாளர் அடித்த பந்து தடுப்பதற்கு ஆளின்றி எல்லைக்கோட்டை நோக்கி ஓடியது’
   ‘கீழே குனிந்தபோது பையில் இருந்த சில்லறைக் காசுகளெல்லாம் தரையில் சிதறி உருண்டு ஓடின’

  4. 1.4 (நீர், இரத்தம் போன்ற திரவங்கள்) பாய்தல்/(மின்சாரம் கம்பியில்) பாய்தல்

   ‘இந்த ஆறு காட்டின் வழியாக ஓடிக் கடலில் கலக்கிறது’
   ‘அந்தக் கம்பியைத் தொடாதே. அதில் மின்சாரம் ஓடுகிறது’
   உரு வழக்கு ‘உற்சாகம் கரைபுரண்டு ஓடியது’

  5. 1.5 (துரத்தப்படும் அல்லது பிடிபட்டிருக்கும் நிலையிலிருந்து) விரைவாகத் தப்பிச் செல்லுதல்

   ‘அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் எல்லோரும் ஓடி வந்ததும் திருடன் பயந்து ஓடிவிட்டான்’
   ‘வனத் துறையினர் அடைத்துவைத்திருந்த புலி தப்பி ஓடிவிட்டது’

  6. 1.6 (வீடு, நாடு முதலியவற்றிலிருந்து வெளியேறி) வேறிடம் செல்லுதல்

   ‘யுத்தத்தின்போது தங்கள் நாட்டிலிருந்து ஓடிவந்த அகதிகள்’
   ‘அப்பாவுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு ஓடிவிட்டான்’

  7. 1.7 (கவர்ச்சி காரணமாகவோ தேவை அல்லது அவசரம் கருதியோ ஒருவரை) நாடிச் செல்லுதல்

   ‘அன்று பிரபலமாக இருந்த ஒரு நடிகரிடம் எல்லாரும் ஓடினார்கள். இன்று வேறொரு நடிகரிடம் ஓடுகிறார்கள்’
   ‘உடம்பில் ஒரு சின்னக் காயம் என்றால்கூட அவன் மருத்துவரிடம் ஓடுவான்’

  8. 1.8 (விளையாட்டு, பந்தயம் போன்றவற்றில் புள்ளிகள் பெறுவதற்காகவோ முன்னிலை பெறுவதற்காகவோ) (ஓட்டமாக) விரைதல்

   ‘இந்திய வீரர் மூன்றாவது ஓட்டம் எடுப்பதற்காக ஓடியபோது ஆட்டமிழந்தார்’
   ‘இந்தப் பந்தயத்தில் எத்தனை குதிரைகள் ஓடுகின்றன?’

  9. 1.9 (படச்சுருள் அல்லது தையல் இயந்திரம், தறி போன்றவற்றில் நூல் முதலியவை) ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குச் செல்லுதல்

   ‘ஓடிக்கொண்டிருந்த படச்சுருள் அறுந்துவிட்டதால் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது’
   ‘தறியில் பாவு சீராக ஓடிக்கொண்டிருந்தது’

 • 2

  (ஒரு நிலையில் நின்று இயங்குதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (இயந்திரங்கள்) இயங்குதல்; செயல்படுதல்

   ‘கடிகாரம் நன்றாக ஓடுகிறது’
   ‘இந்தத் தண்ணீர் இறைக்கும் இயந்திரம் சரியாக ஓடுவதில்லை’
   உரு வழக்கு ‘ஏதோ வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது’

  2. 2.2 (சுவாசக் காற்று) உள்ளே போய் வெளியே வருதல்

   ‘மருந்து கொடுத்த பிறகு அவருக்கு மூச்சு சீராக ஓட ஆரம்பித்தது’

  3. 2.3 (இருதயம்) இயங்குதல்; (நாடி) தொடர்ந்து துடித்தல்

   ‘ஓடிக்கொண்டிருந்த இதயம் ஒரு கணம் நின்று விட்டதுபோல் இருந்தது’
   ‘நாடி சீராக ஓடிக்கொண்டிருக்கிறது என்று கிழவர் கையைப் பிடித்துப்பார்த்த மருத்துவர் சொன்னார்’

 • 3

  (இயக்கம் இல்லாதவற்றை இயக்கம் உள்ளது போல் கூறும் வழக்கு)

  1. 3.1 (கையில் ரேகை, ஒரு பரப்பில் கோடு போன்றவை) காணப்படுதல்; அமைந்திருத்தல்

   ‘உன் கையில் அதிர்ஷ்ட ரேகை ஓடுகிறது’
   ‘விதி ரேகை சனி மேட்டில் ஓடினால் நல்லது’
   ‘அவர் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை அவர் நெற்றியில் ஓடிய கோடுகள் பறைசாற்றின’
   உரு வழக்கு ‘அவருடைய முகத்தில் வறுமையின் கோடுகள் ஓடின’

  2. 3.2 (உடம்பில் நரம்பு, நாளம் போன்றவை அல்லது மண்ணில் வேர் போன்றவை) பரவுதல்

   ‘அவள் கழுத்தில் பச்சை நரம்பு ஒன்று ஓடுகிறது’
   ‘நிலத்தில் வேர் ஓடியிருக்கிறது’

  3. 3.3 (ஒரு பொருளின்மீது மேலும்கீழுமாகப் பார்வையை) செலுத்துதல்

   ‘ஏக்கத்துடன் அவள்மேல் கண்களை ஓட விட்டான்’
   ‘நான் கொடுத்த கடிதத்தின் மேல் பார்வையை ஓட விட்டார்’

  4. 3.4 (முகத்தில் புன்னகை, மனத்தில் சிந்தனை போன்றவை) தோன்றுதல்

   ‘ஒருகணம் அவருடைய பார்வையில் வெறுப்பு ஓடி மறைந்தது’
   ‘உன் மனத்தில் என்ன ஓடுகிறது என்று எனக்குத் தெரியாதா?’

  5. 3.5 (தலையில் நரை) பரவுதல்

   ‘தலையில் அங்கங்கே நரை ஓடியிருந்தது’

  6. 3.6 (திரைப்படம், நாடகம் முதலியவை அரங்குகளில் தொடர்ச்சியாக) நடத்தல்/காட்டப்படுதல்; (பணி, வேலை) நடைபெறுதல்

   ‘இந்தத் திரைப்படம் நூறு நாள் ஓடுமா?’
   ‘அவர் திரையரங்கில் நுழைவதற்குள் படம் அரை மணி நேரம் ஓடியிருந்தது’

  7. 3.7 (ஒரு பொருள்) விற்பனையாதல்; (கடை, வியாபாரம்) நடத்தல்

   ‘புதிதாக வந்திருக்கும் இந்த மருந்து எங்கள் கடையில் சுமாராகத்தான் ஓடுகிறது’
   ‘வியாபாரம் ஒரு மாதிரியாக ஓடிக்கொண்டிருக்கிறது’
   ‘இப்போது பாலம் கட்டும் வேலை ஓடிக்கொண்டிருக்கிறது’

  8. 3.8 (காலம் விரைவாக) கழிதல்; கடத்தல்

   ‘வேலையில் சேர்ந்து ஒரு வருடம் ஓடிவிட்டது’
   ‘நாட்கள் எவ்வளவு வேகமாக ஓடிவிட்டன!’

  9. 3.9 (எதிர்மறை வடிவங்களில் அல்லது எதிர்மறைச் சொற்களோடு வரும்போது) செயல்படத் தோன்றுதல்

   ‘காவல்துறை அதிகாரிகள் திடீரென்று வந்தவுடன் எனக்கு ஒன்றுமே ஓடவில்லை’

ஓடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஓடு1ஓடு2

ஓடு2

பெயர்ச்சொல்

 • 1

  (வீடுகளுக்குக் கூரையாகப் பயன்படுத்தும்) சிறு பலகை போன்ற சுட்ட மண் துண்டு.

  ‘ஓடு போட்ட வீடு’
  ‘ஓட்டுக் கூரை’

 • 2

  மண்பானையின் உடைந்த பகுதி; சில்லு.

  ‘கீழே கிடந்த ஓட்டை எடுத்துத் தரையில் கோடு போட்டான்’
  ‘வழியில் கிடந்த ஓடு காலைக் குத்திவிட்டது’

 • 3

  (ஆமை, நண்டு முதலியவற்றின் பாதுகாப்பிற்காக) உடலின் மேல் பகுதியில் இருக்கும் கனமான அல்லது உறுதியான கூடு.

 • 4

  (முட்டையின் அல்லது சில பழங்களின்) மேல்புறத்தில் கூடு போல இருக்கும் பகுதி.

  ‘புளியம்பழ ஓட்டை உடைத்துப் புளி எடுப்பார்கள்’
  ‘விளாம்பழத்தின் ஓடு உறுதியானது’

 • 5

  காண்க: திருவோடு