தமிழ் கட்டு யின் அர்த்தம்

கட்டு

வினைச்சொல்கட்ட, கட்டி

 • 1

  (உருவாக்குதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (வீடு, பாலம் முதலியவற்றை வடிவமைத்தபடி) உருவாக்குதல்/(பறவை, தேனீ முதலியவை கூட்டை) அமைத்தல்

   ‘பத்து மாடிக் கட்டடம் கட்டும் பணி நடந்துகொண்டிருக்கிறது’
   ‘கதவின் சாவித் துளையில் குளவி கூடு கட்டியிருந்தது’

  2. 1.2 (ஆபரணங்களில் கற்களை) பதித்தல்/(செயற்கைப் பல்லை) பொருத்துதல்

  3. 1.3பேச்சு வழக்கு (பாட்டு) எழுதுதல்

  4. 1.4 (பல பாகங்களை ஒன்று சேர்த்து ஒன்றை) அமைத்தல்

   ‘ரயில் பெட்டி கட்டும் தொழிற்சாலை ஒன்று சென்னையில் இருக்கிறது’
   ‘கப்பல் கட்டும் கூடம் ஒன்றை அரசு அமைக்கவிருக்கிறது’
   ‘மூங்கில் முள்ளை வெட்டிப் படல் கட்டிக்கொண்டிருந்தான்’
   உரு வழக்கு ‘வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்தி இந்த நாவல் கட்டப்பட்டிருக்கிறது’

  5. 1.5 (மண்ணைத் திரட்டிப் பயிரின் வேரில்) சேர்த்தல்

  6. 1.6 (புத்தகங்கள் போன்றவற்றை அச்சிடுவதற்காக அவற்றின் பக்கங்களை) அமைத்தல்

 • 2

  (இணைத்தல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (கயிறு போன்றவற்றால் ஒருவரை ஒன்றோடு) பிணைத்தல்; (ஒன்றை மற்றொன்றோடு) இணைத்தல்; (ஒன்றைச் சுருட்டி அல்லது மற்றொன்றுள் வைத்துக் கயிறு முதலியவற்றால்) சுற்றுதல்

  2. 2.2 (எலும்பு முறிவு, காயம் போன்றவற்றுக்குச் சிகிச்சை அளிக்கும் விதமாக மருந்து போன்றவற்றை வைத்து) கெட்டியாகச் சுற்றுதல்

  3. 2.3 (புடவை, வேட்டி முதலியவற்றை) குறிப்பிட்ட முறையில் உடுத்துதல்

   ‘கல்யாணத்துக்குப் போகப் பட்டுப் புடவை கட்டிக்கொண்டாள்’
   ‘தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டான்’
   ‘வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தோட்ட வேலையில் அவன் இறங்கினான்’

  4. 2.4 (கடிகாரம், தாயத்து போன்றவற்றை) அணிதல்

  5. 2.5 (கண்ணைத் துணியால் சுற்றி) மறைத்தல்

   ‘தீவிரவாதிகள் அவரைக் கண்ணைக் கட்டிக் கடத்திச் சென்றார்கள்’

  6. 2.6 (சடங்குகளில் தாலி, பட்டம் போன்றவற்றை) அணிவித்து முடிச்சிடுதல்

   ‘அறுபதாம் கல்யாணத்திலும் தாலி கட்டப்படும்’
   ‘மணப்பெண்ணுக்குத் தாய்மாமன் பட்டம் கட்டினான்’

  7. 2.7 (வண்டி, ஏர் முதலியவற்றில் மாட்டை) பிணைத்தல்; பூட்டுதல்

   ‘தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஏரில் எருமைகளைக் கட்டி உழுவதில்லை’
   ‘ஊருக்குப் போக வண்டி கட்டிக்கொண்டு வா’

  8. 2.8 (பூக்களைச் சரமாக, மாலையாக) தொடுத்தல்

  9. 2.9 (வெற்றிலையை பீடாவாக) மடித்தல்/சுருட்டுதல்

   ‘இரண்டு பீடா கட்டிக் கொடு’

  10. 2.10 (கைகளை மார்பின் குறுக்காக) மடக்கி வைத்தல்/(கைகளை இணைத்த நிலையில்) பின்புறம் வைத்திருத்தல்/(உயர்த்திய கால் மூட்டுகளைக் கைகளால்) கோத்து அணைத்தல்

 • 3

  (பிற வழக்குகள்)

  1. 3.1 திருமணம் செய்துகொள்ளுதல்/திருமணம் செய்து தருதல்

   ‘கட்டினால் அத்தை பெண்ணைத்தான் கட்டுவேன் என்று அவன் ஒற்றைக்காலில் நின்றான்’
   ‘உங்கள் பெண்ணை எனக்குக் கட்டித் தருவீர்களா என்று அவரிடம் தைரியமாகக் கேட்டான்’

  2. 3.2 (நீரை) தேக்குதல்/(நீர்) தேங்குதல்

  3. 3.3 (நெஞ்சில் சளி, கபம்) திரளுதல்/(அடிபட்ட இடத்தில் இரத்தம், கால் போன்ற உறுப்பில் நீர்) திரளுதல்

  4. 3.4 (பெரும்பாலும் எதிர்மறை வாக்கியங்களில்) (விலை, கூலி முதலியவை) போதுமானதாக இருத்தல்; கட்டுப்படியாதல்

  5. 3.5 (கட்டணம், சந்தா, வட்டி போன்றவற்றை) செலுத்துதல்

  6. 3.6 (குதிரைப் பந்தயத்தில் குறிப்பிட்ட குதிரை வெற்றிபெறும் என்று ஊகித்து அதன்மீது) பணம் செலுத்துதல்

  7. 3.7 (வேடம்) பூணுதல்; தரித்தல்

   ‘அந்தக் காலத்தில் எங்கள் தாத்தா கட்டி ஆடாத வேஷமே இல்லை’
   ‘அவர் எந்த வேஷம் கட்டினாலும் பாத்திரத்தோடு அப்படியே ஒன்றிவிடுவார்’

  8. 3.8 (பெரும்பாலும் விரும்பத் தகாத விதத்தில்) (பட்டப்பெயர்) சூட்டுதல்

  9. 3.9 (விஷத்தை மருந்து) முறித்தல்

  10. 3.10 (சிலவகை உணவு, மருந்து போன்றவற்றை உட்கொள்வதால் மலம்) இறுகுதல்/(சிலவகை உணவு, மருந்து மலத்தை) இறுகச் செய்தல்

தமிழ் கட்டு யின் அர்த்தம்

கட்டு

துணை வினைகட்ட, கட்டி

 • 1

  (இல்லாமல் ஆக்குதல் என்ற பொருளில் வழங்கும்) முதன்மை வினையின் செயல் மிகவும் வன்மையுடனும் தீர்மானத்துடனும் நிறைவேற்றப்படுகிறது என்பதைக் குறிப்பிடும் துணை வினை.

தமிழ் கட்டு யின் அர்த்தம்

கட்டு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்று மற்றொன்றோடு இணைந்திருக்கும் அல்லது சேர்ந்திருக்கும் முறையைக் குறிப்பிடும் வழக்கு)

  1. 1.1 (ஒருவரின் உடலில் காயம், எலும்பு முறிவு முதலியவை ஏற்பட்ட இடத்தில்) மருந்து வைத்துச் சுற்றப்படும் துணி அல்லது மாவுப் பசையால் உருவாக்கப்படும் இறுக்கமான உறை

  2. 1.2 (கயிறு போன்றவற்றால் போடப்பட்டிருக்கும்) முடிச்சுடன் கூடிய சுற்று

  3. 1.3 (துணி, ரூபாய் நோட்டு முதலியவற்றின் மொத்தமான) அடுக்கு; தொகுப்பு

  4. 1.4 (அஞ்சல் நிலையத்தில் நேரப்படி வந்துசேரும் அல்லது அனுப்பப்படும்) கடிதத் தொகுப்பு

  5. 1.5 (தலைமுடி) கொத்து

  6. 1.6 (புடவை, வேட்டி முதலியவற்றை) உடுத்தியிருக்கும் முறை

 • 2

  (கட்டப்பட்ட ஒன்றின் அல்லது உருவான ஒன்றின் அமைப்பைக் குறிப்பிடும் வழக்கு)

  1. 2.1 (பல பிரிவுகளாகக் கட்டப்பட்டிருக்கும் பழைய பாணி வீட்டின்) ஒரு பகுதி/(ஒவ்வொரு புழக்கத்திற்கும் உள்ள) அறை அல்லது வெளி

  2. 2.2இலங்கைத் தமிழ் வழக்கு கரை

  3. 2.3 (உடலின்) உறுதியான வடிவம்

   ‘கட்டுத் தளராத உடல்’

  4. 2.4 கட்டுப்பாடு

  5. 2.5 வண்டிச் சக்கரத்தின் வெளிப் புறத்தில் இறுகப் பற்றியிருக்கும் இரும்பால் ஆன வளையம்

தமிழ் கட்டு யின் அர்த்தம்

கட்டு

பெயர்ச்சொல்

சித்த வைத்தியம்
 • 1

  சித்த வைத்தியம்
  பால், தேன் முதலியவற்றில் உரைத்துக் கொடுக்கப்படும் கெட்டிப்படுத்தப்பட்ட மருந்துப்பொருள்.

தமிழ் கட்டு யின் அர்த்தம்

கட்டு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (உடலில் தோன்றும்) கட்டி.