தமிழ் கடத்து யின் அர்த்தம்

கடத்து

வினைச்சொல்கடத்த, கடத்தி

 • 1

  (ஒரு பொருளைக் கொண்டுபோதல் அல்லது போக விடுதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (ஒருவரை) விருப்பத்துக்கு மாறாகக் கொண்டுபோதல்

   ‘துப்பாக்கி முனையில் ஒரு பெண்ணைக் கடத்த முயற்சி செய்திருக்கிறார்கள்’

  2. 1.2 (அரசால் தடைசெய்யப்பட்ட பொருளை) அனுமதி இல்லாமல் எடுத்துச் செல்லுதல்

   ‘கஞ்சா போன்ற போதைப்பொருள்களைக் கடத்துவது அதிகமாகிவிட்டது’
   ‘காட்டிலிருந்து தேக்கு மரங்களை வெட்டிக் கடத்த முயன்றவர்கள் கைதுசெய்யப்பட்டனர்’

  3. 1.3 (ஆயுதங்களைக் காட்டி, மிரட்டி விமானம் போன்றவற்றை) சட்டவிரோதமாகக் கைக்கொள்ளுதல்

  4. 1.4 உட்புகுந்து அல்லது ஒன்றின் வழியே செல்ல அனுமதித்தல்

   ‘சிலவகை மண் மட்டுமே நீரைக் கடத்தும் திறனைப் பெற்றிருக்கும்’
   ‘மின்சாரத்தைச் செப்புக் கம்பி எளிதில் கடத்தும்’

  5. 1.5 (கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில்) (எதிர் அணியினருக்குக் கிடைக்காத முறையில் தன் அணியில் உள்ளவருக்குப் பந்தை) அனுப்புதல் அல்லது போக விடுதல்

   ‘பந்தைக் கடத்தும் நுணுக்கம் இன்னும் நம் அணியினருக்குச் சரியாக வரவில்லை’

 • 2

  (காலத்தைக் கழியவிடுதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (காலத்தை) போக்குதல்; கழித்தல்

   ‘பேசியே காலத்தைக் கடத்தாமல் உருப்படியாக ஏதாவது செய்!’
   ‘நூறு ரூபாயில் இன்னும் நான்கு நாட்களைக் கடத்தியாக வேண்டும்’