தமிழ் கணக்கு யின் அர்த்தம்

கணக்கு

பெயர்ச்சொல்

 • 1

  கூட்டல், கழித்தல், பெருக்கல் போன்ற முறைகள் அடங்கிய, பள்ளியில் கற்பிக்கப்படும் படிப்பு; கணிதம்.

  ‘எனக்குப் பிடித்த பாடமான கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கிவிடுவேன்’
  ‘நான் விருப்பப் பாடமாகக் கணக்கை எடுத்திருக்கிறேன்’
  ‘இவர் மிக நன்றாகக் கணக்குச் சொல்லிக்கொடுப்பார்’

 • 2

  கணிதத்தில் விடை காணப்பட வேண்டிய கூட்டல், கழித்தல் அல்லது இயற்கணித சமன்பாடு போன்றவற்றுள் ஒன்று.

  ‘கணங்களைப் பயன்படுத்திக் கொடுக்கப்பட்ட கணக்கிற்கான விடையைக் காணவும்’
  ‘வெவ்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி இந்தக் கணக்கைப் போடலாம்’
  ‘இந்தக் கணக்கை எப்படிப் போடுவது என்று எனக்குத் தெரியவில்லை’
  ‘மனிதன் பத்து நிமிடம் செலவழித்துப் போடும் ஒரு கணக்கைக் கணிப்பொறி சில நொடிகளில் போட்டு முடித்துவிடுகிறது’

 • 3

  (பணம், பொருள் ஆகியவற்றின்) வரவுசெலவு அல்லது கொடுக்கல்வாங்கல் பற்றிய விபரம்.

  ‘வாங்கிய பணத்துக்கு என்ன செலவு? கணக்கு காட்டு!’
  ‘வங்கியில் அரையாண்டுக் கணக்கை முடிப்பதற்காக நாளை விடுமுறை அறிவித்திருக்கிறார்கள்’

 • 4

  (சொத்து, வருமானம் போன்றவற்றுக்கான) முறையான விபரம்.

  ‘தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்கள் சொத்துக் கணக்கைக் கட்டாயம் காட்ட வேண்டும்’
  ‘இந்த ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு இன்னும் தயாராகவில்லை’

 • 5

  (வங்கி, அஞ்சலகம் போன்றவற்றில்) பணம் செலுத்துதல், எடுத்தல் போன்ற வசதிகளுடைய, வாடிக்கையாளர்களுக்கு உரிய ஏற்பாடு.

  ‘நீ செலுத்தியதாகச் சொன்ன ஆயிரம் ரூபாய் இன்னும் என் கணக்கில் வரவில்லையே’
  ‘வங்கியில் என் மகள் பெயரில் ஒரு புதுக் கணக்குத் தொடங்கியிருக்கிறேன்’

 • 6

  (வாங்கிய பொருளுக்கு அல்லது ஒரு சேவைக்கு) செலுத்த வேண்டிய மொத்தத் தொகை/இந்தத் தொகையைப் பின்னால் மொத்தமாகக் கொடுப்பதற்கான ஏற்பாடு.

  ‘கடையில் பொருள்களையெல்லாம் வாங்கிய பின் கணக்கு எவ்வளவு என்று கேட்டேன்’
  ‘விடுதியில் இந்த மாதத்துச் சாப்பாட்டுக்கான கணக்கு முந்நூறு ரூபாய்’
  ‘நண்பனுக்கு ஓட்டலில் என் கணக்கில் சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன்’
  ‘மளிகைக் கடையில் எனக்குக் கணக்கு இருப்பதால் சாமான்களை வாங்கிக்கொண்டு மாதக் கடைசியில் பணத்தைக் கொடுத்துவிடுவேன்’

 • 7

  மதிப்பீடு; கணிப்பு.

  ‘பொறியியல் கணக்குப்படி இந்தக் கட்டடம் இன்னும் ஐம்பது ஆண்டுகள் உறுதியாக இருக்கும்’
  ‘அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தால் வெற்றிபெறலாம் என்பது இவரது கணக்கு’
  ‘என் மகன் விஷயத்தில் என் கணக்கு பொய்த்தது கிடையாது’
  ‘அந்தச் சோதிடரின் கணக்குப்படி இன்னும் ஒரு வருடத்தில் எனக்கு வேலை கிடைத்துவிடும்’

 • 8

  (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) (ஒன்றின் மிகுதியைச் சுட்டிக்காட்டும் விதமாகக் கூறும்போது) அளவு.

  ‘அவர்மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்குக் கணக்கே கிடையாது’
  ‘பிரபஞ்சத்தில் கணக்கற்ற நட்சத்திரக் கூட்டங்கள் காணப்படுகின்றன’

 • 9

  பேச்சு வழக்கு (இருவருக்கு இடையே உள்ள) தொடர்பு.

  ‘இன்றோடு உனக்கும் எனக்கும் உள்ள கணக்கு தீர்ந்தது’

 • 10

  (தரப்பட்ட விபரத்தின், எண்ணிக்கையின்) விகிதாச்சாரம்.

  ‘உலக மக்கள்தொகையில் ஆறு பேருக்கு ஒருவர் என்ற கணக்கில் இந்தியர்கள் உள்ளனர்’
  ‘ஒரு வருடத்தில் வெளியாகும் நூறு படங்களில் பத்துப் படங்கள் மட்டுமே வெற்றிபெறுகின்றன என்பது கணக்கு’

 • 11

  (கணக்கெடுப்பின் அடிப்படையில் தரப்படும்) புள்ளிவிபரம்.

  ‘கடந்த பத்தாண்டுகளில் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துவிட்டதாக அரசாங்கத்தின் பிறப்பு இறப்புக் கணக்கு தெரிவிக்கிறது’
  ‘2001ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்தியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ 103 கோடி ஆகும்’

 • 12

  இசைத்துறை
  (தாளம், ஸ்வரம் போன்றவற்றை வாசிப்பதற்கான) கால அடிப்படையில் அமைந்த பகுப்புமுறை.

  ‘தாளக் கணக்கு தவறிவிட்டது’

 • 13

  (விளையாட்டுகளில் புள்ளிகளின் அடிப்படையில் செய்யும்) தகுதி நிர்ணயம்.

  ‘ஒவ்வொரு சுற்றிலும் வெற்றிபெறக் குறிப்பிட்ட புள்ளிக் கணக்குகள் உண்டு’
  ‘இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான டேவிஸ் கோப்பை போட்டியில் இந்தியா 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது’
  ‘அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இரண்டாம் சுற்றில் சானியா மிர்ஸா 6-4, 1-6, 6-4 என்ற கணக்கில் வென்றார்’
  ‘கால்பந்தாட்டத்தில் மதுரை அணி 3-2 என்ற கணக்கில் வென்றது’

 • 14

  அளவீட்டு முறை.

  ‘திரவப் பொருள்களை லிட்டர், மில்லிலிட்டர் கணக்கிலும் திடப் பொருள்களை கிராம், கிலோகிராம் கணக்கிலும் அளவிடுகிறோம்’