தமிழ் கருத்து யின் அர்த்தம்

கருத்து

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒன்றைப் பற்றி அல்லது ஒருவரைப் பற்றி ஒருவர் கொண்டுள்ள) எண்ணம்; அபிப்பிராயம்.

  ‘இந்தத் திட்டத்தை நாம் மேற்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். உன் கருத்து என்ன?’
  ‘எதிலும் வன்முறை கூடாது என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து’
  ‘கருத்துச் சுதந்திரம் வேண்டும்’

 • 2

  (ஒரு பொருள்பற்றிய) முறைப்படுத்தப்பட்ட சிந்தனை; (கவிதை, கட்டுரை முதலியவற்றில்) தெரிவிக்கப்படும் பொருள்.

  ‘இந்த நூலில் ஆசிரியர் தெரிவித்திருக்கும் கருத்துகள் புரட்சிகரமானவை’
  ‘நுட்பமான கருத்துகளையும் மொழியால் சொல்லிவிட முடிகிறது’

 • 3

  நோக்கம்.

  ‘இந்த நூல் உனக்குப் பயன்படும் என்ற கருத்தில்தான் வாங்கச் சொன்னேன்’
  ‘மோசடிக் கருத்துடன் இதைச் சொல்லியிருக்கிறான்’

 • 4

  அக்கறை.

  ‘கருத்தாக வேலைசெய்கிறான்’

 • 5

  (பெரும்பாலும் கருத்தில் என்னும் வடிவத்தில் மட்டும்) கவனத்தில் (கொள்ளுதல்).

  ‘விவசாயிகளைக் கருத்தில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது’
  ‘இந்த நாவலாசிரியர் ஒரு அறிவியல் பேராசிரியர் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்’

 • 6

  (பெரும்பாலும் ‘கண்ணையும் கருத்தையும்’ என்ற தொடரில்) (கலை நயமுள்ள அல்லது அர்த்தம் பொதிந்த ஒன்றை உள்வாங்கிக்கொள்ளும்) அறிவுத் திறன்.

  ‘கண்காட்சியில் இடம்பெற்றிருந்த ஓவியங்கள் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் இருந்தன’