தமிழ் கவனி யின் அர்த்தம்
கவனி
வினைச்சொல்
- 1
(பார்த்தல், கேட்டல் மூலம் ஒன்றை) மனத்தால் அறிந்துகொள்ளுதல்.
‘வீட்டு மாடியில் விளக்கு எரிந்துகொண்டிருந்ததைக் கவனித்தேன்’‘நான் அவர் பேச்சைக் கவனித்துக்கொண்டிருந்ததால் நீ வந்ததைக் கவனிக்கவில்லை’ - 2
(ஒன்றுக்கு) பொறுப்பேற்றுச் செய்தல்.
‘ஒழுங்காக உன் வேலையைக் கவனி!’‘முதலமைச்சரே நிதித் துறையையும் கவனித்துவருகிறார்’ - 3
அக்கறையுடன் பேணுதல்; பராமரித்தல்.
‘பையனைக் கவனித்து வளர்க்காததால் இப்போது கஷ்டப்பட வேண்டியுள்ளது’‘‘வேலைவேலை என்று வீட்டைக் கவனிக்கக்கூட நேரமில்லாமல் அலைகிறாயே?’ என்று கேட்டான் என் நண்பன்’‘தாத்தாவைக் கவனித்துக்கொள்ள ஆள் வைத்திருக்கிறோம்’ - 4
பரிசீலனைக்கு எடுத்தல்.
‘முகவரி இல்லாத விண்ணப்பம் கவனிக்கப்பட மாட்டாது’‘போராட்டம் நடத்தினால்தான் நிர்வாகம் நம் கோரிக்கைகளைக் கவனிக்குமா?’ - 5
(ஒன்றில் ஒரு அம்சத்தை) குறிப்பிட்டுச் சொல்லுதல்.
‘இவருடைய நாவல்களில் இருத்தலியல் சிந்தனைகள் பரவலாகக் காணப்படுவது கவனிக்கத் தகுந்த அம்சமாகும்’‘இந்தியத் தொழில்துறையில் சில ஆண்டுகளாகக் கவனிக்கத் தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன’ - 6
உபசரித்தல்.
‘நான் அவர்கள் வீட்டில் இருந்த மூன்று நாட்களும் என்னை நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள்’‘என்னைக் கவனிப்பது இருக்கட்டும்; முதலில் வீட்டுக்கு வந்த விருந்தினர்களைக் கவனியுங்கள்’ - 7
(ஒருவரை அல்லது ஒரு படைப்பு முதலியவற்றை) இனம்காணுதல்.
‘சமூகத்தால் கவனிக்கப்படாத அரிய கலைஞன்’‘அவருடைய முதல் நாவல் எல்லாராலும் கவனிக்கப்பட்டது’ - 8
பேச்சு வழக்கு (ஒருவரைப் பணியச் செய்வதற்காக அவர்மீது) வன்முறையைச் செலுத்துதல்.
‘அவன் ரொம்பவும் துள்ளுகிறான். கொஞ்சம் கவனித்தால்தான் சரிப்படுவான்’ - 9
பேச்சு வழக்கு (ஒரு காரியத்தை முடித்துத் தருவதற்காக ஒருவருக்கு) பணம், சலுகை போன்றவற்றைத் தருதல்.
‘‘என்னைக் கொஞ்சம் கவனியுங்கள், காரியத்தை எளிதாக முடித்துத்தருகிறேன்’ என்று அவன் என்னிடமே லஞ்சம் கேட்டான்’