தமிழ் காட்டு யின் அர்த்தம்

காட்டு

வினைச்சொல்காட்ட, காட்டி

 • 1

  (பார்க்கச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (கை, விரல் அல்லது குச்சி போன்றவற்றை நீட்டி ஒருவர் ஒன்றை) காணும்படி செய்தல்; சுட்டுதல்

   ‘இந்தப் படத்தில் நீ எங்கே இருக்கிறாய் என்று காட்டு!’
   ‘அதோ அங்கே நிற்கிறாரே அவர்தான் என் சித்தப்பா என்று கை நீட்டிக் காட்டினான்’
   ‘தம்பி! காமராஜர் நகர் எங்கிருக்கிறது என்று கொஞ்சம் காட்டுகிறாயா?’
   உரு வழக்கு ‘அண்ணல் காந்தி காட்டிச் சென்ற அகிம்சை நெறியை நாம் மறந்துவிட்டோம்’

  2. 1.2 (மிரட்டும் நோக்கத்தோடு ஒருவரை நோக்கித் துப்பாக்கி, கத்தி போன்றவற்றை) நீட்டுதல்

   ‘கத்தியைக் காட்டி மிரட்டிப் பணத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டான்’
   ‘அப்போதெல்லாம் எங்கள் ஆசிரியர் பிரம்பைக் காட்டினாலே போதும்; நாங்கள் அலறுவோம்’

  3. 1.3 (வாகனத்தை நிறுத்தும் அடையாளமாகக் கையை) நீட்டுதல்

   ‘கையைக் காட்டியும் பேருந்து நிற்கவில்லை’

  4. 1.4 (நெருப்பில் படும்படி ஒன்றை) பிடித்தல்

   ‘சோளக் கதிரைத் தீயில் காட்டி வாட்டினான்’

  5. 1.5 சூடம், தீபம் போன்றவற்றை விக்கிரகம் முதலியவற்றின் முன்பாக நீட்டிச் சுற்றுதல்

   ‘மணி அடித்துச் சாமி படத்தின் முன் சூடம் காட்டினார்’

  6. 1.6 (படத்தை) திரையிடுதல்/(தொலைக்காட்சியில் படத்தை) ஒளிபரப்புதல்

   ‘இந்தத் திரையரங்கில் என்ன படம் காட்டுகிறார்கள்?’
   ‘இந்த ஞாயிற்றுக்கிழமை பொதிகையில் காட்டிய படத்தைப் பார்த்தாயா?’

 • 2

  (தெரிந்துகொள்ளும்படி செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (சைகை, முக பாவனை போன்றவற்றின் மூலம் ஒன்றைப் பிறர்) காணும்படி அல்லது அறியும்படி செய்தல்

   ‘அவனிடம் பேசக் கூடாது என்று எனக்குச் சைகை காட்டினான் என் நண்பன்’
   ‘அந்த நடனக் கலைஞர் நவரசங்களையும் முகத்தில் அற்புதமாகக் காட்டினார்’

  2. 2.2 (மருத்துவரை நாடி) சிகிச்சை பெறுதல்

   ‘ஒரு மாதமாக ஒரே முதுகுவலி; பல மருத்துவர்களிடம் காட்டியும் பயன் இல்லை’
   ‘பல் வலி நிற்கவில்லையென்றால் மருத்துவரிடம் காட்டு’

  3. 2.3 (ஒன்று மற்றொன்றை) அறியச் செய்யும்படி உணர்த்துதல்

   ‘அவன் நடவடிக்கைகள் அவனுடைய நிதானப் போக்கைக் காட்டுகின்றன’
   ‘வீட்டின் தோற்றமே அவரைக் கலை நயம் மிக்கவராகக் காட்டுகிறது’

  4. 2.4 (பெரும்பாலும் எதிர்மறையில்) (சத்தத்தை) வெளிப்படுத்துதல்

   ‘சத்தம் காட்டாமல் அறையிலிருந்து வெளியேறினான்’

  5. 2.5 (அக்கறை, அன்பு, ஆர்வம் போன்றவற்றை) செலுத்துதல்; (குறிப்பிட்ட உணர்வு, தன்மை, நிலை போன்றவற்றைப் பிறர் உணரும் வகையில் அல்லது குறிப்பிட்ட பாதிப்பை ஏற்படுத்தும் வகையில்) வெளிப்படுத்துதல்

   ‘பிறர் விஷயத்தில் ஆர்வம் காட்டாதவர்கள் குறைவு’
   ‘ஒரு கோழையிடமா உன் வீரத்தைக் காட்டுவது?’
   ‘கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது அவர் தன் அதிருப்தியைக் காட்டுவதற்காக எழுந்து வெளியேறினார்’
   ‘மகனின் படிப்பு விஷயத்தில் அலட்சியம் காட்டாதீர்கள் என்று நண்பர் அறிவுரை கூறினார்’
   ‘இரண்டு பேரும் உங்கள் பிள்ளைகள்தானே; ஏன் இப்படிப் பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்று அவரைக் கேட்டேன்’

  6. 2.6 (சலுகை) அளித்தல்

   ‘தனக்கு வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டுவதாக அவர்மீது புகார் உண்டு’

  7. 2.7 (குறிப்பிட்ட ஒன்றை விளக்கும் முறையில் ஒன்றை) குறித்தல்

   ‘சதவீதத்தைக் காட்ட % என்ற குறியை இடுகிறோம்’
   ‘இது பங்குச் சந்தையில் கடந்த மாதம் ஏற்பட்ட ஏற்றஇறக்கங்களைக் காட்டும் வரைபடம் ஆகும்’
   ‘சமாதானத்தையும் அமைதியையும் காட்ட வெள்ளை நிறம் பயன்படுகிறது’

  8. 2.8 (மேற்கோள், உதாரணம் போன்றவற்றை) குறிப்பிடுதல்

   ‘தன் ஆய்வுக்குத் தொடர்புடைய சில சான்றுகளை அவர் சிலப்பதிகாரத்திலிருந்து காட்டியுள்ளார்’
   ‘தற்போதைய எழுத்தாளர்கள் எழுதுவது ஒன்றுமே புரியவில்லை என்று அவர் இரு கவிதைகளை உதாரணம் காட்டிப் பேசினார்’

  9. 2.9 (ஒருவர் இப்படிப்பட்டவர் என்பதைப் பிறருக்கு) தெரியச் செய்தல்; நிரூபித்தல்

   ‘நான் யார் என்று உங்களுக்குக் காட்டுகிறேன் என்று அவன் சபதம் செய்தான்’
   ‘அவர் எப்படிப்பட்டவர் என்பதை நான் உனக்குக் காட்டுகிறேன்’

  10. 2.10 (கடிகாரம் முதலிய சாதனங்கள் குறிப்பிட்ட நேரம், அளவு முதலியவற்றை) தெரியச் செய்தல்

   ‘கைக்கடிகாரம் 10 மணியைக் காட்டியது’
   ‘வெப்பமானி 20ᵒC அளவைக் காட்டியது’

தமிழ் காட்டு யின் அர்த்தம்

காட்டு

துணை வினைகாட்ட, காட்டி

 • 1

  முதன்மை வினையின் செயல், பிறர் நன்மை கருதியோ பிறர் அறிவதற்காகவோ நிகழ்த்தப்படுவது என்பதைக் குறிக்கும் ஒரு துணை வினை.

  ‘அவர் உடற்பயிற்சி செய்துகாட்டினார்’
  ‘அந்த ராகத்தை மீண்டும் பாடிக்காட்டு!’
  ‘இந்தத் தேர்வில் முதல் வகுப்பு வாங்கிக்காட்டுகிறேன்’