தமிழ் காண் யின் அர்த்தம்

காண்

வினைச்சொல்காண, கண்டு

 • 1

  (கண்ணுக்குத் தெரிதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 பார்த்தல்

   ‘நான் தேடிச் சென்ற நண்பர் எதிரில் வருவதைக் கண்டேன்’
   உரு வழக்கு ‘பல நூற்றாண்டுகளைக் கண்ட நிறுவனம் இது’
   உரு வழக்கு ‘பல பதிப்புகள் கண்ட புத்தகம் இது’

  2. 1.2 (ஒருவரை அல்லது ஒரு பிரச்சினை, நிகழ்வு போன்றவற்றை) சந்தித்தல்

   ‘பன்னிரண்டு மணிக்கு அவர் உங்களைக் காண வருகிறார்’
   ‘சரித்திரம் கண்டிராத சிந்தனையாளர் அவர்’
   உரு வழக்கு ‘வரலாறு காணாத வெற்றி’
   உரு வழக்கு ‘இவர் வாழ்க்கையில் பல ஏற்றஇறக்கங்களைக் கண்டவர்’

  3. 1.3 (எதிர்மறை வடிவங்களில் மட்டும்) (தேடப்படும் அல்லது எதிர்பார்க்கப்படும் இடத்தில்) பார்க்க முடிதல்

   ‘எங்கே தேடினாலும் பேனாவைக் காணோம்’
   ‘வகுப்பறையில் மாணவர்களைக் காணோமே!’
   ‘குளத்தில் தண்ணீரையே காணோம்’
   ‘‘எங்கே ஒரு வாரமாக ஆளையே காணவில்லை?’ என்று அவர் கேட்டார்’

  4. 1.4 (செய என்னும் வினையெச்சத்தோடு இணைந்து ‘காணோம்’ என்னும் எதிர்மறை வடிவத்தில் மட்டும்) (எதிர்பார்க்கப்படும் ஒன்று) நிகழ்தல்

   ‘இன்னும் பால்காரர் வரக் காணோம்’
   ‘அவர் இரண்டு நாட்களாக வீட்டை விட்டு எங்கும் வெளியில் கிளம்பக் காணோம்’

  5. 1.5 (பார்வையில் படும் வகையில் வெடிப்பு, விரிசல் போன்றவை) உண்டாதல்

   ‘சிமிண்டுக் கலவை சரி இல்லாததால் சுவர் விரிசல் கண்டிருக்கிறது’

  6. 1.6 (கண்ணில்) தென்படுதல்

   ‘கண்ணில் கண்ட மனிதர்கள் எல்லோரிடமும் ஏதோ ஒரு அவசரம் தெரிந்தது’
   ‘காணும் இடங்களிலெல்லாம் ஒரே பசுமையாக இருந்தது’

 • 2

  (அனுபவித்தல், உணர்தல், அறிதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (வெற்றி, தோல்வி, மாற்றம் அல்லது இன்பம், துன்பம் முதலியவற்றை) அடைதல்; பெறுதல்; அனுபவித்தல்

   ‘அவருடைய முதல் படமே பெரிய வெற்றியைக் கண்டது’
   ‘தொழில் துறையில் நம் நாடு வியக்கத் தக்க வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது’
   ‘அவன் வாழ்க்கையில் காணாத சுகம் இல்லை’
   ‘ஆரவாரத்தோடு அவர் தொடங்கிய துணி வியாபாரம் போகப்போகத் தொய்வு கண்டது’
   ‘இருபது வருட மண வாழ்க்கையில் அவள் என்ன கண்டாள்?’

  2. 2.2 (நோய், எரிச்சல் முதலியவை) ஏற்படுதல்

   ‘அவருக்குக் காய்ச்சல் கண்டிருக்கிறது’
   ‘தீக்காயத்தில் தண்ணீர் பட்டவுடன் எரிச்சல் கண்டது’

  3. 2.3 (வழி, தீர்வு அல்லது குறை முதலியவற்றை) கண்டுபிடித்தல்

   ‘இந்தப் பிரச்சினைக்கு விரைவில் ஒரு முடிவு காண்போம்’
   ‘எலிகளை ஒழிக்க நாம் ஒரு வழி காண வேண்டும்’
   ‘நாம் எதைச் செய்தாலும் அதில் குறை காணும் பழக்கம் அவருக்கு உண்டு’

  4. 2.4 (இன்ன முறையிலானது என்று) உணர்தல் அல்லது கவனித்தல்

   ‘தன் கணவனிடமிருந்து சாராய நெடி வருவதைக் கண்டு முகம் சுளித்தாள்’
   ‘தன் மகள் படும் கஷ்டத்தைக் கண்டு அவர் மனம் வாடினார்’
   ‘அந்த எழுத்தாளரைக் கண்டு நான் வியக்கிறேன்’
   ‘அந்த இசை மேதையின் இரண்டு முக்கிய இசை வடிவங்களுக்கும் இடையில் அதிக ஒற்றுமையை விமர்சகர்கள் கண்டனர்’
   ‘மக்கள் எழுச்சியைக் கண்டு ஆங்கிலேயர் கலக்கமுற்றனர்’

  5. 2.5 (பார்த்தல், படித்தல் போன்றவற்றின் மூலம் ஒன்றை) தெரிந்துகொள்ளுதல்

   ‘பிரபஞ்சத்தின் தோற்றம்பற்றி அடுத்த அத்தியாயத்தில் சற்று விரிவாகக் காண்போம்’
   ‘நிலையாமையைப் பற்றிய தத்துவங்களை நாம் இந்த நாவலில் காணலாம்’

  6. 2.6 உருவாக்குதல்; நிறுவுதல்

   ‘இயற்பியலில் அரிய தத்துவங்களைக் கண்டவர் மாமேதை ஐன்ஸ்டீன்’
   ‘பத்திரிகைத் துறையில் தனக்கென்று தனிவழி கண்டவர் அவர்’

  7. 2.7 (கடிதம், பத்திரம் போன்றவற்றில் ஒன்று) குறிப்பிடப்பட்டிருத்தல்; கொடுக்கப்பட்டிருத்தல்

   ‘தங்கள் கடிதத்தில் கண்டுள்ளபடி நான் தங்கள் நண்பருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டேன்’
   ‘பத்திரத்தில் கண்டபடி சொத்துகளைப் பிரித்துக்கொண்டார்கள்’

 • 3

  (மரபு வழக்கு) (அஃறிணையில் மட்டும்)

  1. 3.1 (இறந்தகால உடன்பாட்டு வடிவங்கள் வினா வாக்கியத்தில் வரும்போது) எதிர்பார்த்தல்

   ‘இது இப்படி நடக்கும் என்று கண்டேனா?’
   ‘இந்தக் கட்சி இரண்டாகப் பிளவுபடலாம், யார் கண்டது?’

  2. 3.2 (ஒன்று குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்களுக்கு அல்லது குறிப்பிட்ட காலம்வரை) போதுமானதாக இருத்தல்

   ‘ஒரு பானைச் சோறு எத்தனை பேருக்குக் காணும்?’
   ‘நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீர் இரண்டு மாதங்களுக்குக் கூடக் காணாது’

  3. 3.3 (விளைச்சல்) கிடைத்தல்; தேறுதல்

   ‘இந்த வருடம் விளைச்சல் எவ்வளவு காணும்?’