தமிழ் கால் யின் அர்த்தம்

கால்

பெயர்ச்சொல்

 • 1

  நிற்பது, நடப்பது, ஓடுவது முதலிய செயல்களைச் செய்யத் தேவையான (மனிதனுக்கு இடுப்பின் கீழும் விலங்கு, பறவை முதலியவற்றுக்கு உடலின் கீழ்ப் புறத்திலும் இருக்கும்) உறுப்பு.

  ‘பந்தைக் காலால் உதைத்தான்’
  ‘நாயின் காலில் காயம்பட்டிருந்தது’
  ‘வண்டுக்கு ஆறு கால் உண்டு’

 • 2

  மேஜை, நாற்காலி போன்றவற்றில் அவற்றின் மேல்பகுதியைத் தாங்கி நிற்கும் கோல் போன்ற பகுதி.

  ‘அந்த நாற்காலியின் ஒரு கால் உடைந்துவிட்டது’

 • 3

  (சடையைக் குறித்து வரும்போது) பிரிக்கப்பட்ட முடிக்கற்றை.

  ‘காலுக்குக் கால் சீவி அக்கா அழகாகப் பின்னிவிடுவாள்’

 • 4

  (பந்தல், கொட்டகை முதலியவை அமைக்கத் தரையில் ஊன்றும்) கழி அல்லது கம்பு.

  ‘திருமணப் பந்தலுக்குக் கால் நட்டுவிட்டார்கள்’

 • 5

  (பெரும்பாலும் கூட்டுச்சொற்களில்) (தேரின் அல்லது வண்டியின்) சக்கரம்; அடி.

  ‘வண்டிக்கால் உடைந்துவிட்டது’
  ‘தேர்க்காலில் மாட்டிக் கன்று இறந்த கதை’

தமிழ் கால் யின் அர்த்தம்

கால்

பெயர்ச்சொல்

 • 1

  நான்கில் ஒரு பகுதி.

  ‘கால் லிட்டர் பால் வாங்கி வா!’
  ‘போன வருடம் பெய்த மழையில் கால் பங்குகூட இந்த வருடம் பெய்யவில்லை’

தமிழ் கால் யின் அர்த்தம்

கால்

பெயர்ச்சொல்

 • 1

  தமிழில் மெய்யெழுத்துக்களோடு ‘ஆ’, ‘ஒ’, ‘ஓ’ ஆகிய உயிரெழுத்துகள் சேரும்போது பயன்படுத்தப்படும் ‘ா’ என்ற குறியீடு.

  ‘‘கெ’ என்ற எழுத்துக்குக் கால் போட்டால் ‘கொ’ ஆகிவிடும்’

தமிழ் கால் யின் அர்த்தம்

கால்

இடைச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (எதிர்காலப் பெயரெச்சத்தின் பின்) ‘போது’ என்ற பொருளைத் தரும் இடைச்சொல்.

  ‘இவற்றையெல்லாம் எண்ணுங்கால் நெஞ்சம் களிப்பு அடைகிறது’