கிடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கிடை1கிடை2

கிடை1

வினைச்சொல்கிடைக்க, கிடைத்து

 • 1

  (தேடுதல், முயலுதல், கேட்டல் முதலியவை மூலம் ஒன்று) பெறப்படுதல்.

  ‘அந்தக் கொலை வழக்கில் முக்கியமான ஆதாரம் கிடைத்தது’
  ‘நீண்ட நேரத்திற்குப் பிறகு அமைச்சரைப் பார்க்க அனுமதி கிடைத்தது’
  ‘இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்து அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது’
  ‘கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாத முட்டாள் அவன்’
  ‘விபத்தில் இழந்த பார்வை அறுவைச் சிகிச்சையின் மூலமாகத் திரும்பக் கிடைத்தது’
  ‘தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காதா?’
  ‘விவாகரத்து கிடைத்த சில மாதங்களிலே அவன் வேறொரு திருமணம் செய்துகொண்டான்’

 • 2

  (கடிதம் முதலியவை ஒருவருக்கு) வந்துசேர்தல்.

  ‘நீங்கள் எனக்கு அனுப்பிய தந்தி தாமதமாகத்தான் கிடைத்தது’
  ‘உங்கள் படைப்புகள் கிடைத்ததும் உரிய பதில் அனுப்பப்படும்’

 • 3

  (வாங்குதல், பெறுதல், பயன்படுத்துதல் முதலியவற்றிற்கு ஒன்று) இயலுவதாக இருத்தல்; பெறக்கூடியதாக இருத்தல்.

  ‘விதைப்பதற்கு நல்ல விதைகள் கிடைத்தன’
  ‘நூறு ரூபாய்க்குக் கூடக் கைக்கடிகாரம் கிடைக்கிறது’
  ‘வாடகைக்கு வீடு கிடைக்குமா?’
  ‘இந்த மரத்தில் ஐம்பதுக்கும் குறையாமல் தேங்காய் கிடைக்கும்’
  ‘இந்தியாவில் சில மாநிலங்களில்தான் நிலக்கரி கிடைக்கிறது’

 • 4

  (ஒருவருக்கு) வாய்த்தல்; (ஒன்றிற்கு) அமைதல்.

  ‘கல்லூரியில் படிக்கிற காலத்தில் எனக்குப் பல நண்பர்கள் கிடைத்தார்கள்’
  ‘கதைக்கு ஒரு நல்ல கரு கிடைத்தது’

 • 5

  (குறிப்பிட்ட செயல்முறையின் விளைவாக ஒன்று) வருதல் அல்லது உண்டாதல்.

  ‘பத்தையும் எட்டையும் கூட்டினால் பதினெட்டு கிடைக்கிறது’
  ‘இந்த மட்டையை எரித்தால் சாம்பல் கிடைக்கும்’
  ‘விறகு எரியும்போது கிடைக்கும் வெப்பத்தைவிட இயற்கை எரிவாயுவிலிருந்து கிடைக்கும் வெப்பம் அதிகம்’

 • 6

  (தேடும்போது பொருள் அல்லது நபர்) அகப்படுதல்.

  ‘தண்ணீர் பிடிப்பதற்காகக் கையில் கிடைத்த பாத்திரங்களையெல்லாம் தூக்கிக்கொண்டு வந்திருந்தார்கள்’
  ‘சட்டைப் பையில் கை விட்டுக் கிடைத்த காசுகளை அப்படியே தன் மகனிடம் கொடுத்தார்’
  ‘நண்பர்கள் யாராவது கிடைத்தால் இன்று கடன் வாங்கிவிடுவது என்று தீர்மானம் செய்தார்’

 • 7

  (ஒன்றைச் செய்வதற்கு ஒருவருக்கு நேரம்) இருத்தல்.

  ‘நேரம் கிடைக்கும்போது வீட்டுப் பக்கம் வந்துவிட்டுப் போ’
  ‘இன்றுதான் வீட்டுக்குக் கடிதம் எழுதுவதற்கு எனக்கு நேரம் கிடைத்தது’
  ‘‘முடி வெட்டிக்கொள்ளக்கூட உனக்கு நேரம் கிடைக்கவில்லையா?’ என்று அப்பா தம்பியைத் திட்டினார்’

கிடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கிடை1கிடை2

கிடை2

பெயர்ச்சொல்

 • 1

  வயல்களில் உரத்துக்காக மறித்துவைக்கப்படும் ஆடு மாடுகளின் கூட்டம்.

  ‘ஆட்டுக் கிடையிலிருந்து இரண்டு ஆடுகள் ஓடிப்போய்விட்டன’

 • 2

  படுக்கை வாட்டம்.

  ‘நோயாளியைக் கிடையாகப் படுக்க வை’