தமிழ் கிளப்பு யின் அர்த்தம்

கிளப்பு

வினைச்சொல்கிளப்ப, கிளப்பி

 • 1

  (பெரும்பாலும் இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனங்களை) இயங்கச் செய்தல்; நகரச் செய்தல்.

  ‘ஓட்டுநர் பேருந்தைக் கிளப்பினார்’
  ‘காலால் பல முறை உதைத்து மோட்டார் சைக்கிளைக் கிளப்பினார்’

 • 2

  (பயம், கோபம் முதலியவற்றை) உண்டாக்குதல்/(பசி, நினைவு முதலியவற்றை) ஏற்படுத்துதல்.

  ‘நீரில் விஷம் கலந்துள்ளது என்ற வதந்தி மக்களிடையே பீதியைக் கிளப்பியது’
  ‘‘என் கோபத்தை வீணாகக் கிளப்பாதே’ என்று அவர் என்னை எச்சரித்தார்’
  ‘தக்காளி வதக்கும் வாசனை எனக்குப் பசியைக் கிளப்பியது’

 • 3

  (எதிர்ப்பாகச் செயல்படுமாறு) தூண்டுதல்.

  ‘நீ கிளப்பிவிட்டுத்தான் அவன் இந்த ஆர்ப்பாட்டம் செய்கிறான்’

 • 4

  மேலே வரும்படி செய்தல்; மேலெழுப்புதல்.

  ‘மெதுவாக மேஜையைத் துடை; தூசியைக் கிளப்பாதே!’
  ‘கழுதை வாலைக் கிளப்பிக்கொண்டு ஓடிற்று’

 • 5

  (ஒரு பிரச்சினை, விவகாரம் முதலியவற்றை) ஆரம்பித்தல்; எழுப்புதல்; (பிரச்சினை முதலியவற்றைச் சம்பந்தப்பட்டவர்களிடம்) முன்வைத்தல்.

  ‘அந்த வாரப் பத்திரிகைதான் சுகாதாரத் துறையில் நடந்த ஊழல்களைப் பற்றிய பிரச்சினையை முதலில் கிளப்பியது’
  ‘பாராளுமன்றத்தில் அவர் பொது நிறுவனங்கள்குறித்த குற்றச்சாட்டைக் கிளப்பினார்’

 • 6

  பேச்சு வழக்கு (ஒருவரை வேலையை விட்டு) நீக்குதல்; (ஓர் இடத்திலிருந்து) அப்புறப்படுத்துதல்; அகற்றுதல்.

  ‘முதலில் அவனை அந்த அலுவலகத்திலிருந்து கிளப்ப வேண்டும். அப்போதுதான் அலுவலகம் உருப்படும்’
  ‘முதலில் கடையை இந்த இடத்தை விட்டுக் கிளப்பு’

 • 7

  பேச்சு வழக்கு திருடுதல்.

  ‘எப்படியோ புத்தகத்தைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டான்’

 • 8

  இலங்கைத் தமிழ் வழக்கு உயர்த்துதல்; தூக்குதல்.

  ‘அவன் வேட்டியைக் கிளப்பிக் கட்டிக்கொண்டான்’

 • 9

  இலங்கைத் தமிழ் வழக்கு தோண்டியெடுத்தல்.

  ‘தென்னங்கன்றைக் கிளப்பி முன்னுக்கு வை’
  ‘மாமா இரண்டு வாழைக் கன்று கேட்டிருக்கிறார்; கிளப்பி வை’