தமிழ் குத்து யின் அர்த்தம்

குத்து

வினைச்சொல்குத்த, குத்தி

 • 1

  (மடக்கிய கைவிரல்களால் அல்லது ஒரு கருவியால் அடித்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (விரல்களை மடக்கிக்கொண்டு) பலமாக அடித்தல்

   ‘மண் மூட்டையைக் குத்திக் குத்துச் சண்டைக்காகப் பயிற்சி செய்துகொண்டிருந்தார்’
   ‘சப்பாத்தி மாவைக் குத்தி நன்றாகப் பிசை!’

  2. 1.2 (உலக்கையால்) இடித்தல்

   ‘அம்மாவும் சித்தியும் திண்ணையில் நெல் குத்திக்கொண்டிருந்தார்கள்’

  3. 1.3 (முத்திரை) பதித்தல்

   ‘இந்தத் தபால்தலையில் மட்டும் முத்திரை குத்தப்படவில்லை’

 • 2

  (பலமாக நெருக்குதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (பேனைக் கொல்லும் பொருட்டு நகத்தால்) நசுக்குதல்

 • 3

  (கூர்மையாக இருப்பது துளைத்தல் அல்லது உள்ளே போதல் தொடர்பான வழக்கு)

  1. 3.1 (முள், ஆணி போன்றவை) தைத்தல்

   ‘காலில் ஆணி குத்தி இரத்தம் வடிகிறது’
   ‘மீன் முள் தொண்டையில் குத்திக் கொண்டுவிட்டது’
   உரு வழக்கு ‘அவளுடைய வார்த்தை மனத்தில் சுருக்கென்று குத்தியது’

  2. 3.2 (ஊசி போன்றவற்றை) செருகுதல்; (ஒன்றை) துளைத்து உள்ளே போகும்படி அழுத்துதல்

   ‘ஊசி குத்திய இடம் வீங்கியிருக்கிறது’
   ‘கடிதங்களைக் கம்பியில் குத்தித் தொங்கவிட்டார்’

  3. 3.3 (கத்தி, ஈட்டி முதலிய ஆயுதங்களால்) தாக்குதல்

   ‘கத்தியால் குத்திக் கொலை!’
   ‘புலியை ஈட்டியால் குத்திக் கொன்றிருக்கிறார்கள்’

  4. 3.4 (பம்பரத்தை விசையோடு தரையில்) வீசுதல்

   ‘வட்டத்துக்குள் இருந்த பம்பரத்தைக் குத்தி வெளியே எடுத்தான்’

  5. 3.5 சுரீரென்று வலித்தல்

   ‘கட்டியில் சீழ் பிடித்துக் குத்துகிறது’
   ‘குத்தும் குளிரையும் பொருட்படுத்தவில்லை’
   ‘கால் குத்துகிறது’

தமிழ் குத்து யின் அர்த்தம்

குத்து

பெயர்ச்சொல்

 • 1

  (மடக்கிய கைவிரல்களால் விழும்) அடி.

  ‘முகத்தில் பலமான குத்து விழுந்தது’

 • 2

  (உலக்கையின்) கீழ் நோக்கிய ஒரு வீச்சு.

  ‘இன்னும் நாலு குத்தில் மாவு இடிபட்டுவிடும்’

 • 3

  (உடலில் கத்தி, ஈட்டி முதலிய ஆயுதங்கள் துளைத்த) காயம்.

 • 4

  பேச்சு வழக்கு கைப்பிடி அளவு.