தமிழ் கூட்டு யின் அர்த்தம்

கூட்டு

வினைச்சொல்கூட்ட, கூட்டி

 • 1

  (ஒரு இடத்தில் கிடக்கும் குப்பைகளைத் துடைப்பம் போன்றவற்றைக் கொண்டு தள்ளுவதன் மூலம்) ஒன்று சேர்த்து அகற்றுதல்; பெருக்குதல்.

  ‘தெருவில் சேர்ந்திருக்கும் குப்பையைக் கூட்ட இன்னும் ஆட்கள் வரவில்லை’
  ‘ஒட்டடையைத் தட்டி அறையைக் கூட்டு!’

 • 2

  ஒன்றுசேர்த்தல்; (ஓர் இடத்தில்) திரட்டுதல்.

  ‘எச்சிலைக் கூட்டி விழுங்கினான்’
  ‘குழந்தை தன் சின்ன விரல்களைக் கூட்டி விரித்து விளையாடிக்கொண்டிருந்தது’
  ‘வேப்பங்கொட்டையைக் கூட்டிக் குவித்தாள்’

 • 3

  (உறுப்பினர்களை) வருவித்துக் கூட்டம் நடத்துதல்; (மக்களை) திரண்டுவரச் செய்தல்; பலரை ஒரு இடத்திற்கு வரச் செய்தல்.

  ‘சட்டப்பேரவையை எப்போது கூட்டுவது?’
  ‘நேற்றுக் கூட்டப்பட்ட கட்சிக் கூட்டத்தில் ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை’
  ‘சின்ன விஷயத்துக்குக்கூட அவள் கூச்சல்போட்டு ஊரைக் கூட்டிவிடுவாள்’

 • 4

  (தேவையானவற்றை) கலத்தல்; கலந்து தயாரித்தல்.

  ‘ரசம் கூட்டத் தெரியாதா உனக்கு?’
  ‘வண்ணம் கூட்டித் தீட்டிய ஓவியம்’

 • 5

  (எண்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து) மொத்தமாக்குதல்; தொகையைக் கணக்கிடுதல்.

  ‘நான் பொருள்களின் விலைகளைச் சொல்லச்சொல்ல அவர் கூட்டிக்கொண்டேவந்தார்’

 • 6

  (அளவை) அதிகப்படுத்துதல்.

  ‘மொத்த வியாபாரிகள் தம் விருப்பம்போல் பொருள்களின் விலையைக் கூட்டிவிடுகிறார்கள்’

 • 7

  இலங்கைத் தமிழ் வழக்கு சிறிது நீர் விட்டு மிளகாயை அரைத்து உருட்டி வைத்தல்.

  ‘கூட்டிய மிளகாயைத் தேங்காய்ப் பாலோடு கரைத்துக்கொள்’

தமிழ் கூட்டு யின் அர்த்தம்

கூட்டு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (தொழிலில், வேலையில் அல்லது ஒரு செயலில்) பங்கு அல்லது துணை.

  ‘என் நண்பனை வியாபாரத்தில் கூட்டு சேர்த்துக்கொண்டேன்’
  ‘கொள்ளையில் கூட்டு’

 • 2

  நபர்களின் அல்லது அமைப்புகளின் இணைப்பு.

  ‘குடும்பத்தினர் அனைவரும் கூட்டாக வழிபட்டனர்’
  ‘பல நாடுகளின் ராணுவக் கூட்டு’
  ‘தேடுதல் வேட்டையில் கூட்டு அதிரடிப்படை ஈடுபட்டது’

தமிழ் கூட்டு யின் அர்த்தம்

கூட்டு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  ஒரு காய்கறியை நறுக்கி வேகவைத்துப் பருப்பு, தேங்காய் முதலியவை சேர்த்து (திரவ நிலையில்) தயாரிக்கும் ஒரு தொடுகறி.

  ‘புடலங்காய்க் கூட்டு’