தமிழ் கொடு யின் அர்த்தம்

கொடு

வினைச்சொல்கொடுக்க, கொடுத்து

 • 1

  (கிடைக்கச் செய்தல் என்ற வழக்கு)

  1. 1.1 (ஒருவர் அல்லது ஒன்று குறிப்பிட்ட ஒன்றை) பெறுமாறு செய்தல்; (கடனாக, தானமாக, பரிசாக அல்லது அவற்றை ஒத்த பிற வகையில் ஒன்றை) அளித்தல்

   ‘என்னிடம் வெற்றிலை இருக்கிறது; பாக்கு இருந்தால் கொடு’
   ‘ஊர்மக்கள் கொடுத்த காணிக்கைகளைக் கொண்டு இந்தக் கோயில் கட்டப்பட்டது’
   ‘உழைப்பவர்களுக்கு உரிய ஊதியம் கொடுக்க வேண்டும்’
   ‘நீங்கள் கொடுக்கும் இரத்தம் ஓர் உயிரைக் காப்பாற்றும்’
   ‘சுவருக்குக் கொஞ்சம் சிமிண்டுப் பூச்சுக் கொடுக்க வேண்டும்’
   ‘அடிபட்ட இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கவும்’
   ‘நடிப்பதற்கான பயிற்சிகள் கூத்துப் பட்டறையில் கொடுக்கப்படுகின்றன’
   ‘ஒரு மொழியில் உள்ள ஒலிகளுக்கு நாம் கொடுக்கும் வரிவடிவம்தான் எழுத்து’
   ‘சென்னை வந்த தென்னாப்பிரிக்க வீரர்களுக்குப் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டது’
   ‘பத்து ரூபாய் தா. நாளைக்குக் கொடுத்துவிடுகிறேன்’
   ‘அவர்களின் புகைப்படங்களை அவர்களிடமே கொடுத்துவிட்டேன்’
   ‘சலவை செய்த துணிகளை வீடுவீடாகச் சென்று கொடுத்துவிட்டு வந்தான்’

  2. 1.2 (ஆடு, மாடு போன்றவை பால்) சுரத்தல்; (பயிர்) மகசூல் காணுதல்; (செடி, மரம் முதலியன காய், பழம் போன்றவற்றை) உற்பத்தி செய்தல்

   ‘இந்தப் பசு இரண்டு படி பால் கொடுக்கும்’
   ‘புது ரக நெல் ஏக்கருக்கு நாற்பது மூட்டை கொடுக்கும்’
   ‘எங்கள் வீட்டு மாமரம் நிறைய பழங்களைக் கொடுக்கும்’

  3. 1.3 (வரி, கட்டணம், விலை முதலியவற்றை) செலுத்துதல்

   ‘ஆங்கிலேய அரசுக்கு வரி கொடுக்க மறுத்துப் பல போராட்டங்கள் நடந்தன’
   ‘ஊசி போடுவதற்கு இருபது ரூபாய் கொடுக்க வேண்டும்’
   ‘வாடகை கொடுப்பதற்குக்கூடக் கையில் பணம் இல்லை’
   ‘கந்துவட்டிக்குப் பணம் வாங்கிப் படம் எடுத்தால் வட்டி கொடுத்து மாளாது’

  4. 1.4 (பெண்ணை) திருமணம் செய்துதருதல்

   ‘நான் ஏழை என்பதற்காக என் பெண்ணை இரண்டாம் தாரமாகக் கொடுக்க மாட்டேன்’
   ‘உன் பெண்ணை என் பையனுக்குக் கொடுப்பாயா?’

  5. 1.5 (ஒரு குறிப்பிட்ட நிலை, தன்மை, வாய்ப்பு முதலியவற்றை ஒன்றுக்கு அல்லது ஒருவருக்கு) அளித்தல்

   ‘வறுமையை அகற்றும் திட்டத்திற்கு முதல் இடம் கொடுக்க வேண்டும்’
   ‘சத்தியஜித் ராயின் படங்களில் சிறுசிறு விஷயங்கள்கூடக் காட்சிக்குப் பல புதிய பரிமாணங்களைக் கொடுக்கின்றன’
   ‘பெண் கல்விக்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்’
   ‘இந்த மைதானம் இதுவரை இந்திய அணிக்கு வெற்றியையே கொடுத்துவந்திருக்கிறது’
   ‘உருவம் கொஞ்சம் குள்ளமானாலும் முழங்கால்வரைக்கும் தொங்குகிற ஜிப்பாவும் கதர் வேஷ்டியும் பார்வைக்கு உயரமானவர்போல் தோற்றம் கொடுக்கும்’

  6. 1.6 (அடி, உதை அல்லது தண்டனை) பெறச் செய்தல்

   ‘இரண்டு அறை கொடுத்து அவனை இழுத்துக்கொண்டு வா’
   ‘தவறு செய்தவர்களுக்குச் சட்டம் தகுந்த தண்டனை கொடுக்கும்’

  7. 1.7 (ஒரு துறை, இலாக்கா போன்றவற்றின் அதிகாரத்தை ஒருவர்) பெறுமாறு செய்தல்; ஒதுக்குதல்

   ‘தமிழ்நாட்டு உறுப்பினர் ஒருவருக்கு நிதித்துறை கொடுக்கப்பட்டது’

  8. 1.8 (விற்பனை செய்தல் போன்ற முறையில் ஒன்றை ஒருவருக்கு) சேரச் செய்தல்

   ‘தியேட்டரில் மூன்றாம் வகுப்பு டிக்கெட் இன்னும் கொடுக்கவில்லை’
   ‘இந்திய விமானப்படைக்கு நவீன மின்னணுக் கருவிகளையும் பயிற்சி சாதனங்களையும் கொடுப்பதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது’

  9. 1.9 (குறிப்பிட்ட பணிக்காக ஒன்றை ஒருவரிடம்) ஒப்படைத்தல்

   ‘புத்தகத்தை அச்சுக்குக் கொடுத்தாயிற்று’
   ‘சட்டையைச் சலவைக்குக் கொடுக்க வேண்டும்’
   ‘துணியைத் தைக்கக் கொடுத்திருக்கிறேன்’

  10. 1.10 (முத்தம்) தருதல்

   ‘மாமாவுக்கு ஒரு முத்தம் கொடு பாப்பா’

 • 2

  (வெளிப்படுத்துதல், உருவாக்குதல் தொடர்புடைய வழக்கு)

  1. 2.1 (இன்பம், உற்சாகம் அல்லது தொல்லை, தொந்தரவு முதலியவை) உண்டாக்குதல்

   ‘உங்கள் பேச்சு மனத்திற்கு உற்சாகம் கொடுக்கிறது’
   ‘நான் யாருக்கும் தொல்லை கொடுக்க விரும்பவில்லை’
   ‘நல்ல புத்தகங்கள் படிப்பவர்களுக்குச் சலிப்பைக் கொடுக்காது’

  2. 2.2 (தகவல், சம்மதம், புகார், விளக்கம் முதலியவற்றை ஒருவரிடம்) தெரிவித்தல்; வெளிப்படுத்துதல்

   ‘வாக்குக் கொடுத்தால் அதிலிருந்து தவறக் கூடாது’
   ‘சுற்றுலா செல்வதற்கு அப்பா சம்மதம் கொடுத்துவிட்டார்’
   ‘தவறான தகவல் கொடுக்காதீர்கள்’
   ‘நீங்கள் கொடுத்த விளக்கம் எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை’
   ‘தன் கருத்தை விளக்க அவர் நிறைய எடுத்துக்காட்டுகளைக் கொடுத்திருக்கிறார்’
   ‘அவர் எனக்குக் கொடுத்த ஆதரவை மறக்க முடியாது’

  3. 2.3 (கட்டளை, ஆணை) இடுதல்

   ‘கட்சி மேலிடம் தனக்குக் கொடுத்த கட்டளையின்படி தான் ராஜிநாமா செய்யப்போவதாக அவர் கூறினார்’
   ‘எனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாக செய்து முடிப்பேன்’

  4. 2.4வேதியியல்
   (ஒரு செயல்பாட்டின் விளைவாக மற்றொன்றை) உண்டாக்குதல்

   ‘இரண்டு தனிமங்கள் சேர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட சேர்மங்களைக் கொடுக்கின்றன’
   ‘இரும்பும் கந்தகமும் குறிப்பிட்ட விகிதத்தில் சேர்ந்து இரும்பு சல்ஃபைடைக் கொடுக்கின்றன’

  5. 2.5 (குறிப்பிட்ட நிலை, படைப்பு முதலியவற்றை) உருவாக்குதல்

   ‘நிறைய வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் இவர்’
   ‘இந்தத் திட்டம் பத்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’
   ‘எல்லோருக்கும் எழுத்தறிவு கொடுக்கக்கூடிய திட்டங்களை அரசு செயல்படுத்தும்’

  6. 2.6 (பூ முதலியவை மணத்தை) வெளிப்படுத்துதல்

   ‘மல்லிகை நல்ல மணம் கொடுக்கும்’

 • 3

  (உள்ளே செல்லுமாறுசெய்தல் என்ற வழக்கு)

  1. 3.1 நுழைத்தல்; செருகுதல்

   ‘வாயில் விரலைக் கொடுத்து வாந்தியெடுத்தான்’
   ‘அண்டாவின் வளையங்களில் கம்பைக் கொடுத்துத் தூக்கினார்கள்’

  2. 3.2 (இரத்தம், பிராணவாயு முதலியவற்றை) உட்செலுத்துதல்

   ‘இவருக்கு உடனடியாகப் பிராண வாயு கொடுக்க வேண்டும்’
   ‘நோயாளிக்கு ஆறு பாட்டில் இரத்தம் கொடுக்க வேண்டும்’

  3. 3.3 (மருந்து, மாத்திரை முதலியவற்றை) உட்கொள்ளச் செய்தல்; (குழந்தை, நோயாளி போன்றோருக்குப் பால், சோறு முதலியவற்றை) உண்ண அளித்தல்; புகட்டுதல்

   ‘குழந்தைக்குச் சோறு கொடு!’
   ‘இரண்டு வயதாகும்வரை குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்தால் நல்லது’
   ‘நோயாளிக்கு நினைவு திரும்பும்வரை வாய்வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது’
   ‘மருத்துவர் கொடுத்த மாத்திரைகளைச் சாப்பிடாமல் இருந்தால் எப்படி வியாதி குணமாகும்?’

 • 4

  (இதர வழக்கு)

  1. 4.1 (ஒரு நூலில் சொற்கள், படங்கள் முதலியவற்றை) இடம்பெறச் செய்தல்

   ‘அந்த அகராதியில் அறிவியல் சம்பந்தமான புதிய சொற்கள் நிறையக் கொடுக்கப்பட்டிருந்தன’
   ‘இந்த அகராதியில் ‘அடி’ என்ற வினைச் சொல்லுக்கு 32 பொருள்கள் கொடுத்திருக்கிறார்கள்’
   ‘இந்தக் கையேட்டில் விளக்கத்தோடு நிறைய படங்களும் கொடுத்திருக்கிறார்கள்’

  2. 4.2 (திவசம், பலி போன்ற சடங்குகளை) நிகழ்த்துதல்

   ‘அம்மாவுக்குத் திதி யார் கொடுத்தது?’
   ‘ஆடு, மாடுகளைப் பலி கொடுப்பதைத் தடுக்கச் சட்டம்’

  3. 4.3 (வாகனங்கள் குறிப்பிட்ட அளவு எரிபொருளுக்குக் குறிப்பிட்ட தூரம்) ஓடுதல்

   ‘இந்த கார் லிட்டருக்கு எவ்வளவு கொடுக்கிறது?’

தமிழ் கொடு யின் அர்த்தம்

கொடு

துணை வினைகொடுக்க, கொடுத்து

 • 1

  முதன்மை வினை சுட்டும் செயல் பிறருக்காகச் செய்யப்படுகிறது என்பதைக் குறிப்பிடப் பயன்படுத்தும் துணை வினை.

  ‘அம்மாவிற்கு ஒரு குடம் தண்ணீர் எடுத்துக் கொடு’
  ‘அவருக்கு ஒரு வீடு வாங்கிக்கொடுத்தேன்’

 • 2

  நிலைமாற்றம் அடைவதைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் துணை வினை.

  ‘எவ்வளவோ அடித்தும் இரும்புத் தகடு வளைந்துகொடுக்கவில்லை’
  ‘பலமாக அழுத்தியதும் கம்பி நெளிந்துகொடுத்தது’