தமிழ் கேள் யின் அர்த்தம்

கேள்

வினைச்சொல்கேட்க, கேட்டு

 • 1

  (ஒன்றை வேண்டுதல் என்ற முறையில் உள்ள வழக்கு)

  1. 1.1 பதில், குறிப்பிட்ட தகவல் முதலியவற்றைச் சொல்லும்படி ஒருவரிடம் வினவுதல்; (கேள்வி) எழுப்புதல்

   ‘‘தாசில்தார் வீடு எங்கே இருக்கிறது?’ என்று எதிரே வந்தவரிடம் கேட்டான்’
   ‘அவருக்கு என்ன வேண்டும் என்று கேள்’
   ‘குழந்தைகள் ஓயாமல் கேள்வி கேட்பார்கள்’
   ‘கட்சித் தலைமையைக் குறித்து அவர் விமர்சித்ததைப் பற்றிப் பொதுக்குழுக் கூட்டத்தில் விளக்கம் கேட்கப்பட்டது’

  2. 1.2 (ஒன்றை) தருமாறு தெரிவித்தல்; கோருதல்

   ‘நீ என்னிடம் இதுவரை எதையுமே கேட்டதில்லை’
   ‘இளைஞர்கள் வேலை கேட்டுப் போராடுகிறார்கள்’
   ‘சமீபத்தில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பை எங்கள் புத்தகக் கடையில் நிறைய பேர் கேட்டு வாங்கிச் செல்கிறார்கள்’
   ‘மருத்துவர்களிடம் பாலியல் குறித்த ஆலோசனைகளைக் கேட்கப் பெரும்பாலோர் தயங்குகிறார்கள்’
   ‘நன்கொடை கேட்டு நான்கு பேர் நேற்று வந்திருந்தார்கள்’
   ‘கர்நாடகத்திடம் தண்ணீர் கேட்டு முதலமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறார்’

  3. 1.3 ஒருவருடைய அனுமதியைக் கோருதல்

   ‘என்னைக் கேட்காமல் ஏன் போனாய்?’
   ‘அப்பாவை கேட்டுவிட்டுதான் நாம் இதைத் தர முடியும்’

  4. 1.4 கண்டிக்கும் வகையில் பேசுதல்; கண்டித்தல்

   ‘இவ்வளவு அட்டூழியம் செய்பவனைக் கேட்க ஊரில் ஆள் இல்லையா?’
   ‘உன்னை அடித்தது யார் என்று சொல்; நான் கேட்கிறேன்’

  5. 1.5 (குறிப்பிட்ட நபரின் உடல்நலம் முதலியவற்றை ஒருவர் இன்னொருவர் மூலமாக) விசாரித்தல்

   ‘உங்களை அப்பா மிகவும் கேட்டார்கள்’

 • 2

  (செவிப்புலனுக்கு உரிய செயல்களாகக் கூறப்படும் வழக்கு)

  1. 2.1 (செவிப்புலன்) ஒலியை உணரும் வகையில் செயல்படுதல்

   ‘அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு காது நன்றாகக் கேட்கிறது’
   ‘அவருக்குச் சரியாகக் காது கேட்காது’

  2. 2.2 ஒலி, பேச்சு, இசை முதலியவை கவனத்தில் படும்படி செவிப் புலனால் உணர்தல்

   ‘இந்தப் பாட்டை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது’
   ‘மத ஒற்றுமையைப் பற்றிய அவருடைய சொற்பொழிவைக் கேட்க ஏராளமானோர் வந்திருந்தனர்’

  3. 2.3 (ஒலி, பேச்சு, இசை) காதில் படுதல்; செவிப்புலனால் உணரப்படுதல்

   ‘சப்தம் விட்டுவிட்டுக் கேட்டது’
   ‘வாகனங்களின் இரைச்சலில் நீ கூப்பிட்டது கேட்கவில்லை’

  4. 2.4 (ஒருவர் கூறுவதை, ஒருவரின் அறிவுரையைக் காதில் வாங்கி) கருத்தில் கொள்ளுதல்; ஏற்றுக்கொள்ளுதல்

   ‘நான் சொல்வதைக் கேள். இப்போது இந்த வீட்டை விற்க வேண்டாம்’
   ‘யார் சொல்வதையும் கேட்காதே. உனக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்!’

  5. 2.5அருகிவரும் வழக்கு (காதால் கேட்டு) கற்றல்; படித்தல்

   ‘நீங்கள் யாரிடம் கம்பராமாயணப் பாடம் கேட்டீர்கள்?’

 • 3

  (மரபு வழக்கு)

  1. 3.1பேச்சு வழக்கு (மருந்தினால் நோய்) கட்டுப்படுதல்

   ‘இந்தத் தைலத்தைத் தடவினால் தலைவலி கேட்குமா?’
   ‘எந்த மருந்துக்கும் வயிற்றுவலி கேட்கவில்லை’

  2. 3.2பேச்சு வழக்கு தேவைப்படுதல்; வேண்டியதாக இருத்தல்

   ‘உனக்கு அடி கேட்கிறதா?’
   ‘‘சாகப்போகும் வயதில் உங்களுக்கு இரண்டாம் கல்யாணம் கேட்கிறதா?’ என்று அந்த முதியவரைக் கிண்டல் செய்தான்’

  3. 3.3 (பெரும்பாலும் எதிர்மறை வாக்கியங்களில் அல்லது எதிர்மறைத் தொனியில்) (ஒன்றைச் செய்வதற்கு மனம்) இணங்குதல்; ஒப்புதல்

   ‘இவன் செய்த தவறுக்கு வேலையிலிருந்து நீக்கியிருக்க வேண்டும். ஆனால் மனம் கேட்கவில்லை’
   ‘குறும்பு செய்துவிட்டுச் சிரிக்கிற குழந்தையை அடிக்க மனம் கேட்குமா?’

  4. 3.4 கேள்விப்படுதல்

   ‘உன் அப்பாவைப் பற்றி நிறைய பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன்’
   ‘பல ஆட்களிடம் கேட்டதை வைத்துதான் உன்னைப் பற்றி நான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்’

  5. 3.5 (குறி, சோதிடம் ஆகியவற்றை ஒருவர் சொல்லி) தெரிந்துகொள்ளுதல்

   ‘காணாமல் போன மாட்டைக் கண்டுபிடிப்பதற்காகப் பூசாரியிடம் அப்பா குறி கேட்கப் போயிருக்கிறார்’
   ‘என் மகனுக்குச் சீக்கிரம் வேலை கிடைக்குமா என்று நேற்று ஜோசியம் கேட்டேன்’