தமிழ் கேள்வி யின் அர்த்தம்

கேள்வி

பெயர்ச்சொல்

 • 1

  பதிலை அல்லது தகவலை எதிர்பார்க்கும் (ஏன், எதற்கு, யார் போன்ற வார்த்தைகளைக் கொண்ட) வாக்கியம்.

  ‘அவர் ஏன் என்னை வரச்சொன்னார் என்ற கேள்வி என்னைக் குடைந்துகொண்டிருந்தது’
  ‘நாம் எதற்காகப் பிறந்தோம் என்ற கேள்விக்கு யாரால் பதில் சொல்ல முடியும்?’

 • 2

  தேர்வில் திறமையைக் கணிக்க எழுத்து வடிவிலோ வாய்மொழியாகவோ கேட்கப்படுவது; வினா.

  ‘ஒரு கேள்விக்குப் பதில் எழுத நேரமில்லை’
  ‘இந்தக் கேள்விக்குச் சரியாகப் பதில் எழுதினால் பத்து மதிப்பெண்கள் கிடைக்கும்’

 • 3

  (அநீதியை, தவறான அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றை) கண்டித்து எழுப்பும் குரல்.

  ‘விலைகளை ஏற்றிக்கொண்டே போகிறார்கள். கேள்வி கேட்பார் இல்லையா?’

 • 4

  குறிப்பிட்ட ஒன்று பிறர் மூலம் கேட்டு அறிந்தது அல்லது கேள்விப்பட்டது என்பதைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்.

  ‘நான் நேரில் பார்த்ததில்லை; கிராமத்தில் சொல்லக் கேள்வி’
  ‘அவருக்கு இரண்டு வீடு இருப்பதாகக் கேள்வி’

 • 5

  (ஒன்றை அல்லது ஒருவரைக் குறித்த) சந்தேகம்.

  ‘அமைச்சருடைய திடீர் ராஜினாமா பல கேள்விகளை எழுப்பியுள்ளது’

 • 6

  (ஏலத்தில்) குறிப்பிட்ட விலைக்கு ஒரு பொருளைக் கேட்டல்/(ஏலச் சீட்டில்) குறிப்பிட்ட தொகைக்குச் சீட்டு எடுக்கும் விருப்பம்.

  ‘கேள்வி குறைந்ததால் பஞ்சு விலை ரூபாய் இருபத்தைந்துவரை குறைந்துவிட்டது’
  ‘ஏலம் விடுபவர் இறுதியாக எல்லோரையும் ஒரு முறை பார்த்துவிட்டு ‘வேறு கேள்வி ஏதாவது உண்டா?’ என்று கேட்டார்’