கொள் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொள்1கொள்2

கொள்1

வினைச்சொல்கொள்ள, கொண்டு

 • 1

  (அளவை, பரப்பை நிரப்புதல் என்னும் வழக்கு)

  1. 1.1 (ஒன்றை ஒரு பரப்பு, பாத்திரம் போன்றவை) ஏற்றல்; பிடித்தல்/(ஓர் இடம்) போதுமானதாக இருத்தல்

   ‘இந்தப் பாத்திரம் ஒரு படி அரிசி கொள்ளுமா?’
   ‘வயிறு கொள்ளும் மட்டும் சாப்பிடு!’
   ‘வீடு கொள்ளாத அளவுக்கு விருந்தினர்கள்’
   ‘வாய் கொள்ளாத அளவுக்குச் சர்க்கரையை அடக்கிக்கொண்டு அந்தக் குழந்தை ஓடியது’

  2. 1.2 (தன்னிடத்தில்) உள்ளடக்கியிருத்தல்

   ‘இருபது மாவட்டங்களைக் கொண்ட இந்த மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது’
   ‘பத்தே வீடுகள் கொண்டது இந்தத் தெரு’
   ‘நான் எழுதப்போகும் நாவல் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்’

  3. 1.3 (எதிர்மறையில் மட்டும்) (உறக்கம்) வருதல்

   ‘ஊர்ச் சத்தமெல்லாம் அடங்கிய பிறகும் அவன் உறக்கம் கொள்ளாமல் புரண்டான்’
   ‘சாப்பிட்டுவிட்டுப் படுத்தவளுக்குத் தூக்கம் கொள்ளவில்லை’

 • 2

  (மனத்தில் வாங்குதல் என்னும் வழக்கு)

  1. 2.1 (மனத்தில், கருத்தில்) வைத்தல்

   ‘எல்லா நிலைமைகளையும் மனத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்’
   ‘மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்’
   ‘கட்டுரை எழுதும்போது இந்தச் செய்தியை நினைவில் கொள்வது நல்லது’
   ‘உணவுச் சத்தூட்டக் கொள்கை மூன்றாம் உலக நாடுகளின் தேவைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’

  2. 2.2 (குறிப்பிட்ட முறையில் ஒன்றை) ஏற்றுக்கொள்ளுதல்

   ‘வரலாற்று ஆசிரியர்கள் நினைவுக் குறிப்புகளை வரலாற்றுக்கு முதல் சான்றாகக் கொள்வதில்லை’
   ‘அவர் சொல்வதையெல்லாம் உண்மை என்று கொள்ள முடியாது’

  3. 2.3 (இன்னது அல்லது இப்படியானது என்று) கருதுதல்

   ‘அரசாங்கத்தில் பகுதிநேர ஊழியர்களாகப் பணிபுரிபவர்களையும் பொது ஊழியர் என்றே கொள்ள வேண்டும்’
   ‘இவற்றை வெற்று ஆரவாரம் என்று கொள்ளலாமா?’
   ‘கூர்மையான நாசியே அழகின் அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது’

 • 3

  (உடையதாக இருத்தல் என்னும் வழக்கு)

  1. 3.1 பெற்றிருத்தல்

   ‘இரட்டைத்தலை கொண்டு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது’
   ‘இந்தப் பத்திரிகை ஒரு அரசியல்வாதியை ஆசிரியராகக் கொண்டது’
   ‘ஆங்கிலேயர் முதலில் கொல்கத்தாவைத் தலைநகராகக் கொண்டிருந்தனர்’

  2. 3.2 (பெண்ணை) எடுத்தல்; மணத்தல்

   ‘நல்ல குடும்பத்தில் மகனுக்குப் பெண் கொண்டோம்’
   ‘பெண் கொண்ட இடமும் கொடுத்த இடமும் பிரச்சினை இல்லாத இடங்கள்’

  3. 3.3 (ஒருவரைக் குறிப்பிட்ட உறவுமுறையில்) ஏற்றல்

   ‘அவர் ரமணரைக் குருவாகக் கொண்டார்’
   ‘உன்னை நண்பனாகக் கொள்வதில் பெருமை அடைகிறேன்’

  4. 3.4 (உயிர்) பெறுதல்

   ‘உயிர் கொண்ட ஓவியம்போல் இருந்தாள்’

  5. 3.5 (குறிப்பிடப்படும் உணர்ச்சியை அல்லது நிலையை) அடைதல்

   ‘சிறு வயதிலேயே இசை கற்பதில் அவர் ஆவல் கொண்டார்’
   ‘தந்தையை மனவருத்தம் கொள்ளும்படி செய்துவிட்டாயே!’
   ‘உலக நாடுகள் பொறாமை கொள்ளும் அளவுக்கு ஜப்பான் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது’
   ‘நாட்டின் மேல் கொண்ட பற்று’
   ‘என் மேல் அன்பு கொண்டவர்’
   ‘இளம் வயதிலேயே ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டார்’
   ‘அவனுடைய தோற்றம் பார்ப்பவரை இரக்கம் கொள்ளவைத்தது’

  6. 3.6உயர் வழக்கு (குறிப்பிட்ட எண்ணம், நினைவு போன்றவை) தோன்றுதல்

   ‘இவ்வளவு பட்டும் இன்னும் தனக்குப் புத்திவரவில்லையே என்ற எண்ணம் கொண்டார்’

  7. 3.7 (உறுதி, இலட்சியம் போன்றவற்றை) மேற்கொள்ளுதல்

   ‘இந்தியா சுதந்திரம் பெறுவதை காந்தி தனது இலட்சியமாகக் கொண்டார்’
   ‘ஏழை மக்களுக்கு மருத்துவம் செய்வதையே தனது நோக்கமாகக் கொண்டவர் அவர்’

 • 4

  (மரபு வழக்கு)

  1. 4.1 (உடலுறவில்) ஈடுபடுதல்

   ‘‘ஒருவனுக்கு ஒருத்தி என்பதை மறந்து பலருடன் உடலுறவு கொள்வது ஆபத்தானது’ என்றார் அவர்’

கொள் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொள்1கொள்2

கொள்2

துணை வினைகொள்ள, கொண்டு

 • 1

  ஒரு செயலைச் செய்பவரே அதன் பலனைப் பெறுபவர் அல்லது அனுபவிப்பவர் என்பதை உணர்த்தவோ, ஒரு செயலை ஒருவருக்காக இன்னொருவர் செய்தாலும் தானே செய்தது போல் குறிப்பதை உணர்த்தவோ முதல் வினையுடன் இணைக்கப்படும் துணை வினை.

  ‘அவன் கீழே விழுந்து காலை முறித்துக்கொண்டான்’
  ‘காய்கறி நறுக்கும்போது விரலை வெட்டிக்கொண்டாள்’
  ‘அவன் கண்ணாடியில் ஒரு முறை பார்த்துக்கொண்டான்’
  ‘அவர் ஒரு சட்டை வாங்கிக்கொண்டார்’
  ‘அவமானம் தாங்காமல் தூக்குப்போட்டுக்கொண்டார்’
  ‘யானை மணலை வாரித் தலையில் போட்டுக்கொண்டது’
  ‘அவர் கொடி தினத்திற்காக என்னிடம் பணம் பெற்றுக்கொண்டார்’
  ‘என்னுடைய வலது கால் வீங்கிக்கொண்டது’
  ‘சாப்பாட்டை வைத்துவிட்டுப் போ; நானே போட்டுக்கொள்கிறேன்’
  ‘மாமா தனியே ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டார்’
  ‘இன்று முடிவெட்டிக்கொள்ளப்போகிறேன்’

 • 2

  இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கும் ஒரு செயலின் விளைவு அச்செயலில் ஈடுபட்டுள்ள அனைவரையும் உள்ளடக்குவதைக் குறிப்பதற்கு முதல் வினையுடன் இணைக்கப்படும் துணை வினை.

  ‘வியாபாரத்தில் கிடைத்த லாபத்தைப் பங்குதாரர்கள் இருவரும் சமமாகப் பிரித்துக்கொண்டார்கள்’
  ‘நண்பர்களாக இருந்துகொண்டு நீங்கள் இப்படி அடித்துக்கொள்ளலாமா?’
  ‘எல்லைப் பிரச்சினையை முன்வைத்து இரண்டு நாடுகளும் போரிட்டுக்கொண்டன’

 • 3

  ஒரு செயலின் தொடர்ச்சியைக் காட்டுவதற்கு ‘இரு’ என்னும் துணை வினையோடு இணைந்து ‘கொண்டிரு’ என்னும் வடிவில் முதல் வினையுடன் இணைக்கப்படும் துணை வினை.

  ‘நேற்று இன்னேரம் நான் படம் பார்த்துக்கொண்டிருந்தேன்’
  ‘சாப்பிட்டுக்கொண்டிருக்கும் அப்பாவைத் தொந்தரவு செய்யாதே’
  ‘நாளை உனக்காக நான் காத்துக் கொண்டிருப்பேன்’
  ‘நீ சொல்வதை நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்’
  ‘புல்வெளியில் மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன’

 • 4

  ஒரே நேரத்தில் இரண்டு செயல்கள் நிகழ்வதைக் குறிப்பதற்கு முதல் செயலைக் குறிக்கும் முதல் வினையுடன் இணைக்கப்படும் துணை வினை.

  ‘சாப்பிட்டுக்கொண்டே தொலைக்காட்சி பார்ப்பது அவர் வழக்கம்’
  ‘அவன் பாடிக்கொண்டு நடந்தான்’
  ‘நாய் குரைத்துக்கொண்டே ஓடுகிறது’